இது உங்கள் இடம் | Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

Added : ஜூலை 08, 2018 | கருத்துகள் (4)
இது உங்கள் இடம்


கமல் பூணுால் போடவில்லை என யார் அழுதது?

பீம சத்தியநாராயணன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வேதாளம் முருங்கை மரம் ஏறிய விக்கிரமாதித்தன் கதை போல்' திடீரென, ஹிந்து மத எதிர்ப்பையும், பிராமண துவேஷத்தையும் கொட்டி இருக்கிறார், நடிகர் கமல்.

'நான், பூணுால் மட்டும் அணிய மறுத்தவன்' என, விதண்டாவாதம் பேசி இருக்கிறார். இவர், பூணுால் அணியவில்லை என, யார் அழுதனர்... பல பிராமணர்கள் பூணுால் அணிவதில்லை; அவர்கள் எல்லாம், நாளிதழ்களில் இவ்வாறு பேட்டி கொடுத்தது உண்டா?

'நான் பூணுால் அணிய மறுத்தேன்' என, 'டுவிட்டர்' பதிவு மூலம் யாரை, கமல் திருப்திப்படுத்த முயல்கிறார் என, தெரியவில்லை. இவரால், திராவிட கட்சியினரின் முழு நம்பிக்கையை வெல்ல முடியாது. அவர்களை பொறுத்தவரை, இவர் பூணுால் போட்டாலும் சரி; போடாவிட்டாலும் சரி... இவர் பிராமணர் தான்! அவருக்கு அந்த முத்திரை தான் கிடைக்கும்.

பாரதிதாசனை பாராட்டும் அளவுக்கு, மகாகவி பாரதியை, திராவிட கட்சியினர் பாராட்ட மாட்டார்கள். தி.மு.க.,வை ஆட்சியில் ஏற்றி அமர வைத்த, ராஜாஜியையே, பின்னாளில் துாற்றியவர்கள் இவர்கள் என்பது, கமலுக்கு தெரியாதா?

தமிழகத்தில், பிராமண எதிர்ப்பு இருந்தாலும், பிராமணர் ஆதரவின்றி, ஆட்சி அமைக்க முடியாது என்பது, திராவிட கட்சிகளுக்கே தெரியும். பிராமண எதிர்ப்பாலும், தி.மு.க.,வின் ஆதரவுடனும் போட்டியிட துடிக்கும் கமலுக்கு, இரண்டொரு, எம்.எல்.ஏ., சீட்கள் கிடைத்தாலும் கிடைக்கும்!

பிராமண எதிர்ப்பையும், ஹிந்து விரோதத்தையும் தொடர்ந்து பறை சாற்றினால், கமலுக்கு இருக்கும், கொஞ்ச நஞ்சம் மரியாதையும் போய் விடும்!

---


யோகி எழுப்பிய கேள்விக்கு விடை தேடும் ஆணையம்!

எஸ்.கண்ணன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பா.ஜ.,வைச் சேர்ந்த, உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே' என்ற தலைப்பில், வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். அதில், 'காசி, ஹிந்து பல்கலையில், தலித், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு உள்ளது. அதே போல், உ.பி.,யில் உள்ள, அலிகார் முஸ்லிம் பல்கலையிலும், டில்லியில் உள்ள, ஜாமியா மில்லியா பல்கலையிலும், தலித், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரப்படவில்லை.

'இதை தட்டிக் கேட்க, எதிர்க் கட்சிகளுக்கு தைரியம் உண்டா என, யோகி ஆதித்யநாத் கேட்டார்; அதற்கு, அலிகார் முஸ்லிம் பல்கலை தரப்பில் பதில் தெரிவிக்கவில்லை' என, குறிப்பிட்டு உள்ளார். யோகி கேட்ட கேள்வியை, உ.பி., மாநில, எஸ்.சி., - எஸ்.டி., ஆணையம் தற்போது கேட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுப்பது தொடர்பாக, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் பதில் அளிக்க வேண்டும் என, உ.பி., மாநில, எஸ்.சி., - எஸ்.டி., ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

நோட்டீசில், 'அலிகார் பல்கலை சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனம் அல்ல; இட ஒதுக்கீட்டின் பலன்களை, எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு வழங்க முடியாதது ஏன்?' என, ஆணையம் கேட்டுள்ளது. 'இதர மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் போல், அலிகார் பல்கலையும், மத்திய அரசின் சட்டத்தின்படி, அதன் நிதியுதவியுடன் இயங்கும் கல்வி நிறுவனம் தான். எனவே, அந்த பல்கலையில், இட ஒதுக்கீடு வழங்கியாக வேண்டும்' எனக் கூறியுள்ளது.

முஸ்லிம், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களிலும், அரசின் விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். மதத்தை காரணம் காட்டி, சலுகை பெறவோ, அரசு தலையிடக் கூடாது என்றோ கூறக் கூடாது என, வாசகர் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் கருத்து ஏற்கத்தக்கது! சிறுபான்மையினர் எனக் கூறி, எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தராத பல்கலைக்கு சரியான பாடத்தை, உச்ச, உயர் நீதிமன்றங்கள் கற்பிக்க வேண்டும்!

---


கோர்ட் அக்கறை; காவலர்களுக்கு இனி சர்க்கரை!

என்.கந்தசாமி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜனாதிபதி, பிரதமர் போன்றோர், தமிழகத்திற்கு வருகை தந்தால் போதும்; ஒரு வாரத்திற்கு, போலீஸ் அதிகாரிகள் நிம்மதியாக வீட்டில் துாங்க முடியாது. சுட்டெரிக்கும் வெயிலிலும், கொட்டும் பனியிலும் பணியாற்ற வேண்டும்.

ஆங்கிலேயர் காலத்திலிருந்தே, போலீஸ்காரர்கள் இப்படித் தான் வாடி வதங்க வேண்டும் என, விதிகள் விதிக்கப் பட்டிருக்கின்றன. கைதிகளை நம்பர் சொல்லி அழைப்பது போல், போலீஸ்காரர்களையும் நம்பர் சொல்லி அழைக்கும் வழக்கம், இன்னும் புழக்கத்தில் உள்ளது. போலீஸ் துறையில், மாற்றம் செய்ய வேண்டும் என கருதினால், நிறைய செய்ய வேண்டும். இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்பதால் தான், அரசும், உயர் அதிகாரிகளும் விட்டு விட்டனர் போலும்!

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுக்கு, சலாம் போட்டு சேவை செய்ய வேண்டும் என்பது, போலீஸ்காரர்களுக்கே எழுதப்படாத விதி! போலீசாரின் நலனில் அக்கறை எடுத்துள்ள, சென்னை உயர் நீதிமன்றம், 'வேலை பளு காரணமாக போலீஸ்காரர்களுக்கு, வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு கொடுப்பது பற்றி அரசு பரிசீலனை செய்ய வேண்டும்' என, யோசனை வழங்கிஉள்ளது.

'போலீஸ்காரர்களுக்கு விடுப்பு வழங்கினால், தங்கள் குடும்பத்தினருடன், கவலைகள் மறந்து, டென்ஷன் இன்றி, மகிழ்ச்சியாக வாழ வழி பிறக்கும். தற்கொலை எண்ணம் வராது' என, உயர் நீதிமன்ற நீதிபதி விளக்கம் அளித்துள்ளார். பாவப்பட்ட ஜென்மங்கள் என, நாட்டில் சில துறைகளில் மட்டும் பணியாளர்கள் உள்ளனர். போக்குவரத்து, தொலைத்தொடர்பு, ராணுவம், மருத்துவம் போன்ற துறை ஊழியர்கள், சந்தோஷம் அனுபவிப்பதிலிருந்து விலக்கு பெற்றவர்கள்.

இவர்கள், வாழ்க்கையில் எந்த சந்தோஷமும் அனுபவிக்கக் கூடாது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூட, பணி செய்ய வேண்டும். மற்ற அரசு துறை அலுவலகங்களை மூன்று நாட்கள் தொடர்ந்து மூடினாலும், நாடு நாசமாகி விடாது. நீதிமன்ற உத்தரவுகளால், போலீஸ்காரர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படும் என்றால், அனைவருக்கும் சந்தோஷம் தான்!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X