விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

Added : ஜூலை 14, 2018

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நடந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
கர்நாடக மாநிலம், பெங்களூரூ வில்சன்கார்டன் பகுதியை சேர்ந்த தொழிலதிபர்கள் நசீர்உசேன், 24, ஜோயால்சொரூப், 25, மற்றும் மேகாதிரிகா, 22. இவர்கள் மூவரும் கடந்த, 2008 மார்ச், 26ல் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் சென்றனர். கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் தொன்னைகான்கொட்டாய் அருகே வந்த போது, எதிரில் வந்த அரசு பஸ் மோதியதில் நசீர்உசேன், ஜோயல்சொரூப் ஆகியோர் இறந்தனர். மேகாதிரிகா படுகாயமடைந்து தற்போது நடக்க முடியாமல் உள்ளார். இந்த விபத்து வழக்கு, கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த, 2015 செப்., 10ல் வழங்கப்பட்ட தீர்ப்பில், இறந்தவர்கள் குடும்பத்திற்கு, 88 லட்சத்து, 54 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை, 7.5 சதவீத வட்டியுடன், அரசு போக்குவரத்து கழகம் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.


பின்னர் கடந்த, 2017 ஜனவரி, 5ல் வழங்கிய தீர்ப்பில், பிப்., 3க்குள், 25 சதவீத வட்டியுடன் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், போக்குவரத்து கழக நிர்வாகம், 2017 ஜூலை 29ல், 33 லட்சத்து, 83 ஆயிரம் ரூபாயை மட்டும் நீதிமன்றத்தில் செலுத்தியது. மீதித் தொகையை செலுத்தாததால் கடந்த, 9ல் ஒரு கோடியே, 12 லட்சத்து, 11 ஆயிரம் ரூபாயை வட்டியுடன் செலுத்த வேண்டும் என, நீதிபதி கலாவதி உத்தவிட்டார். இதையடுத்து, அமீனா உதவியுடன் வக்கீல் முருகன், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து, நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X