எஷிமா ஓஹாசி?: வானத்துக்கு கட்டுறாங்க பாலம்: வழுக்குனா தெறிச்சிரும் கபாலம்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எஷிமா ஓஹாசி?: வானத்துக்கு கட்டுறாங்க பாலம்: வழுக்குனா தெறிச்சிரும் கபாலம்!

Updated : ஜூலை 12, 2018 | Added : ஜூலை 11, 2018 | கருத்துகள் (102)
எஷிமா ஓஹாசி,  வானம், பாலம்,கபாலம்

கோவை: ஊரிலிருந்து மாப்பிள்ளை ஒருத்தனின் அலைபேசி அழைப்பு; அவன்கொஞ்சம் வில்லங்கமான ஆள்; ஏதாவது, விவகாரத்தோடுதான் கூப்பிடுவான்; வேறு வழியில்லாமல் எடுத்தேன்.வானத்துக்கு பாலம்:

''என்னா மாப்ள...ஒங்க ஊருல வானத்துக்கு பாலம் கட்டுறாய்ங்களாமே...'பேஸ்புக்'ல பார்த்தேன்...வந்தா, கூப்பிட்டுப் போய் காமிப்பியா?,'' என்றான். என்ன சொல்வதென்று தெரியவில்லை; கொஞ்சம் யோசித்து, 'துாரமா நின்னு காமிக்கிறேன் மாப்ள...மேல கூப்பிட்டுப் போக மாட்டேன்; போனா, நீயும், நானும் 'மேல' போக வேண்டியது தான்,'' என்றேன். அவன் மட்டுமில்லை...பல ஊரிலிருக்கிற நண்பர்களும், உறவினர்களும், ஏதோ துக்கம் விசாரிப்பதைப் போல, இந்த பாலத்தைப் பற்றி கேட்கும்போது, பதில் சொல்வதற்குள் கபாலம் சூடாகி விடுகிறது.

இப்படி ஒரு பாலத்துக்கு, 'டிசைன்' போட்டு, அதைக் காண்பித்து, கவர்மென்ட்டிலும் காசு வாங்கி, கமிஷனும் அடித்து விட்ட அந்த அசகாய சூரப்புலி இன்ஜினியர் யாரென்று தெரியவில்லை. தெரிந்தால், கூப்பிட்டு வந்து, பாலத்தின் உச்சியில் நிற்க வைத்து, ஒரு பாராட்டு விழா நடத்தலாம்.அந்த 'வானத்தைப் போல' மனம் படைச்ச அரசால் மட்டும் தான், இந்த பாலத்துக்கெல்லாம் நிதி ஒதுக்க முடியும்; ஏன்னா, இது வானத்துக்கே கட்டுற பாலமாச்சே. ஊரெல்லாம் கரும்கும் புகையைக் கக்குற நம்ம 'சொகுசு டவுன் பஸ்' எல்லாம், இந்த பாலத்தில் ஏறுவதை நினைத்தால், இப்பவே கண்ணைக் கட்டுதே...!

முதலில் வேறிடத்தில் முடிவதாக இருந்த பாலத்தை, சித்தாபுதுார் மயானம் வரைக்கும் நீட்டித்தது, தற்செயலாக நடந்ததா அல்லது தொலைநோக்குடன் போடப்பட்ட திட்டமா என்பது, அந்த இன்ஜினியர்களுக்கு மட்டுமே தெரிந்த 'தொழில்நுட்ப' ரகசியம். இந்த பாலத்தைப் பார்த்து, ஒரு குழந்தை தன்னுடைய அப்பாவிடம், 'ஹய்யோ...எவ்ளோ பெரிய சறுக்கு...அப்பா...என்னைய அதுல ஏத்திவிடு' என்று அடம் பிடித்த விஷயமெல்லாம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்குத் தெரிந்தால், 'பள்ளிக் குழந்தைகளை துள்ளிக் குதிக்க வைக்கும் பாலம்' என்று முழு நீள கவிதையை எழுதி, சட்டமன்றத்தில் படிப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பார்கள். நுாறாண்டு பேசும் ஈராண்டு சாதனையில், எதை எதையோ பட்டியலிட்டிருக்கிறார்கள்...முதல்ல இந்த பாலத்தைச் சேருங்க பாஸ்!


பாலம் பயோ - டேட்டா


மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் அடுக்கு பாலமானது, 100 அடி ரோட்டில் துவங்கி, சின்னசாமி நாயுடு ரோட்டில் முடிவடைகிறது. மொத்தம், 55 துாண்கள், 1.70 கி.மீ., நீளம் 7.50 மீட்டர் அகலமுடன் இரு வழித்தடம் கொண்டது. 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கும் இப்பணிகளை, 10 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


தலைப்பு ஏன்?


செய்தியின் தலைப்பில் உள்ள எஷிமா ஒஹாசி பாலம், ஜப்பானில், மட்சுயே என்ற இடத்தையும், ஷகய்மினடோ என்ற இடத்தையும் இணைக்கும் வகையில், நகவுமி ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் மொத்த நீளம் 1.7 கி.மீ.,. அகலம் 11.3 மீட்டர். இந்த பாலத்தின் உயரம் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் திகிலை கிளப்பும். திறமையான டிரைவர் மற்றும் நல்ல காரால் மட்டுமே இந்த பாலத்தில் ஏறி இறங்க முடியும். இதனால், தான் கோவையில் கட்டப்படும் பாலம் தொடர்பான செய்தியின் தலைப்பாக ஜப்பான் பாலத்தின் பெயரை வைத்துள்ளோம்.
வாசகர்கள் எழுதலாம்:


ஜப்பானுக்கு இணையாக இந்தியாவில், அதுவும் நம்ம கோவையில், ‛செங்குத்து பாலம்' கட்டும் நம்ம அரசின் மகிமை பற்றியும், இதை டிசைன் செய்த இன்ஜினியர்களின் திறமை பற்றியும் தினமலர் இணையதள வாசகர்கள் கருத்துகளை எழுதலாம்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X