சென்னை: சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது.
சென்னை போரூரில் 2017, பிப்., மாதம் ஹாசினி என்ற 6 வயது சிறுமியை, தஷ்வந்த், பலாத்காரம் செய்து கொலை செய்தான். இந்த வழக்கில், 2018 பிப.,18 ல் அவனுக்கு தூக்குத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தூக்குத்தண்டனைக்கு எதிராக தஷ்வந்த் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த, சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ராமதிலகம், விமலா ஆகியோர், தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு அளித்தனர்.
காமத்திற்கான கடைசி நொடி
தஷ்வந்த் வழக்கில் தீர்ப்பு விவரம் :
தீர்ப்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்ததாவது: குழந்தை பருவத்தில் பாலியல் குற்றத்திற்கு ஆளாகும் சிறுமிகள், திருமண வாழ்க்கையிலும் பிரச்னைகளை சந்திக்கிறார்கள். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனையே சரியாக இருக்கும்.
மொட்டு மலராவதற்கு முன்பே சாம்பலாக்கப்பட்டுள்ளது. தஷ்வந்த் செய்த குற்றத்தை விட அதை செய்ய வேண்டும் என்ற அவரது மனநிலை கொடூரமானது. கொடூரத்தின் வலியை நீதிமன்றத்தின் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. திருமணத்தால் பிரிவதை விட, கொலையால் மகளை பிரிவது கொடூரமானது.
குழந்தைகளில் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லாத சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நிரபராதியை தண்டிப்பது தவறு; ஆனால் குற்றவாளியை தண்டிக்காமல் விடுவது நீதி இல்லாதது போல் ஆகிவிடும். தஷ்வந்த் தூக்கில் தொங்கும் கடைசி நொடி காமத்திற்கான கடைசி நொடியாக இருக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE