சிந்தையை கவரும் சிவகங்கை| Dinamalar

சிந்தையை கவரும் சிவகங்கை

Added : ஜூலை 18, 2018
Advertisement
 சிந்தையை கவரும் சிவகங்கை


தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. ஆன்மிக, கலாசார, பண்பாட்டு சுற்றுலாவுக்கு ஏற்ற மாவட்டம் என்றாலும் வெளிஉலகால் அதிகம் கவனிக்கப்படாமல் உள்ளது.இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தொடக்க நிலையில் ஆங்கிலேயரை எதிர்த்த மருது சகோதரர்களும் சிவகங்கை வேலு நாச்சியாரும் தமிழக வரலாற்றில் மங்காத இடம் பிடித்தவர்கள். சிவந்த நீர்நிலைகளையுடைய ஊர் என்று காரணப் பெயர் பெற்ற சிவகங்கையில் (செவசங்கை - செவ - சிவந்த சங்கை- நீர்நிலை) தமிழ்நாட்டின் நுண்கலைகள் வளர்க்கப்பெற்றுள்ளன. சிவகங்கை என்றவுடன் தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு ஒக்கூர் மாசாத்தியார், கணியன் பூங்குன்றனார், கம்பர் நினைவுக்கு வருவர். ஆன்மிக அன்பர்களுக்கு பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, நாட்டரசன்கோட்டை, காளையார்கோயில் போன்ற புகழ் பெற்ற திருக்கோயில்கள் கண்முன்னே தோன்றும். இசைக் கலைஞர்களுக்கு ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடிய தேவாரப்பாசுரங்களும், மழவை சிதம்பரபாரதி, கவிகுஞ்சரபாரதி, சுத்தரானந்தபாரதி, கோடீஸ்வர ஐயர், குன்றக்குடி கிருஷ்ணய்யர் போன்றோரின் தமிழிசைப் பாடல்கள் செவிகளில் ஒலிக்கும். கட்டடக் கலைகளில் நகரத்தார்களின் அரண்மனை வீடுகள் சிந்தையைக் கவர்ந்து சிறப்புடன் திகழ்கின்றன.சிவகங்கையில் 'கிராபைட்' என்ற கனிமம் அதிக அளவில் கிடைக்கக் காணலாம். மானாமதுரை மண் என்பது 'கடம்' என்ற ஒரு இசைக் கருவி செய்யப் பயன்படுகிறது. மண்ணால் செய்யப்படுகின்ற இக்கருவி குடம் போலவே இருந்தாலும் இதில் இசை எழுகின்ற அதிசயம் உன்னதமானது.

மாதிரி கிராமம்

இந்தியாவின் மாதிரி சாதனை கிராமமாக தேர்வு செய்யப்பட்ட குன்றக்குடி பல சிறப்புகளை உடையது. காலத்தால் முந்திய கல்வெட்டுக்களும் சிற்பங்களும் நிறைந்த கோயில் குன்றக்குடி முருகன் கோயில். குன்றக்குடி ஆதீனமும், இங்கு பல சமுதாயப் பணிகளை சமயப் பணிகளோடு செய்து வருகின்றது. குன்றக்குடி அடிகள் சொற்பொழிவுகளாலும், ஜாதி, மத பேதமற்ற தொண்டுகளாலும், உலகப் புகழ் பெற்றவர். குன்றக்குடியில் நடைபெறும் ஆடிக்கார்த்திகை திருப்படி திருப்புகழ் விழாவும், சித்திரை மாதம் நடக்கும் குருபூஜை தமிழ்நிகழ்வும் காணக் கிடைக்காத காட்சி. இவ்வூரைச் சார்ந்த குன்னக்குடி வைத்தியநாதனின் வயலின் இசை எல்லோராலும் விருப்பமாக கேட்கப்பட்ட இன்னிசை.சிவகங்கை, திருப்புத்துார், மானாமதுரை, காரைக்குடி, இளையாங்குடி, காளையார் கோயில் என 6 தாலுகாவிலும் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான கட்டிடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலைகளுக்குரிய உதாரணமாக திகழும் செட்டிநாடு அரண்மனைகள் பிரசித்தம்.நான்காம் நுாற்றாண்டைச் சேர்ந்த குடவரைக் கோயில் பிள்ளையார்பட்டி கோயில். இங்கு தமது வலக்கரத்தில் சிவலிங்கம் வைத்து வடக்கு நோக்கி இருந்து சிவபூஜை செய்கிறார் விநாயகர்.
கல்வெட்டுக் கலை

தமிழகத்தில் 150 வருட காலமாக காகிதமும் அச்சு இயந்திரமும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அச்சு இயந்திரத்தை 16ம் நுாற்றாண்டில் போர்ச்சுக் கீசியரும் 18ம் நுாற்றாண்டில் ஜெர்மன் நாட்டுப் பாதிரியார் சீசன் பால்கும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தினர்.கடைச்சங்க காலத்தில் இருந்து 18ம் நுாற்றாண்டு வரையான கால இடைவெளியில் தமிழகத்தின் அரசியலை நடத்தி வந்த சேர, சோழ பாண்டியர்களும், பல்லவர்களும், நாயக்க மன்னர்களும் சேதுபதி மன்னர்களும் தங்களது அரசு ஆணைகளையும், கொடைகளையும் அறிவிப்பதற்குக் கல்லையும், செம்பையும் பயன்படுத்தினர். காலத்தால் அழியாது நின்று மக்களுக்கு அவை வரலாற்று ஆவணங்களாக விளங்க வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோள். அதனால் ஆணைகளையும், தீர்ப்புரைகளையும் கல்லிலும், செம்பிலும் வெட்டி வைத்தனர். இவை முறையே கல்வெட்டுக்கள் என்றும் செப்புப் பட்டயங்கள் அல்லது செப்பேடுகள் என்றும் வழங்கப்பட்டன.கல்வெட்டுக்கள் பெரும்பாலும் நாட்டின் பொது இடங்களான திருக்கோயில்கள், திருமடங்கள், சத்திரங்கள் மற்றும் பொது மக்கள் கூடுகின்ற அங்காடிகள் போன்ற இடங்களில் கல்லில் பொறிக்கப்பட்டன. செப்பேடுகள் இரண்டு பிரிவுகளாகச் செப்புத் தகடுகளில் பொறிக்கப்பட்டும் ஒன்று அதனை வழங்கிய மன்னரிடமும், மற்றொன்று அதன் தானத்தை பெற்றுக் கொண்ட அந்தணர் புலவரிடமும், மடாதிபதிகளிடமும் இருந்து வந்தன. அபூர்வ கல்வெட்டுகள் பலவற்றை சிவகங்கை மாவட்டத்தில் காணலாம்.

மொழியின் வரி வடிவ வளர்ச்சி
கல்வெட்டுக்கள் அன்றைய வழக்கிலிருந்த தமிழ் பிராமி எழுத்து வடிவிலும், வட்டெழுத்திலும் பின்னர் கிரந்த எழுத்திலும் இன்றைய தமிழ் வரிவடிவிலும் பொறிக்கப்பட்டு வந்தன. இந்தக் கல்வெட்டுக்களில் வாசக வரி வடிவங்களிலிருந்து நமது தமிழ் மொழியின் மூல மொழியான தாமிழி என்றதொரு வடிவில் அமைந்து பின்னர் பிராமி, தமிழ் பிராமி, வட்டெழுத்து என கால வேறுபாடுகளினால் மொழியின் வரி வடிவ வளர்ச்சியினை அறிந்து கொள்வதற்கு உதவுகின்றன.இவைகளில் சிறப்பானவை எட்டாம் நுாற்றாண்டைச் சார்ந்த மாறன் சடையன் என்ற பாண்டிய மன்னரது காலத்தவை. திருப்புத்துார் திருக்கோயிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இன்றைய தமிழ் மொழியுடன் சமஸ்கிருதச் சொற்கள் கலந்த கிரந்த எழுத்துக்கள் என்ற வகையான கல்வெட்டுக்களாக காணப்படுகின்றன. இன்று கிடைத்துள்ள தமிழ்க் கல்வெட்டுக்களில் மிகவும் பழமையானது, ராமநாதபுரம் மாவட்டம் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பூலாங்குறிச்சிக் குன்றில் பொறிக்கப்பட்டுள்ள 6ம் நுாற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டுக்களாகும். இதனை ஒத்த தொன்மையான செப்பேடு எனக் கருதப்படுவது பராந்தக சோழன் 10ம் நுாற்றாண்டில் திருத்தணிகை சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வழங்கிய தான சாசனமான திருவேளஞ்சேரி செப்பேடு ஆகும். இந்தச் செப்பேட்டின் ஒரு பகுதி சமஸ்கிருத மொழியிலும், மறுபகுதி தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அமைந்திருப்பது சேவுகப் பெருமாள் ஐயனார் ஆலயம். இந்த ஆலயத்தின் பயன்பாட்டிற்காக சேதுபதி மன்னர் ஆலம்பட்டி கிராமத்தை முழுமையாக தானம் வழங்கி இருப்பதை கல்வெட்டு தெரிவிக்கின்றது. இந்த பகுதி திருமலை ரெகுநாத சேதுபதி காலத்தில் சேதுபதி சீமையின் வடபகுதியாக இருந்தது என்பதையும் கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது.இலக்கியச்சுவையற்ற பாண்டிய மன்னனுக்கு பாடம் புகட்டிய இடைக்காட்டுச் சித்தர் கோயில் உள்ளதும், இடைக்காட்டூர் என்ற ஊரும், சிங்கம்புணரியில் உள்ள முத்துவடுகநாதசாமி சித்தர் சன்னதியும் வணங்கப்பட வேண்டியவை.குறிப்பாக கடையேழு வள்ளல்களில் ஒருவரான 'பாரி' ஆண்டது பறம்புமலை. செல்வச் செழிப்புடன் இயற்கை வளமே அரணாக இருந்ததை இலக்கியங்கள் விளக்குகின்றன. தேவார காலத்தில் ஞான சம்பந்தரால் பாடப் பெற்ற இத்திருக்கோயில் 'கொடுங்குன்றம்' என்றழைக்கப்படுகிறது. அதே போல, திருப்புத்துார் திருத்தளிநாதர் திருக்கோயிலில் அப்பர், சம்பந்தர் பாடிய தேவாரப்பாடல்கள் பண்ணும் தாளமும் நிறைந்தவை. இக்கோயிலின் யோக பைரவர் வழிபாடும், வைரவன்பட்டி பைரவர் வழிபாடும் சிவகங்கை மாவட்ட மக்களின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகும்.-முனைவர் தி.சுரேஷ்சிவன்செம்மொழி இசைத்தமிழ் அறிஞர்மதுரை. 94439 30540



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X