சிவகங்கை: சிவகங்கை அருகே வில்லிப்பட்டியில் கிராம இளைஞர்களே நுாலகம் நடத்தி வருகின்றனர்.
மேலப்பூங்குடி ஊராட்சி வில்லிப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. கிராம இளைஞர்களுடன் இணைந்து 2012 ல் அக்கிராமத்தில் நுாலகத்தை ஏற்படுத்தினார். அவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்ட நிலையிலும் மற்ற இளைஞர்கள் நுாலகத்தை நடத்தி வருகின்றனர். ஊராட்சிக்கு சொந்தமான பழைய ரேடியோ அறையில் செயல்படுகிறது. முதற்கட்டமாக நாளிதழ், வார இதழ்களை மட்டும் வாங்கி வந்தனர். 2014 ல் பலரது உதவியோடு புத்தகங்கள் வாங்கப்பட்டன. வில்லிப்பட்டி, அழகம்பட்டியைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவர், இளைஞர்கள் வாசகர்களாக உள்ளனர். தற்போது 300 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. கட்டடம் சேதமடைந்ததால் புத்தகங்களை ஒருவரது வீட்டில் வைத்துள்ளனர்.அலைபேசியில் ராஜா கூறுகையில், ''2012 ல் ஆட்டோ டிரைவராக இருந்தேன். 'தினமலர்' விரும்பி படிப்பேன். நாளிதழ்களை அனைவரும் படிப்பதற்காக இளைஞர்களுடன் இணைந்து நுாலகத்தை ஏற்படுத்தினேன். கட்டட வசதி இல்லாததால் விரிவுபடுத்த முடியவில்லை,'' என்றார்.