மதுரை:மதுரை காமராஜ் பல்கலை புதிய துணைவேந்தர் தேர்வுக் குழுவில் இடம்பெறும் செனட் பிரதிநிதி தேர்தலில் முன்னாள் துணைவேந்தர் உட்பட நான்கு பேர் போட்டியிடுகின்றனர்.
மனுக்கள் வாபஸ் நாளான நேற்று வேட்பாளர்களின் தகுதியை குறிப்பிட்டு, 'மனுக்களை நிராகரிக்க வேண்டும்' என பதிவாளர் சின்னையாவிடம் சங்கத்தினர் வாக்குவாதம் செய்தனர்.இப்பல்கலை துணைவேந்தர் செல்லதுரையின் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, துணைவேந்தர் தேடல் குழுவை அமைக்க உத்தரவிட்டது. தேடல் குழுவில் இடம் பெறும் செனட் பிரதிநிதி தேர்தல் ஜூலை 25ல் நடக்கிறது.
மனு தாக்கல் செய்த அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், திருச்சி பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் அருள் செல்லக்குமார், திருவனந்தபுரம் சென்டர் பார் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (சி.டி.எஸ்.,) பேராசிரியர் இருதயராஜன், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பேராசிரியர் சோமசுந்தரம் மனுக்கள் ஏற்கப்பட்டன.
மனுக்கள் வாபஸ் நேற்று நடந்தது. யாரும் வாபஸ் பெறவில்லை. நான்கு பேர் போட்டியிடுவது உறுதியானது.இந்நிலையில் 'மூட்டா' உள்ளிட்ட சங்கத்தினர், 'அருள்செல்லக்குமார், மதுரை காமராஜ் பல்கலை போர்டு ஆப் ஸ்டடீஸில் உறுப்பினராக இருந்தவர். இருதயராஜன், சி.டி.எஸ்., இயக்குனர் அல்ல, பேராசிரியரே. குறைந்தபட்சம் 10 ஆண்டு பணியில் இல்லை. மனுவை நிராகரிக்க வேண்டும்' என எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல்கலை பேராசிரியர் நலச்சங்கம் தலைவர் கலைச்செல்வன் சார்பில், 'முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் கான்பூர் ஐ.ஐ.டி.,யில் உதவி, இணை மற்றும் மூத்த பேராசிரியராக 11 ஆண்டுகள் இருந்தார். பின் துணைவேந்தர் ஆனார். இவரது பதவி உயர்வுகள் சந்தேகமாக உள்ளது. பேராசிரியர் சோமசுந்தரம், காமராஜ் பல்கலை ஆராய்ச்சி குழு உறுப்பினராக இருந்து பணப் பலன் பெற்றவர். இருவரின் மனுவை நிராகரிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.
வேட்புமனுக்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில், புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் மீது நடவடிக்கை எடுப்பதில் பதிவாளர் மற்றும் சட்டத்துறை செயலர் பூவலிங்கம் தலைமையிலான கன்வீனர் குழு குழப்பம் அடைந்தது. இரவு நீண்டநேரம் ஆலோசனை நடந்தது.இது குறித்து பதிவாளர் சின்னையாவை தொடர்பு கொண்டபோது அலைபேசியை எடுக்கவில்லை. பூவலிங்கத்திடம் கேட்டபோது, பதிவாளர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE