காங்கிரசுடன் த.மா.கா., இணையுமா?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்கிரசுடன் த.மா.கா., இணையுமா?

Added : ஜூலை 08, 2018 | கருத்துகள் (4)

தி.மு.க., கூட்டணியில், த.மா.கா., இடம் பெறுமா அல்லது காங்கிரசுடன் இணையுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.
வரும் லோக்சபா தேர்தலை சந்திக்க, தமிழக கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. 5ம் தேதி, சென்னை, அறிவாலயத்தில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், முன்னாள், எம்.பி., -டி.கே.ரங்கராஜன் சந்தித்து பேசினர்.


சாதகமான வாய்ப்பு



அப்போது, தி.மு.க., தலைமையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைவது குறித்து, ஆலோசனை நடத்தினர். அப்போது பேசப்பட்ட விஷயம் பற்றி, தி.மு.க.,வினர் கூறியதாவது:பிரதமர் பதவிக்கு, ராகுல் தலைமையை, எதிர்க்கட்சிகள் ஏற்க வேண்டும்.ஆனால், பிரதமர் பதவிக்கு சரத்பவார், மாயாவதி, நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜி, முலாயம்சிங் யாதவ், சந்திரபாபு நாயுடு, தேவகவுடா போன்றவர்கள் ஆசைப்படுகின்றனர்.

எதிர்கட்சிகளிடம் காணப்படும் ஒற்றுமையின்மையை, பா.ஜ., சாதகமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த, சில கட்சிகள், ஒவ்வொன்றாக விலகி வருகின்றன. குஜராத், கர்நாடக சட்டசபை தேர்தலில், பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு இணையாக, ராகுலின் பிரசாரம் இருந்தாலும், காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியவில்லை.எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளையும், நாம் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதற்கு, குஜராத், கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவே எடுத்துக்காட்டு.

தி.மு.க., தலைமையில், காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகளுடன், தே.மு.தி.க., - பா.ம.க., - த.மா.கா., - அ.ம.மு.க., மற்றும் மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகளை எல்லாம் இணைத்து, 'மெகா' கூட்டணி அமைக்க வேண்டும் என்ற ஆலோசனையை, கம்யூனிஸ்ட் தலைவர்கள், ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இணைய சம்மதம்

இதற்கிடையில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர், த.மா.கா.,வை சேர்ந்த ஒரு தலைவரிடம், 'அ.தி.மு.க.,வுடனோ, ரஜினி கட்சியுடனோ, நீங்கள் சென்று விட வேண்டாம். 'பொறுமையாக இருங்கள். காங்கிரஸ் கட்சியுடன் சேர்த்து உங்களையும், நாங்கள் சேர்த்துக் கொள்கிறோம்' என, வாக்குறுதி அளித்துள்ளார்.இதற்கிடையில், 'பிரிந்து சென்ற தலைவர்கள் எல்லாம், மீண்டும் காங்கிரசில் சேர வாருங்கள்' என, ராகுல் அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று, ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மீண்டும் காங்கிரசில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதேபோல, தமிழக காங்கிரசில், த.மா.கா.,வையும் இணைக்க வேண்டும் என, ராகுல் விரும்புகிறார்.தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, புதிய மேலிட பொறுப்பாளரை நியமித்த பின், காங்கிரஸ் - த.மா.கா., இணைப்பு பேச்சு துவக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இணைப்புக்கு பின், வாசனுக்கு, அகில இந்திய பொதுச்செயலர் பதவி அல்லது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி வழங்க, டில்லி மேலிடம் பச்சைக் கொடி காட்டியுள்ளது.

அதனால் தான், மாதத்திற்கு இரண்டு, மூன்று முறை, டில்லிக்கு வாசன் வருகிறார் என, டில்லியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.காங்கிரஸ் - த.மா.கா., இணைப்பை, மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன் உட்பட சிலர் விரும்புகின்றனர். ஆனால், பொருளாளர் கோவை தங்கம் போன்ற சிலர் விரும்பவில்லை. எனவே, தி.மு.க., கூட்டணியில், த.மா.கா., இடம்பெறுமா அல்லது காங்கிரசுடன் இணையுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X