வாங்க சாப்பிட போகலாம்...

Added : ஜூலை 17, 2018
Advertisement
வாங்க சாப்பிட போகலாம்...

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரம் சுவை மொழியையும் கற்றுத் தருகிறது. இங்கு வரும் வெளியூர் வாசிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் வெஜ், நான் வெஜ் ஓட்டல் எங்கு இருக்கு... எப்படி போக வேண்டும் என்பது முக்கிய கேள்வியாக இருக்கும். நம்மவர்களும் அவர்களது கையைப் படித்து கொண்டு போய் விடாத குறையாக வழி சொல்வார்கள். இந்த உணவில் தான் உலகமே அடங்கியுள்ளது. மதுரையில் நல்ல உணவுக்கு எப்போதும் பஞ்சம் இருக்காது என்பது முக்கிய விஷயம்.

'மதுரை காஞ்சியில்' நாளங்காடி-பகலில் திறந்திருக்கும் கடை, அல்லங்காடி- இரவில் திறந்து இருக்கும் கடை என்று குறிப்பிடுவதை போல ஒரு காலத்தில் மதுரையில் கையேந்திபவன்கள், புரோட்டா கடைகளில் இருந்து எழும் கொத்து புரோட்டா போடும் சத்தமும், சுவைக்கு உழைத்த குரல்களின் சத்தமுமே இருட்டை விரட்டி விடியலைத் தொட்டுவிடச் செய்யும். துாங்கா நகரம் மல்லிகை மணம் போல உணவுகளாலும் பெயர்பெறுகிறது.

அணா காசு காலம் :
தெற்குமாசிவீதி - மேலமாசி வீதி சந்திக்கும் இடத்தில் பெயரிடப்படாத ஒரு ஓட்டல் இருந்தது. சவுராஷ்டிர மொழியில் 'தொளிபளார்' என சொல்லப்படும் இட்லி இங்கு பிரபலம். பெரிய அண்டாவில் 100 இட்லிகள் வேகவைக்கப்படும். மல்லிகை பூ போல இருக்கும். ஒரு அணாவுக்கு ஒரு இட்லி. நாலணாவுக்கு ஒரு இட்லி என இரண்டு அளவுகளில் இது கிடைக்கும். இஞ்சி, கார சட்னி, நெய்பொடி மட்டுமே. சாம்பார் கிடையாது. மதுரைக்கு காமராஜர் வரும் போது நாலணா இட்லியை வாங்கிவர சொல்லி விரும்பி சாப்பிடுவதால் இது பிரபலமாகியிருக்கிறது.

மகால் போன்ற வெளித் தோற்றத்தில் மேலமாசிவீதியில் இருந்தது உடுப்பி போர்டிங் அன்ட் லாட்ஜிங். (இன்று பிரபல ஜவுளிமாளிகை) வெளியூர்களில் இருந்து வரும் ஜமீன்கள், செல்வந்தர்கள் இங்குள்ள நீளமான வராண்டாவில்அமர்ந்து 'துாள் பஜ்ஜி' யும், டவரா செட்டில் சூடுபறக்க மணக்கும் காபியும் குடிப்பதை பெரும் கவுரவமாக நினைப்பார்கள். இங்கு அனைத்து வகை உணவுகள் கிடைத்தாலும் தேங்காய் சட்னியை வெறுமனே சாப்பிடுபவர்கள் ஏராளம். அத்தனை சுவை.

அதே போல தேங்காய் சட்னிக்கு பேமஸ் 'ஆரியபவன் பை-நைட்' ஓட்டல். நைட்ஷோ பார்த்து விட்டு குடும்பத்துடன் வந்து டிபன் சாப்பிடுவதை பார்க்கவே ஆச்சரியமாக இருக்கும். இங்கு பார்சல் வாங்கும் போது, அண்ணே தேங்காய் சட்னியை கொஞ்சம் கூட வையுங்கண்ணே என்ற குரல்களை கேட்கலாம்.

ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள காலேஜ் ஹவுஸ் ரெஸ்டாரன்டில் அன்றைக்கு மதிய சாப்பாடு 1 ரூபாய் 50 காசு. வட்ட கப் காப்பி 10 காசு. மசால்தோசை, கெட்டியான சாம்பார் சாப்பிட்டு வெளியே வந்து யாரிடமாவது பேசினால், காலேஜ் ஹவுசில் சாப்பிட்டு வந்தார்களா என கண்டுபிடித்துவிடலாம். இங்கு 5 ரூபாய்க்கு டோக்கன் வாங்கி, ஒவ்வொரு டோக்னாக கொடுத்து சாப்பிட்டு பாக்கி டோக்கன் இருந்தால் அதை கொடுத்து மீதி காசு வாங்கு வழக்கம் இருந்தது.

மனசில் ருசிக்கும் பழசு :
சக்தி சிவம் தியேட்டர் அருகில் 'ரகுநாத விலாஸ்' போண்டா, தெற்குகோபுரம் எதிரில் 'கேரளா மெஸ்' பூரி கிழங்கு, வடக்கு ஆவணி மூலிவீதி 'சுகுணா விலாஸ்' நெய்தோசை, தெற்குமாசிவீதி 'மாரிமுத்து' புரோட்டா கடை, வெள்ளியம்பலம் பள்ளி பக்கத்து சந்தில் கையேந்திபவன் பெரிய, சின்ன இட்லி, சென்ட்ரல் தியேட்டர் அருகில் 'ஆனந்தபவன்' மட்டன், சிக்கன், அம்மன் சன்னதி நகரா மண்டபம் அருகில் 'மேல்மாடி சாப்பாடு கிளப்', டவுன்ஹால்ரோடு 'இன்டோ சிலோன்' ஓட்டல் சுக்கா வருவல், ஆப்பாயில், 'சிலோன் தெளபிக்' ஓட்டல் புரோட்டா பாயா, மேலமாசிவீதி 'அப்சரா' ஓட்டல் நெய் இட்லி, காமராஜர் ரோடு ரேவதி டிபன் சென்டர் புளியோதரை, சுண்டல், தானப்பமுதலி தெரு சுக்கு மல்லி காபி வடை, மேலஅனுமந்தராயர் கோயில் அருகில் 'கோமதி ஐயர்' ஓட்டல் பூரிக்கு சின்ன வெங்காயம் கிழங்கு, 'சீனிவாச கபே' யின் வெள்ளையப்பம், ஊத்தப்பம், 'செல்வம்' டிபன் சென்டரில் சைவ புரோட்டா, மேலமாசிவீதி அருகில்'மெட்ராஸ்' ஓட்டல் இடியாப்பம், பாயா, 'கணேஷ் மெஸ்' சாப்பாடு.

இவற்றை எல்லாம் மறக்க முடியுமா? இப்படி தேடி தேடி போய் விதவிதமா ருசித்து, ரசித்து சாப்பிட்டவர்களின் சின்னபட்டியல் தான் இது. இன்னும் அதிகம் உண்டு. மேலே சொன்ன உணவகங்களை இப்போது நீங்கள் எங்கு தேடினாலும் காணக் கிடைக்காது. இந்த உணவகங்கள் இருந்த இடங்களும் மறைந்து வருகின்றன. ஆனால் அந்த உணவுகளின் சுவை எப்போதும் ஞாபகப்படுத்தும்.

மதுரையில் பெரிய ஓட்டல்கள் சின்ன உணவகங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்தந்த உணவகங்களுக்கு என 'சுவை மந்திரம்' அந்த காலம் முதல் இந்த காலம் வரை உள்ளது. அது என்ன? அந்த இடம் எது? என தேடிச் சென்று சாப்பிட்டவர்கள், தாங்கள் சாப்பிட்டு சப்பு கொட்டிய நாக்கு தான், மற்றவர்களிடமும் 'நல்லாயிருக்கு... செமயாயிருக்கு... சூப்பர்' என்று கொட்டம் அடிக்கும். அதுவே இந்த ஓட்டல்களின் சுவை வெளியூர்களிலும் அறியப்பட காரணமாயிற்று.

படமும் பாடமும் :
பல சினிமாக்களில் சாப்பிடும் காட்சிகள், சாப்பாடுகள் காட்சியாக வருகின்றன. எம்.ஜி.ஆர்., இரண்டு வேடங்களில் நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்தில் ஒரு ஓட்டலுக்கு எம்.ஜி.ஆர்., சாப்பிட செல்லும் காட்சியில், அவர் உட்கார்ந்ததும் சர்வர் வந்து கேட்பார். 'சாருக்கு என்ன வேணும்?...' 'என்ன இருக்கு?' 'இட்லி, வடை, தோசை, ஊத்தப்பம், உப்புமா, பொங்கல், மசாலா, சூடா இருக்குமுல்ல?...' நல்ல சூடு சார்' 'நாலு இட்லி, ஆறு ஊத்தப்பம், மூணு மசாலா தோசை,..''இவ்வளவு தானா? இன்னும் இருக்கா..? ' 'சாப்பிடும் போது கேட்டு வாங்கிக்கிறேன்...' சர்வர் கையில் உணவுகளுடன் வந்ததும்... 'என்ன பார்க்கிற... எடுத்து வையேன்... ' 'அப்புறம் என்ன? காபியா, டீயா, ஓவலா, ஹார்லிக்சா?...''நாலு உப்புமா, ஆறு பொங்கல், வடை இருக்கா...?'

இப்படி. தொடர்ந்து காட்சிகள் சுவாரஸ்யமாக நகரும். அடுத்த காட்சி... இன்னொரு எம்.ஜி.ஆர்., வந்து அதே இடத்தில் உட்கார்ந்த உடன் சர்வர்' 'அப்புறம் என்ன?' என்பார். 'இரண்டு இட்லி....' 'மறுபடியும் முதல்லயிருந்தா...?' ஒரு முறையாவது இப்படி சாப்பிடணும் என ஆசைப்படுபவர்கள் நிறையே பேர்... அதில் நீங்களும் ஒருவராய் இருக்கலாம்!

-ஆர்.கணேசன்,எழுத்தாளர், மதுரை,98946 87796

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X