என்.டி.எம்.ஏ., பெயரில் பயிற்சியாளர் மோசடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

என்.டி.எம்.ஏ., பெயரில் பயிற்சியாளர் மோசடி

Added : ஜூலை 14, 2018

கோவை மாணவி பலியான சம்பவத்தில், பயிற்சியாளர் ஆறுமுகம், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனமான, என்.டி.எம்.ஏ.,வில் பணியாற்றுவதாக மோசடி செய்தது அம்பலம் ஆகியுள்ளது.
நெல்லையை சேர்ந்தவர்

கோவை, தனியார் கல்லுாரியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியில், மாணவி லோகேஸ்வரி பலியான சம்பவத்தில், பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.ஆறுமுகம், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே, பழவூர் கிராமத்தைச் சேர்ந்தவர். திருநெல்வேலி, எம்.டி.டி., இந்து பள்ளியில் படித்ததாகவும், சென்னை விவேகானந்தா கல்லுாரியில், எம்.காம்., படித்ததாகவும், தன் முகநுால் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில், பயிற்சியாளர் வேலை பார்ப்பதாக தெரிவித்து, பல கல்லுாரி களுக்கும், பள்ளிகளுக்கும் சென்று, ஆறுமுகம் ஒத்திகை நிகழ்ச்சி நடத்திஉள்ளார். இதற்காக, அவர் கட்டணமும் பெற்று வந்துள்ளார். இவரது கல்வி தகுதி குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனமான, என்.டி.எம்.ஏ.,வில், சென்னையில் பணியாற்றுவதாக அவர் கூறியிருப்பது பொய்யான தகவல் என, விசாரணையில் தெரியவந்துள்ளது.இது குறித்து, அதிகாரிகளிடம் விசாரித்த போது, 'சென்னையில், என்.டி.எம்.ஏ., அலுவலகமே இல்லாத நிலையில், அவர் எப்படி பணியாற்றியிருக்க முடியும்' என, கேட்டனர். மேலும், 'மாநில அரசின் பேரிடர் மேலாண்மை அலுவலகம் மட்டுமே உள்ளது. அங்கும் இவர் பணியாற்றவில்லை' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

'பயிற்சியாளர் ஆறுமுகத்துக்கு, என்.டி.எம்.ஏ., எந்த சான்றிதழையும் வழங்கவில்லை. அவருக்கும், என்.டி.எம்.ஏ.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆனால், ஆறுமுகம் தன் பெயருடன், என்.டி.எம்.ஏ., என்பதையும் இணைத்து, தன்னை பிரபலப்படுத்தி, கல்லுாரிகளுக்கு சென்று, நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.
கோவை, சூலுாரில் உள்ள, ஒரு நர்சிங் கல்லுாரியில், ஆறு ஆண்டுகளுக்கு முன், ஆறுமுகம் பயிற்சி ஒன்றை நடத்திஉள்ளார். அந்த புகைப்படத்தை இணைத்து, மற்ற கல்லுாரிகளுக்கு பயிற்சி தருவதாக, இ - மெயில் வழியாக அணுகியுள்ளார்.இதன்படியே, கோவை கலைமகள் கல்லுாரியையும் அணுகி, பயிற்சி நிகழ்ச்சியை நடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

எனவே, பயிற்சியாளர் ஆறுமுகத்தின் மீது, என்.டி.எம்.ஏ., மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை தரப்பிலும், போலீசில் புகார் தர முடிவு செய்துள்ளனர்.சம்பவம் குறித்து, கல்லுாரி கல்வி கோவை மண்டல இணை இயக்குனர் கலா, கலைமகள் கல்லுாரிக்கு சென்று, விசாரணை நடத்தினார்.

அறிக்கை தாக்கல்

இதில், கல்லுாரி சார்பில், அரசு தரப்பில் எந்த அனுமதி பெறாமலும், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்காமலும், தன்னிச்சையாக நிகழ்ச்சி நடத்தியது தெரிந்தது.இணை இயக்குனர் விசாரணை அறிக்கை, கோவை மாவட்ட கலெக்டர் வழியாக, தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை தலைமை செயலர், முதல்வரிடம் சமர்ப்பித்த பின், அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் என, தெரிகிறது.

நடவடிக்கை உறுதி: அமைச்சர்

உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கூறுகையில், ''பயிற்சியாளர், மாணவியை தள்ளிவிடும் வகையில் வீடியோ உள்ளது. இதுபோன்று தள்ளி விடுவது மோசமான செயல். பயிற்சிக்கு மாணவர்கள் விருப்பப்பட்டு வருகின்றனரா என, பார்த்து அளிக்க வேண்டும். இச்சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பர்,'' என்றார்.

- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X