கண்காணிப்பு வளையம் தேவையா? சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண்டனம்| Dinamalar

கண்காணிப்பு வளையம் தேவையா? சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண்டனம்

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (1)

புதுடில்லி:'சமூக ஊடக மையம் அமைக்கும், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் முடிவு, இந்தியாவை, கண்காணிப்பு வளையத்தில் உள்ள நாடாக மாற்றுவது போல் உள்ளது' எனக் கூறி, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துஉள்ளது.
டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தகவல்களை சேகரித்து ஆய்வு செய்யக் கூடிய, சமூக ஊடக தகவல் தொடர்பு மையம் அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அவசர வழக்காக விசாரிக்க, ஜூன், 18ல், உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில், திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ., மஹுவா மொய்த்ரா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு, நேற்று விசாரித்தது.
மஹுவா மொய்த்ரா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஏ.எம்.சிங்வி கூறியதாவது:சமூக ஊடக தகவல் தொடர்பு மையம் அமைப்பதற்கான திட்டங்கள் பெறுவதற்கு, மத்திய அரசு, 'டெண்டர்' விட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள், ஆக., 20ல், பரிசீலிக்கப்பட உள்ளன.
சமூக ஊடக மையம் மூலம், சமூக ஊடக தகவல்களை கண்காணிக்க அரசு விரும்புகிறது; இது தடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: இணைய தள தகவல்களை கண்காணிக்கும் வகையில், சமூக ஊடக மையம் அமைக்கும் முடிவு, நம் நாட்டை, கண்காணிப்பு வளையத்தில் உள்ள நாடாக மாற்றுவது போல் உள்ளது.இதுதொடர்பாக பதில் அளிக்க, மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.இந்த வழக்கு, ஆக., 3ல், மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X