தஞ்சாவூர்:தஞ்சை அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு உணவு வழங்க, அரசு டாக்டர் காய்கறித் தோட்டம் அமைத்துஉள்ளார்.
தஞ்சாவூர், செருவாவிடுதியில் அமைந்துள்ளது அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.நோயாளிகள் மருத்துவமனைக்கு வரும்போதே, நோய்கள் போய்விட்டதாக எண்ணத்தை உருவாக்கும் வகையில், பசுமையான மரங்கள் நிறைந்த வளாகத்தில், இந்த சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. 1968ம் ஆண்டு துவங்கப்பட்ட செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம், 2014ல் ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்றது.
அரசு மருத்துவமனையை, இந்தளவுக்குத் தரம் உயர்த்தியதில் டாக்டர் சவுந்தரராஜனின் பங்கு மிக முக்கியமானது. இங்கே, 1992ல் டாக்டராக பணியமர்த்தப்பட்டார்.பின், அருகிலுள்ள சுகாதார நிலையங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு, மீண்டும், செருவாவிடுதி சுகாதார நிலைய டாக்டராகவும், பேராவூரணி வட்டார டாக்டராகவும் பணியமர்த்தப்பட்டார்.
இங்கு வந்த புதிதில், செருவாவிடுதி சுற்றுவட்டாரத்தில் சிசு மரணங்களின் எண்ணிக்கையும், பிரசவத்தின் போது உயிரிழக்கும் கர்ப்பிணிகள் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.இது
குறித்து ஆய்வு செய்த சவுந்தரராஜன், கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் சத்தான உணவு சாப்பிட முடியாத வறுமையே இதற்குக் காரணம் என கண்டறிந்தார்.
இதையடுத்து, இரும்புச் சத்து நிறைந்த மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து ஓரளவுக்கு இறப்புகளைத் குறைத்தார். இத்தோடு நிறுத்திக் கொள்ளாத இவர், கர்ப்பிணிகளுக்கு வாரம் ஒரு
முறையாவது இயற்கையான சத்துணவு வழங்க வேண்டும் என முடிவு செய்தார்.
இதையடுத்து, மருத்துவனை வளாகத்திலே கர்ப்பிணிகளுக்காக, தனியாக ஒரு ஏக்கரில் காய்கறி தோட்டத்தை அமைத்து, இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி, கத்திரிக்காய், வெண்டை, புடலை, தக்காளி, துவரை என முக்கிய சத்துகள் நிறைந்த காய்கறிகளையும் சாகுபடி செய்துள்ளனர்.தென்னை மரம் வைத்து, அதிலிருந்து தேங்காய், எண்ணெய் என அனைத்தையும் பயன் படுத்திக் கொள்கின்றனர். வாரத்தில் செவ்வாய்கிழமை தோறும், அப்பகுதியில் உள்ள கர்ப்பிணிகளை வரவழைத்து, உணவுகளை சமைத்து வழங்கி வருகின்றனர்.
தற்போது சிசு மரணங்களின் எண்ணிக்கையும், பிரசவத்தின் போது உயிரிழக்கும் கர்ப்பிணிகள் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளதாக டாக்டர் சவுந்தரராஜன் தெரிவித்தார்.