அமோகமா நடக்குது கிரிக்கெட் பெட்டிங்... ஆர்.எஸ்.புரத்துல போலீசுக்கு செம கட்டிங்| Dinamalar

அமோகமா நடக்குது 'கிரிக்கெட் பெட்டிங்'... ஆர்.எஸ்.புரத்துல போலீசுக்கு செம 'கட்டிங்'

Added : ஜூலை 10, 2018
Share
கடைக்குப் போவதற்காக, சித்ராவும், மித்ராவும் டூவீலரில் கிளம்ப, 'சடசட'வென மழை கொட்டத் துவங்கியது; இருவரும் வீட்டுக்குள் ஓடினர்; மழை விடட்டும் என்று காத்திருந்தனர்.''மித்து... அநேகமா, இன்னிக்கு நம்ம சிறுவாணி நிரம்பிடுமாம்; பாரஸ்ட் டிபார்ட்மென்ட் ஆபீசர்ஸ், நேத்து போனப்போ, மழை செமையா தட்டி எடுத்துட்டு இருந்துச்சாம்'' என்றாள் சித்ரா.''என்ன மழை பேஞ்சு, 'டேம்'
அமோகமா நடக்குது 'கிரிக்கெட் பெட்டிங்'... ஆர்.எஸ்.புரத்துல போலீசுக்கு செம 'கட்டிங்'

கடைக்குப் போவதற்காக, சித்ராவும், மித்ராவும் டூவீலரில் கிளம்ப, 'சடசட'வென மழை கொட்டத் துவங்கியது; இருவரும் வீட்டுக்குள் ஓடினர்; மழை விடட்டும் என்று காத்திருந்தனர்.''மித்து... அநேகமா, இன்னிக்கு நம்ம சிறுவாணி நிரம்பிடுமாம்; பாரஸ்ட் டிபார்ட்மென்ட் ஆபீசர்ஸ், நேத்து போனப்போ, மழை செமையா தட்டி எடுத்துட்டு இருந்துச்சாம்'' என்றாள் சித்ரா.''என்ன மழை பேஞ்சு, 'டேம்' எல்லாம் நிறைஞ்சாலும், சுந்தராபுரத்துலயும், போத்தனுார்லயும் மாசத்துக்கு ரெண்டு நாள் தான் தண்ணி விடுவாங்க போலிருக்கு; இதெல்லாம் இந்த எம்.எல்.ஏ., கேக்கவே மாட்டாரான்னு, மக்கள் கொதிச்சுப் போய்க் கிடக்கிறாங்க'' என்றாள் மித்ரா.''இங்க மட்டுமா, கோயம்புத்துார்ல பல தொகுதிகளோட நிலைமை இதான்...சிங்காநல்லுார்ல, டி.எம்.கே., ஜெயிச்சிருச்சுங்கிற ஒரே காரணத்துக்காக, ரயில்வே மேம்பாலம், ரோடு போடுறதுன்னு எந்த வேலையுமே அங்க நடக்க விடுறதில்லைன்னு சொல்றாங்க; அப்பிடின்னா, மத்த தொகுதிகள்லயாவது நல்லா வேலை நடக்கணுமே'' என்று கேட்டாள் சித்ரா.''ஒத்த தொகுதியில நடக்குது...மத்த தொகுதிகள்ல, காலம் தான் கடக்குது!'' என்று அடுக்கிய மித்ரா, சமையலறையில் இருந்த அம்மாவிடம், சுக்கு மல்லி காபி போடச் சொல்லி விட்டு, திரும்ப வந்தாள்.அவளே தொடர்ந்தாள்...''அக்கா...'டிடிவி' மீட்டிங்குல நல்ல கூட்டம்னு சொன்னாங்க; ஆனா, உள்ளூர் வண்டிங்க அதிகமா இல்லியாம்; பெரும்பாலும் வெளியூர் வண்டிகதான் இருந்துச்சாம்; எந்தெந்த ஊர்ல இருந்து வந்திருக்குன்னு உளவுத்துறையும் ஒவ்வொரு வண்டியா 'நோட்' பண்ணிருக்காங்க''''அங்க நடந்த இன்னொரு மேட்டர் தெரியுமா...போலீஸ் பந்தோபஸ்து இல்லாம, கட்சியோட வி.ஐ.பி.,க்கள் எல்லாரும், பயங்கர நெரிசலுக்கு இடையில தான், நடந்து போயிருக்காங்க; அதுல, பல பேர்ட்ட இருந்து, பணம், பர்ஸ், ஆண்ட்ராய்டு போன் எல்லாத்தையும் 'பாக்கெட்' அடிச்சிட்டாங்களாம். பணமே ஒரு லட்ச ரூபாய்க்கு மேல போயிருக்குமாம். தொண்டர்கள் மூணு பேரைப் பிடிச்சுக் கொடுத்திருக்காங்க; அவுங்கள்ட்ட போலீஸ் 'செக்' பண்ணப்போ, எதுவுமே கிடைக்கலியாம்''''அதுவும் கிடைக்காது; பதவியும் கிடைக்காது போலிருக்கு...இங்க அந்த கட்சிக்கு பொறுப்பா போட்ருக்குற 'சேலஞ்ச்' பார்ட்டி, தன்னோட ஆளுங்களுக்கு மட்டும் தான், முக்கியத்துவம் தர்றாராம். பார்வர்டு பிளாக், கார்த்திக் கட்சியில இருந்து வந்தவுங்களை எல்லாம், பக்கத்துலயே சேக்குறது இல்லியாம்; அப்பிடிச் சேர்த்தா, 'ஜாதிக்கட்சி'ன்னு சொல்லிருவாங்கன்னு சொல்றாராம்; எரிஞ்சு விழுகுறாராம்!'' என்றாள் சித்ரா.''எங்க பார்த்தாலும் அதிகாரச்சண்டை தான்...நம்மூர்ல 520 கோடி ரூபாய்க்கு கட்டுன இ.எஸ்.ஐ.,யில, ஒரு நாளைக்கு 360 பேர் தான் வந்துட்டு இருந்தாங்க; இப்பதான், 900க்கு மேல, பேஷன்ட்க வர்றாங்களாம்; ஆனா, அங்க இருக்குற டீனுக்கும், ஆர்.எம்.ஓ.,வுக்கும் இடையில பயங்கரமான பனிப்போர் நடந்துட்டு இருக்காம். இந்த சண்டைக்கு நடுவுல, 'ஹாஸ்பிடல்' பராமரிப்பை எடுத்திருக்குற பிரைவேட் ஆளுங்க, மக்கள்ட்ட வழிப்பறி மாதிரி, பணம் பறிக்கிறாங்களாம்'' என்றாள் மித்ரா.''அந்த ஹாஸ்பிடல்ல சும்மாவே காசு புடுங்குறாங்கன்னு 'லேபர்ஸ்' புலம்புவாங்க; இப்போ இவுங்களுமா?'' என்று கேட்டாள் சித்ரா.''ஆமாக்கா...ஸ்டிரெச்சர் எடுக்குறது, வார்டு சுத்தம் பண்றதுன்னு எதை எடுத்தாலும் காசு தானாம்; இவுங்க சம்பாதிக்கிறதைப் பாத்துட்டு, அங்க வேலை பாக்குற 'ரெகுலர் ஸ்டாப்'களே, மூக்குல விரலை வைக்கிறாங்களாம்'' என்றாள் மித்ரா.''மித்து...மருதமலையில அர்ச்சகர் வேலைக்கு வாரிசுகளை நியமிக்க போட்டி நடக்குதுன்னு நீ ஒரு மேட்டர் சொன்னியே...அதுக்கு பேரம் பேசுற அந்த 'பேஷான' அலுவலர், 'அப்பிடியெல்லாம் எதுவுமே நடக்கலை'ன்னு, அந்த அர்ச்சகர்கள் கிட்ட எழுதி வாங்கிட்டு இருக்காராம்'' என்றாள் சித்ரா.மழைக்கேற்றாற்போல், சுடச்சுட அவித்த கடலையும், சுக்கு மல்லி காபியும் கொண்டு வந்து வைத்தார் மித்ராவின் அம்மா. இருவரும் கொறித்துக் கொண்டே, அரசியலை அலசினர்.''அக்கா...போத்தனுார்ல, 'ஆன்லைன்' லாட்டரியில போலீஸ் பணம் பறிமுதல் பண்ணுனதைப் பத்திப் பேசிட்டு இருந்தோமே... அந்த விவகாரத்துல, தினமும் புதுசு புதுசா தகவல் வருது; தங்களுக்கு வேண்டிய ஒருத்தரை, அந்த கேஸ்ல இருந்து தப்பிக்க வைக்கிறதுக்காக, போலீஸ்ட்ட வக்கீலுங்க பேரம் பேசுனாங்களாம்...ஒத்து வரலைன்னதும், போலீஸ் பிடிச்ச 'அமவுன்ட்' அதிகம்னு கெளப்பி விட்டுட்டாங்களாம்'' என்றாள் மித்ரா.''எனக்கென்னவோ, நம்பிக்கை இல்லை; கொஞ்சமாவது அடிச்சிருப்பாங்கன்னு தோணுது!'' என்றாள் சித்ரா.''இருக்கலாம்...புட் செக்யூரிட்டி டிபார்ட்மென்ட்ல இப்போ வந்திருக்குற லேடி ஆபீசர், ரொம்பவே நல்லா 'ஒர்க்' பண்றாங்க; ஆனா, இல்லீகலா விக்கிற, குட்கா, பான்பராக் பத்தி, பேசவே பயப்படுறாங்க; மாமூல் வாங்குற போலீசால, நமக்கு ஏதாவது பிரச்னை வருமோன்னு யோசிக்கிறாங்க போலிருக்கு'' என்றாள் மித்ரா.''ஆனா, நான் கேள்விப்பட்ட வரைக்கும், அந்த டிபார்ட்மென்ட்ல, ரொம்ப வருஷமா ஒரே இடத்துல இருந்தவுங்க தான், அவருக்கு மறைமுகமா 'டார்ச்சர்' கொடுத்துட்டு இருந்தாங்களாம்; இப்போ, ஸ்டேட் முழுக்க, இப்பிடி ஆணியடிச்சு உக்காந்திருக்குற ஆளுங்களை துாக்கி அடிச்சதுல, இவுங்களையும் துாக்கிட்டாங்களாம்; அதனால, அவுங்க கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்கன்னு நினைச்சேன்!'' என்றாள் சித்ரா.மழை விட்டதைப் போலிருந்ததால், இருவரும் வெளியே வந்து, வண்டியில் கிளம்பினர். அரசு சொகுசு டவுன் பஸ் ஒன்று, இவர்களின் மீது கரும்புகையைக் கக்கி, மூச்சுத் திணற வைத்தபடி, கடந்து சென்றது.''என்னக்கா...புது பஸ் நிறையா வந்திருக்குன்னு சொன்னாங்க; இந்த பஸ்களை எல்லாம் நிறுத்தவே மாட்டாங்களா?'' என்று கேட்டாள் மித்ரா.''பொய்க்கணக்கு எழுதியே, பஸ்களை எல்லாம் இப்பிடி மாத்திட்டாங்க; எத்தனை புது வண்டி வந்தாலும், அதுக்கும் இந்த நிலைமை தான்'' என்று விரக்தியோடு பதில் தந்தாள் சித்ரா.''இப்பிடித்தான், ஊழல், முறைகேடுக்குப் பேர் போன நம்மூரு யுனிவர்சிட்டியில, மூணு பஸ்களுக்கு எப்.சி.,பண்ணுனதா சொல்லி, நாலரை லட்ச ரூபாய்க்கு பொய்க்கணக்கு எழுதிருக்காங்களாம்'' என்றாள் மித்ரா.''அமவுன்ட் ரொம்ப 'கம்மி'யா இருக்கே!'' என்றாள் சித்ரா.''ஆமாக்கா...அங்க இருக்கிறவுங்களுக்கு, இதெல்லாம் 'பாக்கெட் மணி'க்கே பத்தாது; டி 20 மாதிரி, உடனுக்குடனே அடிக்கணும்; நிறைய அடிக்கணும்; அதான் அவுங்க பாலிசி!'' என்றாள் மித்ரா.''கிரிக்கெட் பத்திப் பேசவும், எனக்கு நம்ம பூ மார்க்கெட்ல கடத்துன பூ வியாபாரி மேட்டர் ஞாபகம் வந்துச்சு; அந்த ஏரியாவுல 'புட்பால், கிரிக்கெட் பெட்டிங்' பயங்கரமா நடக்குதாம்; போலீசுக்கு 'கட்டிங்' செமையா போகுதாம்; இந்த வியாபாரியும், 'பெட்' கட்டிட்டு பெரிய 'அமவுன்ட்'டை தர மாட்டேன்னு சொன்னதாலதான், இந்த கடத்தல்னு பேசிக்கிறாங்க'' என்றாள் சித்ரா.''ஆனா, கடத்துனதுல ஒருத்தனை, ஆளுங்கட்சி 'சப்போர்ட்'ல தப்பிக்க வைக்க முயற்சி நடக்குதாமே!'' என்றாள் மித்ரா.''அது தெரியலை...ஒரு விஷயம் தெரியும்; அந்த ஸ்டேஷனுக்கு, ஆன்லைன் லாட்டரி, கிரிக்கெட் பெட்டிங்ன்னு காசு கொட்டுது!'' என்றாள் சித்ரா.''அவுங்களுக்கு மட்டுமா...கோயம்புத்துார், திருப்பூர் ரெண்டு மாவட்டத்துல இருக்குற 200க்கும் மேற்பட்ட கூட்டுறவு சொசைட்டிகளை 'ஆடிட்' பண்றதுக்கு ஒரு ஆபீசர், இங்க இருக்காரு. அவரு ஆய்வு பண்ணி, 'நல்லா இயங்குது'ன்னு சர்ட்டிபிகேட் கொடுத்தா, 'பேஸிக்'ல 20 பர்சண்டேஜூம், 'நஷ்டத்துல இயங்குது'ன்னு கொடுத்தா, பத்து பர்சண்டேஜூம் சேர்த்து சம்பளம் கொடுப்பாங்களாம். அவரு, ஒரு சர்ட்டிபிகேட் கொடுக்க, 10 ஆயிரம் கேக்குறாராம்'' என்றாள் மித்ரா.''மித்து...வர்ற 12ம் தேதியன்னிக்கு, நம்மூர்ல கனவு ஆசிரியர், புதுமைப்பள்ளி இரண்டுக்கும் விருது கொடுக்கப் போறாங்க. அதுக்கு வர்ற 'ஜேடி'யை சந்திக்க ஆசிரியர்கள் சங்கங்கள், தனியார் பள்ளி சங்கங்கள் நேரம் கேட்டு இருக்காங்களாம்; அப்பிடி சந்திச்சா, பள்ளிக் கல்வித்துறையில இங்க நடக்குற எல்லா வசூல் பத்தியும் புட்டுப் புட்டு வைக்கப் போறாங்களாம்'' என்றாள் சித்ரா.அடுத்த மேட்டரை ஆரம்பிப்பதற்குள், மீண்டும் மழை வலுத்தது; வண்டியை ஓரம் கட்டி, அருகிலுள்ள கடையில் இருவரும் ஒதுங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X