இது நல்ல அறிகுறி!| Dinamalar

இது நல்ல அறிகுறி!

Added : ஜூலை 09, 2018

நம் நாட்டின் மக்கள் தொகையில், 60 கோடி பேர், தங்களுக்கு தேவைப்படும் தண்ணீர் இன்றி சிரமப்படுகின்றனர். மத்திய அரசின், 'நிடி ஆயோக்' அளித்த தகவல்கள், அச்சம் தருபவை என்றாலும், தண்ணீர் தேவை அளவு அதிகரிக்கும் அல்லது பயன்படுத்த முடியாத, அசுத்த தண்ணீர் அதிகரிக்கும் என்பது, சிறப்பு தகவலாக வெளியாகி உள்ளது.தமிழில், 'மிக்க பெயல்; பெயலின்மை' என்பது, நீண்டகாலமாக இலக்கியத்தில் உள்ள வார்த்தைகள். அளவுக்கதிக மழையால் வரும் அழிவு அல்லது ஆண்டுக்கணக்கில் மழையின்றி பஞ்சம் தொடர்வது என்பது உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நம் மக்கள் தொகை, 100 சதவீதம் அதிகரித்துள்ளது. நதிகளை நம்பி வாழும் வாழ்க்கை முறை மாறிவிட்டது.பருவமழை சில பகுதிகளில், வழக்கமான அளவு பெய்ததாக கணக்கெடுப்பு இருந்தாலும், தண்ணீர் பற்றாக்குறை என்பது பல நகரங்களில் தொடர்கிறது. வெயில் காலம் தொடங்கினால், பற்றாக்குறை அதிகரிக்கிறது. இப்போது, குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் வழக்கம் பழகி விட்டது. அத்துடன், தினசரி ஒரு நபருக்கு குறைந்த பட்சம் தேவைப்படும், 100 லிட்டர் தண்ணீரை, தினமும் பணம்செலவழித்து வாங்கும் போது, அது ஒரு பிரச்னையாகிறது.மேலும், தண்ணீர் பாதிப்பால் ஏற்படும் நோய்களால், நாட்டில் ஆண்டுதோறும், இரண்டு லட்சம் பேர் இறக்கின்றனர். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உட்பட, பல நோய்கள் வரக்காரணமாகிறது. தேவையான தண்ணீரை மக்களுக்கு வழங்க, நாட்டின் மொத்த வளர்ச்சித் தொகையில், 6 சதவீதம் செலவாகும் என்கிறது, ஒரு புள்ளிவிபரம். ஆனால், மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள நிலைமைக்கு ஏற்ப, அவரவர் செலவழிக்கும் நிதி, அல்லது மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கும் பணம் என்பது நிலையான வரம்பிற்குள் உள்ளதா என்பதை மதிப்பிட முடியாது. மற்றும் விவசாயத்திற்கு என, பயன்படுத்தும் தண்ணீர் தேவையை சிக்கனமாக கையாளும் நடைமுறைகள் அல்லது பயிர்களுக்கு தேவைப்படும் தண்ணீரால், நிலத்தடி நீரை சுரண்டுவது குறைய, மாவட்ட வாரியாக தனிப்புள்ளி விபரம் தேவை.
தமிழகத்தில் உள்ள, கோவை வேளாண் பல்கலைக்கழகம், நெல் பயிருக்கு தேவைப்படும், மொத்த தண்ணீர் அளவில், 30 சதவீதம் சேமிக்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது.பிலிப்பைன்ஸ், வியட்நாமில் நடைமுறையில் அமைந்த, 'ஒரு சொட்டு நீருக்கு அதிக நெல்மணிகள்' என்று இதற்கு பெயர். அமலாக்கம் அதிகம் இல்லை. மஹாராஷ்டிராவில் கரும்புப் பயிர் விளைச்சலில், தண்ணீர் சேமிப்பு முறை அமலாகி வருகிறது. இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில், 2016 - 2017ம் ஆண்டில், தண்ணீர் சிக்கனத்துடன் பயிரிடும், 313 வகையான பயிர்களை பட்டியலிட்டிருக்கிறது. இவைகளை அந்தந்த மாநிலங்கள் ஆய்வு செய்து அமல்படுத்தாத பட்சத்தில், விவசாயத்தில், நீர்ப்பங்கீடு என்பது தீராத பிரச்னையாகும். இவை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்ட, 'நிடி ஆயோக்' விரைவில், 'தண்ணீர் நிர்வாக அளவீடு' என்ற கோட்பாட்டின் மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஒரு கணக்கீடு தயாரிப் பு தேவை என்றும், பரிந்துரைத்திருக்கிறது. இது, மாநிலங்களின் ஆதரவுடன் எவ்வளவு விரைவாக பரிசீலிக்கப்பட்டு தண்ணீர் தேவை மற்றும் அதனை நிர்வகிக்கும் நடைமுறை வரும் என்பதை, இப்போது கூற முடியாது. மத்திய அரசின் கீழ், நீர் ஆதாரங்களின் பல்வேறு விஷயங்களை ஆராயும், 'மத்திய தண்ணீர் கமிஷன்' என்ற அமைப்பு இருக்கிறது. இதன் தலைவராக உள்ள, மசூத் உசைன், இந்தியாவில் இத்துறை குறித்து முழுவதும் அறிந்தவர்.இந்தியாவில் உள்ள, 91பெரிய அணைகள் மற்றும் ஓரளவு சிறிய அணைகள் பற்றிய புள்ளி விபரங்கள் அவருக்கு அத்துபடி. அவர் சில விஷயங்களை கூறியது வியப்பளிக்கும் விஷயமாகும். இருக்கும் அணைகளில் மழைநீர் வரத்தை முறையாக பாதுகாக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்ததும், 'இந்த ஆண்டில் சரியாக மழை இல்லை' என்று பேசுவது மட்டும் சரியல்ல' என்கிறார். சிறிய அணை அல்லது தண்ணீர் சேமிப்பில், நச்சு அல்லது மாசு இல்லாத நடைமுறை, விண்வெளி தொழில்நுட்பம் மூலம் நீர் சேமிப்பு பாதுகாப்பு வழிகள் ஆகியவற்றை கையாளாமல், தண்ணீர் குறித்த வாக்குவாதம் அல்லது மோதல் போக்குகள் பயன் தராது என்பதும் இவர் கருத்து.

வீடுகளில் மழைநீர் சேகரிப்பு உட்பட பல சிறிய திட்டங்கள் தரும் நன்மைகள் வேறு விஷயம்.இவற்றைப் பார்க்கும் போது தண்ணீர் குறித்த, 'விஞ்ஞான நோக்கு' வருவது, நல்ல அறிகுறியாகும்.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X