திருச்சி: திருவெறும்பூர் அருகே அடுத்தடுத்து இரு வீடுகளில் தொடர் திருட்டு நடந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
திருச்சி, திருவெறும்பூர் தென்றல் நகரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி, 62 . இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 61. இருவரும் பெல் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்கள், கடந்த வாரம் தங்கள் குடும்பத்துடன் வெளியூருக்குச் சென்று விட்டனர். இந்நிலையில், இருவருடைய வீடுகளின் முன்பக்கக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பொன்னுசாமி வீட்டிலிருந்த 10 பவுன் நகை, ஆறுமுகம் வீட்டிலிருந்து லேப்டாப் ஆகியவற்றை திருடிக் கொண்டு, வீட்டைத் திறந்த நிலையிலேயே போட்டுவிட்டு தப்பிவிட்டனர். இருவரது வீடுகளுமே திறந்த நிலையிலே கிடந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர், திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து நடந்த போலீசார் விசாரணையில், பொன்னுசாமி வீட்டில், 10 பவுன் நகை, ஆறுமுகத்தின் வீட்டின் லேப்டாப்பும் திருட்டுப் போனது தெரிய வந்தது. இருவரும் வீடு திரும்பியதும் தான், மேலும் கொள்ளைப் போன பொருட்களது விபரம் தெரியும் என போலீசார் கூறுகின்றனர். திருவெறும்பூர் பகுதியில் தொடரும் செயின் பறிப்பு, வீடுகளில் திருட்டுகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.