சிறந்த மருத்துவ மனைகளின் அவசியம் : டாக்டர் எஸ். ஏகநாதபிள்ளை

Added : ஜூலை 22, 2018 | |
Advertisement
இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் சிறிதும் பெரிதுமாக எண்ணற்ற தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகள் எல்லாம் பெரு நகரங்களையும், நகர்ப்புறங்களையும் மட்டுமே சார்ந்திருக்கின்றன. கிராமப்புறங்களை இவை இன்னும் எட்டிப் பார்க்கவேயில்லை. இது எதை காட்டுகிறது? மக்கள் அனைவரும் நோயாளிகளாகவே இருக்கிறார்கள் என்பதையா? இல்லை, இதற்கு
சிறந்த மருத்துவ மனைகளின் அவசியம் : டாக்டர் எஸ். ஏகநாதபிள்ளை

இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் சிறிதும் பெரிதுமாக எண்ணற்ற தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகள் எல்லாம் பெரு நகரங்களையும், நகர்ப்புறங்களையும் மட்டுமே சார்ந்திருக்கின்றன. கிராமப்புறங்களை இவை இன்னும் எட்டிப் பார்க்கவேயில்லை. இது எதை காட்டுகிறது? மக்கள் அனைவரும் நோயாளிகளாகவே இருக்கிறார்கள் என்பதையா? இல்லை, இதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன.


பொருளாதார வசதி இல்லைஇந்தியாவில் 75% மக்கள் சரியான மருத்துவ வசதிகளைப் பெறும் வழிகளை நெருங்க இயலாமல் இருக்கின்றனர் என்றும், குறிப்பாக கிராமப் புறங்களில் 65% மக்கள் மருத்துவ வசதிபெறும் அளவு போதிய பொருளாதாரம் இல்லாமல் இருக்கின்றனர்.


தமிழக கிராமங்கள் பலவற்றில் அடிப்படை மருத்துவ வசதியைப் பெற சுமார் 25-30 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டியிருப்பதும், அதற்கு போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருப்பதும் யதார்த்தம்..
ஆரம்ப சுகாதார நிலையங்கள்இன்றும், கீழ்த்தட்டு மக்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகளுக்கு ஒரே ஆதாரமாக விளங்குபவை அரசு நிர்வகிக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சில இடங்களில் அமைந்திருக்கிற கிராமப் புற அரசு மருத்துவமனைகள், மற்றும் நகர்புற அரசு தலைமை மருத்துவமனைகள் ஆகியவைதான். இதற்கு மேலாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சிறப்பு சிகிச்சைகளை வழங்குகின்றன. இம்மருத்துவமனைகளில் தனிச்சிறப்பே எல்லா மருத்துவ வசதிகளும் மக்களுக்கு இலவசமாகவே கிடைக்கின்றன என்பதுதான்.முந்தய காலங்கள் போலல்லாமல் இன்று அரசு மருத்துவமனைகள் போதிய அளவு மருந்துகள், உபகரணங்கள், அறுவை சிகிச்சை வசதிகள், மகப்பேறு வசதிகள், உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்டு செயல்படுகின்றன. மருத்துவ சேவை பெருமளவு சிறப்பாகவே இருக்கிறது என்பதை இன்னும் அரசு மருத்துவமனைகளை நாடும் மூத்த குடிமக்கள் அனைவரும் அறிவர்.
புகார்கள் வர காரணம்ஆகவே அரசு மருத்துவமனைகளின் சேவையை ஒட்டுமொத்தமாக குறைகூறுவது என்பது ஏற்புடையது அல்ல. இன்றைய சூழலில் சிறப்பான மருந்துகள் மட்டுமல்லாது, சிறப்பு மிக்க தகுதிவாய்ந்த, திறமையான மருத்துவர்களின் சேவையும் அரசு மருத்துவமனைகளில், குறிப்பாக எல்லா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கிடைக்கின்றன என்பதையும் யாரும் மறுக்க இயலாது.ஆயினும் அரசு மருத்துவமனைகள் குறித்த புகார்கள் வந்தவண்ணமே உள்ளன. அவற்றின் அடிப்படை காரணங்களை ஆராய்ந்தால் அவை பெரும்பாலும் அரசியல் தலைவர்கள், அமைச்சகர்கள், அரசு உயரதிகாரிகள் இவர்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையினால் தான் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.முந்தைய நாட்களில் நாட்டின் எவ்வளவு பெரிய அரசியல் தலைவராக இருந்தாலும் - முதலமைச்சர் உட்பட எல்லோரும் மற்றும் பெரிய உயரதிகாரிகளும் - அரசு முதன்மை செயலர் முதல் கீழ்மட்ட அலுவலர் வரை எல்லோரும் தங்கள் மருத்துவ தேவைகளுக்காக அரசு மருத்துவ மனைகளையே நாடினர். அதனால் அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதில் ஒரு ஆர்வம் இருந்து வந்தது. ஆனால் இன்ற வார்டு கவுன்சிலர்கள் கூட அரசு மருத்துவமனைக்கு போவதை தகுதி குறைவாக நினைக்கின்றனர். ஆகையினால் மக்கள் பிரதிநிதிகளான இவர்கள் யாரும் அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தவோ மற்றும் மக்கள் சேவையை சீர்ப்படுத்தவோ ஆத்மார்த்தமாக நினைப்பதுமில்லை.
அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சிந்திக்கட்டும்ஒரே ஒரு மாதம் அனைத்து அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்வது என்று தீர்மானிக்கட்டும். அதன் பிறகு இம்மருத்துவமனைகளின் தரம் எவ்வளவு மேன்மையாக இருக்கும் என்பதையும் அவை எவ்வளவு சிறப்பாக இயங்கும் என்பதையும் காண முடியும்.இவ்வளவுக்கும் மேலாக, இன்னும் தகுதியும் திறமையும் வாய்ந்த சிறப்பு நிபுணர்கள் ஏராளமான பேர் அரசு மருத்துவமனைகளில்தான் பணிபுரிகின்றனர் என்பதும், அவர்களுடைய திறமைகளும், செயல்பாடுகளும், சாதனைகளும் தனியார் மருத்துவமனைகளைப்போல் விளம்பரப்படுத்துவதில்லை என்பதும் யதார்த்தம். ஏராளமான நோயாளிகளை கவனிக்கிற காரணத்தாலும், பெரிய அளவில் அறுவை சிகிச்சைகள் செய்வதாலும் அவர்கள் திறமை மிக உயர்ந்ததாகவே இருந்து வருகிறது. எந்தவொறு தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் இந்த அளவு பெரிய எணணிக்கையில் நோயாளிகளைப் பார்த்து சிகிச்சை அளிப்பது அரசு மருத்துவமனைகள் தாம்.குறைகளைத் தாண்டிய சேவைஒருசில மருத்துவர்கள் மீதும், செவிலியர் மற்றும் இதர பணியாளர்கள் மீதும் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் வருவது உண்மை. இத்தகைய மனிதர்கள் எல்லா துறைகளிலும் சிலர் உண்டு. மருத்துவத்துறையும் அதற்கு விதி விலக்கல்ல. இதையெல்லாம் தாண்டி சிறந்த சேவை தொடர்ந்து செய்யப்பட்டே வந்திருக்கிறது; இன்றும் செய்யப்பட்டு வருகிறது.அரசு மருத்துவமனைகள் சுத்தமாக இல்லை என்பது என்றும் பரவலாக கூறப்படும் குற்றச்சாட்டு இதற்கு காரணங்கள் இரண்டு. முழுமுதற்காரணம் அரசு இயந்திரத்தின் அலட்சியம்தான். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் மருத்துவமனையில போதுமான கழிப்பறை வசதிகளும் தண்ணீர் வசதியும் இல்லை. மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை.அரசு மற்றும் பொதுமக்கள் கவனத்திற்குஇவற்றுக்கெல்லாம் முன்னுரிமை அளித்து, தற்காலிக ஏற்பாடாக இல்லாமல், நிரந்தமான தீர்வுகளை செய்து கொடுத்து, அவற்றை தேவையான பணியாளர்கள் மூலம் சிறப்பாக நிர்வாக செய்தால் நிலைமை சீரடையும்; மருத்துவமனையும் பெருமை பெறும். இவற்றையெல்லாம் செய்ய வேண்டியது யார்? அரசும், துறை சார்ந்த அமைச்சரும், அதிகாரிகளும்தான்.இரண்டாவது காரணம், சுற்று சூழல், சுத்தம் குறித்து நம் மக்களின் பொறுப்பற்ற நடைமுறைகளும் மருத்துவமனை சுத்தமாக இருப்பதற்கு ஓர் முக்கிய காரணம். ஆனால் அடிப்படை வசதியே செய்து தராமல் அவர்களை குறைகூற யாருக்கும் தார்மீக உரிமையில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.மருத்துவர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை என்பது மற்றொரு குற்றச்சாட்டு. புள்ளிவிவரங்களும் இதையே உறுதி செய்கின்றன. இதற்கும் அரசு தரப்பில் திட்டமிடுதலில் உள்ள தவறுகளே காரணம். உதாரணமாக அரசு மருத்துவமனையில் புதியதாக ஒரு விரிவாக்க கட்டிடம் அமைத்தால், கட்டிடம் மட்டும் கட்டிவிட்டு அதற்கு தேவையான அடிப்படை சாதனங்களான தளவாடங்கள், உபகரணங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் இதர பணியாளர் பணியிடங்கள் போன்றவற்றை சரியாக திட்டமிடாமல், இருக்கிற தளவாடங்கள், பர்னிச்சர், உபகரணங்கள் மற்றும் மருத்துவர்கள், பணியாளர்களை வைத்தே சமாளிக்கும்படி நிர்பந்தப்படுத்துவது ஒரு முக்கிய காரணம். இது குறித்து மருத்துவர்களும், பணியாளர்களும் மனதில் ஆழ்ந்த அதிருப்தி கொண்டாலும் பல்வேறுபட்ட காரணங்களால் வெளிப்படையாக பேசுவதில்லை. குறைவான பணியாளர்களை வைத்துக் கொண்டு வேலைகளை சமாளிக்கும்போது, அவர்கள் மீது குற்றம் குறைகள் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. ஆகவே தேவையான மருத்துவர்களையும் பணியாளர்களையும் பணியமர்த்தி அவர்கள் செயல்பாடுகளில் தவறுகள் இருந்தால் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதுதான் சரியான அணுகுமுறை.இத்தகைய விஷயங்களை திட்டமிடும்போது, பொதுமக்கள் மீது அக்கறையுள்ள, நல்ல தெளிந்த திறமையுள்ள மூத்த அரசு மருத்துவர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் துணையோடு செய்யப்படவேண்டும். அடித்தட்டு மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப போதிய அளவு மருத்துவர், செவிலியர், இதர பணியாளர் ஆகியோரை பணியமர்த்தி அவர்களது சேவை மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
அரசு கல்லூரி மருத்துவர்கள்சமீப காலம் வரை, அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற மருத்துவர்கள் பெரும்பான்மையானோர் அரசு மருத்துவமனையில் ஆர்வத்துடன் சேர்ந்தனர். அப்படி மருத்துவர்களை ஈர்பதற்காக அரசு பல சலுகைகளை வழங்கியது. உதாரணமாக பட்ட மேற்படிப்புக்கான தேர்வுகளில் அரசு மருத்துவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு இருந்து வந்தது. இதன் பயனாக பெரும்பான்மையான சிறப்பு பட்டம் பெற்று பணியாற்றி வந்தனர். ஆகவே சிறப்பு தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள் எல்லா துறைகளிலும் நிறையவே இருந்தார்கள். இப்போது அந்த சலுகை - இடஒதுக்கீடு - இல்லை. இதன் காரணமாக இன்னும் கொஞ்ச நாட்களில் அரசு பணிக்கு ஆர்வமாக வரும் இளம் மருத்துவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்து போகும் அபாயம் உள்ளது. மேலும் சிறப்பு துகதி பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கை அரசு பணயில் குறைந்து போகும் நிலையும் ஏற்படலாம். தொலை நோக்குப் பார்வையில் பார்த்தால் அரசு மருத்துவ பணிக்கு மருத்துவர்கள் கிடைப்பது அரிது என்ற நிலை வரலாம். அரசு மருத்துவ சேவையில் இது ஒரு பெரும்பின்னடைவை ஏற்படுத்தி இந்த சேவை ஸ்தம்பிக்கிற நிலையும் வரலாம். இதற்கு மேலாக அரசு பணியில் மருத்துவர்கள் முன்பு இருந்துவந்த ஓய்வூதியம் கடந்த 15 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்டது என்று ஓர் குறைபாடு. இந்த குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்யும் விதமாக அரசு பணியில் சேரும் இம் மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பிற்கான தேர்வுகளில் ஏதேனும் ஒரு வகையில் சலுகை அளித்து அரசு பணியில் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்கள் சேர வழிவகை செய்ய வேண்டும்.தனியார் மயமாக்கியது தவறுநம் மத்திய அரசும் அரசியல்வாதிகளும் அறிந்ததே செய்த மிகப்பெரிய தவறு. மருத்துவ கல்வியை தனியார் மயமாக்கியதுதான். அந்த முடிவில் பெரும்பாலும் அரசியல் பெரும்புள்ளிகளின் சுயநலம் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது. மக்கள் நலம் பின்தள்ளப்பட்டது. இந்த தனியார் மருத்துவ கல்லூரிகளில் பல லட்சங்கள் முதல் கோடிகள் வரை பணம் செலுத்தி படித்த மாணவர்கள் அரசு பணிக்கு வருவார்களா? என்பது மற்றொரு மிகப்பெரிய கேள்வி.அரசு மருத்துவ கல்லூரிகள் தனியார் கல்லூரிகளை விட பன்மடங்கு சிறப்பு வாய்ந்தவை. இங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை (Clinical Material) தனியார் கல்லூரிகளில் இல்லை என்பதும், தனியார் கல்லூரிகளில் பணம் செலுத்தி சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மருத்துவ மாணவர்கள் தங்களை பரிசோதிப்பதை விரும்புவதில்லை என்பதும் யதார்த்தம். மேலும் அரசு கல்லூரிகளில் இருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் தரமும் சிறப்பானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகவே இந்த காரணங்களால் அரசு கல்லூரிகளில் படித்த மருத்துவர்களை அரசு பணியில் அமர்த்துவது அதிக நன்மை பயக்கும்.அரசு மருத்துவமனைகளின் தரத்தையும் சேவையையும் மேன்மேலும் உயர்த்தி பொது மக்கள் அனைவரும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் தங்கள் மருத்துவ தேவைகளுக்கு அரசு மருத்துவமனைகளை நாடும்படி செய்வது நம் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாளிகள் கையில் உள்ளது.
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைதமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் துவங்கப்படும் என்ற நற்செய்தி இப்போது வந்துள்ளது. தமிழக மக்களுக்கு ஓர் வரப்பிரசாதம்.அரசு எடுக்கிற எல்லா முற்போக்கு நலத்திட்டங்களையும் அவற்றின் நன்மை தீமைகளை ஆராயாமல், விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையின்றி பொத்தமா பொதுவாக கண்ணை மூடிக்கொண்டு எதிர்த்து, மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் - முற்போக்குவாதிகள், பொதுநலவாதிகள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு அரசியல் செய்யும் தன்னல அரசியல்வாதிகள் மற்றும் தன்னல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதை அதிஷ்டவசமாக நேரடியாக எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யவில்லை என்பதே ஒரு பெரிய நிம்மதி.எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதன் மூலம் தென்தமிழக மக்கள் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை இலவசமாக அல்லது மிகக் குறைந்த செலவில் பெற்றுக் கொள்ள முடியும். இந்த மருத்துவக் கல்லூரியில் ஆண்டுதோறும் 100 மருத்து மாணவர்கள் சேர்ந்துக் கொள்ளப்படுவர். அதில் தமிழக மாணவர்களும் தங்கள் தகுதிக்கேற்ப இடம் பெறுவர். ஆண்டுதோறும் நாட்டுக்கு 100 நல்ல மருத்துவர்கள் கிடைப்பார்கள். அதைத்தவிர பெருமளவில் செவிலியர்கள் இதர தொழில்நுட்ப பணியாளர்கள் என்று பலவேறுபட்ட பணியாளரையும் உருவாக்கப்படுவர்.'எய்ம்ஸ்' தன்னாட்சி பெற்ற அமைப்பு என்ற காரணத்தால், நிர்வாகத்திலோ அல்லது நிதி மேலாண்மையிலோ அரசியல்வாதிகளின் தலையீடு இருக்காது என்பதும் ஒரு முக்கியமான நன்மை.சாமானிய மக்கள் தரமான மருத்துவ உதவி பெற நல்ல அரசு மருத்துவமனைகளும் எய்ம்ஸ் போன்ற சிறப்பு மருத்துவமனைகளும் அவசியம்.

---------------------

டாக்டர் எஸ். ஏகநாதபிள்ளை

முன்னாள் பேராசிரியர்

மதுரை மருத்துவ கல்லூரி மற்றும் ராஜாஜி அரசு மருத்துவமனை,

மதுரை - 625 020

போன்: 0452 - 2681365, மொபைல்: 98421 68136


Email: ahanathapillai@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X