ஆனைமலை;வனத்தின் பாதுகாவலனாகவும், பல்லுயிர் பெருக்கத்துக்கு முக்கிய காரணமாகவும் விளங்குகிறது காட்டு யானைகள். அதுமட்டுமின்றி, வனத்தில் நீர்நிலைகளைத் தேடி கண்டறியும் சக்தி யானைகளுக்கே அதிகமுள்ளது. வனத்தில் தண்ணீர் இருக்கும் இடத்தை அறிந்து, வழித்தடம் உருவாக்கி, மற்ற வனவிலங்குகளுக்கு நீர் இருக்கும் இடத்துக்கு வழிகாட்டுகின்றன யானைகள்.
மார்ச் முதல் ஜூன் வரையிலான வறட்சி காலத்தில் யானைகள், அணைகள், நீரோடை உள்ளிட்ட நீர்நிலைகளைத் தேடி வருகின்றன. ஜூன் முதல் பிப்., வரை இனப்பெருக்கத்துக்காக அடர்வனத்துக்குள் இடம் பெயர்கின்றன.
தற்போது இனப்பெருக்க காலத்தால், பெரும்பாலான யானைகள், வால்பாறை, பரம்பிக்குளம், கேரள மாநிலம் தேக்கடி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிக்கு இடம்பெயர்கின்றன.ஆனால், குட்டி யானைகளுடன் மே மாதத்தில் தண்ணீருக்காக ஆழியாறு அணைப்பகுதிக்கு வந்த, யானைக்கூட்டம் இன்னமும் அடர்ந்த வனத்துக்கு திரும்பாமல், அணையில் முகாமிட்டு உள்ளன.பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டை அவ்வப்போது கடந்து, அணைப்பகுதியின் நீரோடைக்கு வந்து செல்கின்றன. அப்போது, பெரிய யானைகளுடன் வரும், குட்டிகள் செய்யும், 'லுாட்டி' சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது.
நவமலை, ஆழியாறு பகுதியில் பெய்யும் சாரல் மழையில் நனைந்து கொண்டு குரங்கு நீர் வீழ்ச்சி அருகே அணைப்பகுதியில், இரண்டு யானைக்குட்டிகள் மண்ணில் உருண்டு, புரண்டு விளையாடின. இதைக்கண்டு பெரிய யானைகளும், 'குஷியாகி' உடலில் மண்ணை பூசிக் கொண்டு, விளையாடுகின்றன.அண்ணன், தம்பி போல் இருந்த இரண்டு யானைக்குட்டிகள், ஒன்றின் மீது மற்றொன்று ஏறி செல்லமாய் சண்டையிட்டு, சிறு குரலில் பிளிறி சப்தமிட்டது, காண்போர் மனதையும் குதுாகலப்படுத்தியது.
அணைப்பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய பாலம் அருகே, அணைக்கு வரும் நீரோடையில், தும்பிக்கையில் தண்ணீரை எடுத்து உடல் மீது தெளித்து யானைகள் மகிழ்கின்றன.அங்குமிங்குமாக ஓடி விளையாடிய குட்டி யானைகள், 'டயர்ட்' ஆகி, பின் பெரிய யானைகளின் கால்களுக்குள் தஞ்சம் புகுந்தன.யானைக்கு மதம் பிடித்து விட்டது, யானைகள் அட்டகாசம் செய்கிறது என, பிரசாரம் செய்வோர்,
இந்த யானைகளின் குறும்புத்தனத்தையும், பாசப்பிணைப்பையும் பார்த்தால், யானைகள் மனிதர்களை மிஞ்சியவை என்பதை உணர்வார்கள்.வால்பாறை ரோட்டில் செல்லும் சுற்றுலா பயணிகள், ஆழியாறு அணைப்பகுதியில் யானைகளின் சேட்டைகளை தினமும் ரசித்து செல்கின்றனர். மொபைல்போன்களில், 'செல்பி' எடுத்தும், இயற்கையின் அழகான தருணத்தை பதிவு செய்து கொள்கின்றனர்.இயற்கையை ரசிக்கும் போது, பாலித்தீன் கழிவுகளை வனத்திலும், அணையிலும் வீசி, இயற்கைக்கு பங்கம் ஏற்படுத்தக்கூடாது என்பதையும் உணர வேண்டும்.