வெற்றியின் ரகசியம்!| Dinamalar

வெற்றியின் ரகசியம்!

Added : ஜூலை 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
வெற்றியின் ரகசியம்!

மனிதர்களுக்கு வெற்றி வெளியிலிருக்கும் காரணிகளை காட்டிலும் அவர்களுக்குள் இருக்கும் அபூர்வ சக்தியை பொறுத்தே அமைகிறது. ஒவ்வொரு மனிதருக்கும் மகத்தான ஊற்றாய் அமைவது அவர்கள் மனதில் ஆக்கபூர்வமாக உதிக்கும் எண்ணங்கள் தான். அதே வேளையில் எல்லாவிதமான எண்ணங்களும் மனிதர்களுக்கு வெற்றியை ஈட்டி தருவதில்லை. எண்ணங்கள் பலவகையில் உருவாகி மனிதர்களை வெவ்வேறு விதமாக இயக்கும் சக்தி படைத்தது. அதற்கேற்றவாறு அவரவர் வாழ்க்கைநிலை மாறுவதும் இயற்கையான உண்மையே.எண்ணங்கள் மனிதர்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் சக்தியாகவும் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையை தீர்மானிக்கும் காரணியாகவும் அமைவதனால் மனிதர்கள் எண்ணத்தை ஆளுகின்ற விதத்தில் தான் அவர்களது வெற்றியும் அடங்கியுள்ளது.
ஆளும் திறன் : உலகத்தில் எண்ணத்தை ஆளுகின்ற திறன் படைத்தவர்களுக்கே பிரகாசமான வெற்றியும் மகிழ்வான வாழ்க்கைநிலையும் அமைகிறது. எண்ணத்தை ஆளுகின்ற திறன் எல்லோருக்கும் இருக்கின்றதா? என்று கேள்வி எழுப்பினால், அதற்கு பதில் 'ஆம்' என்று தான் எடுத்துகொள்ளப்படவேண்டும். ஒவ்வொரு மனிதனும் தேவையான இலக்குகளை அடைவதற்காகவும், தான் விரும்பிய வாழ்க்கை நிலையை பெறுவதற்காகவும் மற்ற எந்த சக்தியைவிட எண்ணங்களின் அபாரசக்தியை கொண்டு தான் அதை நிறைவேற்றி கொள்ளமுடியும். இதற்கு ஆரோக்கியமாகவும் பலன் தரக்கூடிய வகையில் தனக்கும் தனது சுற்றுபுறத்திற்கும் நன்மை பயக்கும் விதமாக எண்ணத்தை ஆளும் ஆற்றலை பெறவேண்டும். எண்ணங்கள் மனிதர்களை உருவாக்குவது போல மனிதர்களும் எண்ணங்களை உருவாக்கலாம் என்பது மனதத்துவ உண்மை. இது எண்ணங்களை பற்றிய புரிதலாலும், எண்ணங்களினால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை உணர்வதாலும் எண்ணத்தை நெறிபடுத்தக் கூடிய மன பக்குவத்தாலும் சாத்தியமாகும். எண்ணத்தை ஆளும் திறன் இன்றைய உலகத்தில் மிகவும் தேவைப்படும் வாழ்க்கைதிறன் ஆகும்.
எண்ணமும் சிந்தனையும் : மனிதனின் சிந்தனையில் இருந்து தான் எண்ணங்கள் பலவகையில் உருவாக்கம் பெறுகிறது. சிந்தனையின் தரமும் எண்ணத்தின் நிலையும் ஏறத்தாழ ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. சிந்தனை மனதில் தோன்றி ஆழமாக பதிந்துவிட்டால் அவை எண்ணங்களாக மாறிவிடுவதை நம்மால் உணரமுடியும். சீரான சிந்தனை உடையோருக்கு ஆரோக்கியமான எண்ணங்கள் மனதில் உருவாகும். சிதைந்த சிந்தனைகளை கொண்டிருக்கும்போது நன்மை பயக்காத எண்ணங்கள் தான் அதிகமாக உருவாகி மனிதர்களின் வாழ்க்கையில் வெளிப்படுத்தப்படும்.சிந்தனையை ஒவ்வொரு மனிதனும் மிகவும் கவனமாகவும், உன்னிப்பாகவும் கவனிக்க துவங்கும் வேளையில் அவர்களது சிந்தனை எத்தகைய பாதையில் வழிநடத்துகின்றது என்பதை புரிந்துகொள்ளமுடியும். இவ்வகையாக ஒவ்வொரு மனிதனும் அவர்களது வாழ்க்கையில் பயன்தரக்கூடிய ஆரோக்கிய எண்ணத்தால் வெற்றி பெற வேண்டுமென்றால் ஆரோக்கியமான சிந்தனைகளை தங்களது வாழ்க்கையில் மேற்கொள்ளவேண்டும்.நமது எண்ணங்கள் தான் நமது பழக்க வழக்கங்களுக்கு அடிப்படை. ஒவ்வொரு மனிதனும் பல்வேறு விதமான பழக்கவழக்கங்களை அவர்களது வாழ்க்கையில் வெளிபடுத்துகின்றனர். தனித்துவம் படைத்த இந்த பழக்கவழக்கங்கள் அவர்களது வாழ்க்கையை பெருமளவில் பாதிக்கும் சக்தியாக அமைகின்றது. ஆரோக்கியமான குடும்ப சூழ்நிலையிலும் பெரியவர்களின் வழிகாட்டுதலிலும் குழந்தைகள் வளரும் போது நல்ல பழக்கவழக்கங்களை கற்றுகொள்கின்றனர். இதேபோன்று பள்ளி மற்றும் கல்லுாரிகளில் பயிலும் போது ஆசிரியர்களின் அறிவுரைகளை கடைபிடித்து வாழ்பவர்களுக்கு, நல்ல பழக்கவழக்கங்கள் உருவாகின்றன. இதில் குழந்தைகளுக்கோ அல்லது இளம்பருவதினருக்கோ ஏதேனும் கசப்பான அனுபவங்கள் இருந்தால் அவர்களின் எண்ணம் சிதைக்கப்பட்டு பழக்கவழக்கங்கள் பாதிக்கப்படுகின்றது.நன்னெறி நிறைந்த பழக்கவழக்கங்களை வெளிப்படுத்துவதற்கு நல்ல எண்ணங்கள் உருவாக்கிகொள்ள நாம் முற்படவேண்டும்.
எவ்வாறு ஆளலாம்? : சந்தோஷமான சூழ்நிலையில் இருக்கும்போது நமது மனது பூரிப்படைகிறது; அத்தகைய நிலையில் நமது எண்ணங்களும் பிரகாசிக்கும். எதையும் என்னால் செய்திடமுடியும் என்று நமது மனம் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் திகழ்கிறது. அதே தருவாயில் சோகமான, பதற்றமான மற்றும் பிரச்னைக்குரிய சூழ்நிலையில் இருக்கும் வேளையில் நமது எண்ணங்கள் அதற்கு ஏற்றார் போல் ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கிறது. இது தாழ்ந்த மனபான்மைக்கு நம்மை உட்படுத்துகிறது. இதை புரிந்துகொண்டு ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியான சூழ்நிலைக்குட்பட்டு வாழும் நிலையை உருவாக்கி கொண்டால் ஆரோக்கியமான எண்ணங்களை அவர்களுக்குள் உயர்த்திகொள்ளும் திறனை பெறுகிறார்கள்.சுய விமர்சனம் அல்லது சுய மதிப்பீடு செய்வதன் மூலம் நமக்கு ஏற்படும் தீமையான எண்ணங்களின் காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். ஒருவருக்குள்ளும் தீங்கான, அசுத்தமான எண்ணங்கள் உறங்கிகொண்டு இருக்கின்றது. இத்தகைய எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணத்தை நாம் கண்டுபிடிக்காமல் அல்லது தீர்வு காணாமல் அவற்றை முற்றிலுமாக குறைத்துகொள்ளமுடியாது. மற்றவர்களை காட்டிலும் நம்மை நாமே சுயவிமர்சனம் செய்வதின் மூலம் நமக்கு தேவையற்ற தீங்கான எண்ணங்களை அடையாளம் கண்டு அதை நம் மனதிலிருந்து அகற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளமுடியும்.போலியான வாழ்க்கைமுறையை தவிர்த்து கொள்ளவேண்டும். நமது வாழ்க்கை முறைக்கும் எண்ணங்களுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. நமக்கு இயற்கையில் அமைகின்ற வாழ்க்கைமுறைக்கு உட்பட்டு வாழ்வதினால் நமது எண்ணங்களும் அமைதியான ஆரோக்கியமான நிலையில் இருக்கின்றது. நமக்கு பொருந்தாத வாழ்க்கைமுறைக்கு மற்றவர்களை போல் நாம் இருக்கவேண்டும் என்று தகுந்த உழைப்பின்றி, பிறவழியில் யோசிக்க முற்பட்டால் நமது எண்ணங்களும் பல போலியான வாழ்க்கை முறைக்கு நம்மை உட்படுத்தும். இதுவே நமது எண்ணநிலையில் பெரும் அழுத்தத்தையும் தேவையில்லாத பாரத்தையும் சுமத்தி நமது வாழ்க்கையில் பல்வேறு எதிர்வினைகளை சத்தமில்லாமல் செய்கின்றது. இதைபுரிந்து கொண்டு வாழ்வதி னால் தேவையற்ற குழப்பத்தில் இருந்தும் வாழ்வியல் பிரச்னையிலிருந்தும் விடுபட்டு கொள்ளலாம்.காலத்திற்கு ஏற்பகாலத்திற்கு ஏற்ப வாழ்வது நமது எண்ணங்களுக்கு பலன் அளிக்கும். பொதுவாகவே ஒவ்வொரு மனிதனும் கடந்தகாலத்தை அசைபோட்டு கொண்டே தற்காலத்தில் வாழ்கின்றனர். இன்னும் சிலர் எதிர்காலத்தை அச்சத்தோடு நினைத்தே நிகழ்காலத்தின் நிறைவுகளை பெறாமலே வாழ்ந்து வருகின்றனர். கடந்தகால வாழ்க்கை நம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டது. எதிர்காலம் என்பது நம் நிகழ் கால வாழ்க்கையை பொறுத்தே அமைகிறது. மிகப்பெரிய சாதனைகளையும் காலம் கடந்து நிற்கும் வரலாற்று சிறப்புமிக்க செயல்களிலிருந்து மனிதர்கள் சாதித்துள்ளனர் என்றால் அதன் ரகசியம் வேறொன்றில்லை. அவர்களின் எண்ணத்தை அவர்கள் மிக நேர்த்தி யாக நெறிப்படுத்தி கையாளும் விதத்தில் தான் செய்யமுடிந்தது. வாழ்க்கையில் வெற்றியும், மகிழ்ச்சியும் ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களை பொறுத்து அமைகின்றது என்பது மனோதத்துவ ஆராய்ச்சியாளர்களின் கருத்து; இதுவே யதார்த்தமான உண்மை.எண்ணங்கள் அலைபாயாமல் ஒரு குறிப்பிட்ட எல்லையை நோக்கி ஆழமாகவும், அழுத்தமாகவும் செலுத்தபடுவதால் தான் மனிதர்களுக்கு ஆனந்தமான வெற்றி பிறக்கும். இதுவே வாழ்வின் ரகசியம்.
- நிக்கோலஸ் பிரான்சிஸ் எழுத்தாளர், மதுரை

94433 04776

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X