போராட்டங்களுடன் முதல் படம் : இயக்குனர் சந்திரா| Dinamalar

போராட்டங்களுடன் முதல் படம் : இயக்குனர் சந்திரா

Added : ஜூலை 22, 2018 | |
கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகம். குறிப்பாக பெண் கதாபாத்திரங்களை பெயரளவிற்கு மட்டுமே திரையில் காட்டிவந்த நிலையில், திரைக்கு பின்னே இருந்தும் பல பெண் படைப்பாளர்கள் சினிமாவில் சாதித்து வருகின்றனர். அந்த வரிசையில் எழுத்து மற்றும் சினிமா துறையில் ஜொலிக்கும் குறிப்பிட்ட படைப்பாளர்களில் தேனி கூடலுார் இயக்குனர் சந்திரா
போராட்டங்களுடன் முதல் படம் : இயக்குனர் சந்திரா

கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகம். குறிப்பாக பெண் கதாபாத்திரங்களை பெயரளவிற்கு மட்டுமே திரையில் காட்டிவந்த நிலையில், திரைக்கு பின்னே இருந்தும் பல பெண் படைப்பாளர்கள் சினிமாவில் சாதித்து வருகின்றனர். அந்த வரிசையில் எழுத்து மற்றும் சினிமா துறையில் ஜொலிக்கும் குறிப்பிட்ட படைப்பாளர்களில் தேனி கூடலுார் இயக்குனர் சந்திரா முக்கியமானவர். அவர் 'தினமலர் ' சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக அளித்த பேட்டி:

* உங்களை பற்றி...பிளஸ் 2 வரை கூடலுாரில் படித்தேன். திருமணம் முடிந்து சென்னைக்கு சென்று சட்டம் படித்தேன். கணவர் சுந்தர், ஒரு மகள், மகன் உள்ளனர்.

* எழுத்தின் மீது ஆர்வம் வர காரணம்?பள்ளி காலம் முதலே கவிதைகள் எழுதுவேன். 2000ம் ஆண்டில் 2 சிறுகதைகள் மட்டுமே எழுதி இருந்தேன். சினிமா துறைக்கு சென்ற பிறகு தான் நிறைய கதைகள் எழுத துவங்கினேன். 3 சிறுகதை தொகுப்புகள், 2 கவிதை தொகுப்பு நுால்கள் எழுதி உள்ளேன். இதற்கு பல்வேறு விருதுகளும், பரிசுகளும் கிடைத்தன.

* உங்களின் எழுத்து யதார்த்தமாக உள்ளதே?வாழ்க்கையில் இருந்து கதைகள் பிறக்கின்றன. தேனி மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் சுற்றி திரிந்த காலங்களை அசைபோடுகையில், நிஜ கதைகள் தான் என் பேப்பரில் நிறைந்து விடுகிறது. பிறகு சினிமாவிற்கு வந்த பின், அதில் கிடைத்த அனுபவங்களை கொண்டும் எழுதினேன்.

* சினிமாவில் நுழைந்த அனுபவம்...கணவர் நிருபராக உள்ளார். அவருக்கு நிறைய சினிமா நண்பர்கள் உள்ளனர். அவர்கள் கதை விவாதம், சினிமா விமர்சனம் செய்வார்கள். சிறு வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்ததால், அதில் நானும் ஆர்வத்துடன் பங்கேற்பேன். அந்த காலகட்டத்தில் இயக்குனர் பாலாவின் படங்கள் என்னை பாதித்தது. பாலாவிடம் உதவி இயக்குனராக சேர முயன்று, அமீரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன்.

* சினிமாவில் பெண் படைப்பாளர்களின் நிலை...அமீரிடம் பணியாற்றிய போது, 100 ஆண்களுக்கு மத்தியில் நான் சுதந்திரமாக சினிமாவை கற்றுக்கொண்டேன். அதனை தொடர்ந்து ராமிடம் பணியாற்றினேன். பெண்களை அலட்சியமாக பார்க்கும் நெருக்கடிகள் சில நேரங்களில் இருக்க தான் செய்கிறது. மொத்தம் 7 ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றினேன். இருந்தும் என்னுடைய முதல் படத்தை பல போராட்டங்களை கடந்து இயக்கி முடித்துள்ளேன்.

* உங்களின் முதல் படம் பற்றி...படத்தின் பெயர் கள்ளன். இயக்குனர் கரு.பழனியப்பன் ஹீரோ. ஒரு வேட்டைக்காரன் எப்படி திருடன் ஆனான் என்பதை சொல்லும் படம். விரைவில் திரையில் பார்க்கலாம்.

* எழுத்துப்பணி குறித்து...1950 காலகட்டத்தில் வருஷநாடு பகுதியில் மக்கள் நிலங்களுக்காக போராடிய சம்பவங்களை அடிப்படையாக வைத்து நாவல் எழுதி வருகிறேன். நாவல் எழுத அதிக நேரமும், காத்திருப்பும், உழைப்பும் தேவை. அதனால் தான் பெண் கவிஞர்கள் அதிகமாகவும், பெண் நாவலாசிரியர்கள் குறைவாகவும் உள்ளனர். எழுத்து பணி தொடரும். என் எழுத்தின் மூலமாக எழுத்தாளர் சந்திராவை எப்போது வேண்டுமானலும் சந்திக்கலாம்.இவரை பாராட்ட 77088- 72966

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X