அறிவியல் வளர்ச்சியால் விரல் நுனியில் விரும்பிய சினிமாவை ரசிக்கும் அளவுக்கு இன்று நிலைமை வளர்ந்து விட்டது. இதன் அசுர வளர்ச்சியால் பாரம்பரியமான தெருக்கூத்து, நாடகம், பொம்மலாட்டக் கலைகளை தேடத்தான் வேண்டியுள்ளது. இந்நிலையிலும் நாடகத்திற்கு இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் திரள்கின்றனர் என வியப்பில் ஆழ்த்துகிறார் நடிகை பொற்கொடி. மகளிர் மட்டும், தீரன் அதிகாரம் ஒன்று, அறம், டிக் டிக் டிக் படங்களில் நடித்துள்ளார். அம்மா வேடத்தில் நடித்து பெண்கள் மனதில் இடம்பிடித்த இவர் தினமலர் வாசகர்களுக்காக மனம் திறக்கிறார்.
சென்னை லயோலாவில் பி.ஏ. ஆங்கிலம், அண்ணாமலை பல்கலையில் எம்.பி.ஏ., படித்தேன். அமெரிக்கா, சிங்கப்பூரில் 16 ஆண்டுகள் குடும்பத்தோடு வசித்து, 2014ல் சென்னை திரும்பினேன். ஆரம்பத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில்லை. ஏ.வி.எம்., ஸ்டுடியோவில் நடந்த கூத்துப்பட்டறையை காண நண்பர்களுடன் சென்றேன்.அங்கு நடந்த ஒத்திகையில் ஈர்ப்பு ஏற்பட்டது. 'அகமெம்னான்' எனும் கிரேக்க நாடகத்தின் தமிழாக்கத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தேன். நடித்த குறும்படம் ஒன்று மாநில விருது பெற்றது. இதையடுத்து சினிமா வாய்ப்புகளும் வந்தன.இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் வெளிவர உள்ள 'பரியேறும் பெருமாள்' படத்திலும், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பீமராஜா', விஜய் சேதுபதியின் 'திமிரு பிடிச்சவன்' ஆகிய படங்களில் துணை பாத்திரத்தில் நடித்துள்ளேன். கதாபாத்திரங்கள் பிடித்து இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறேன். அதிக உயரம், கம்பீர தோற்றம் இருப்பதால் வில்லி கேரக்டருக்கு சரியாக இருப்பாய் என்கிறார்கள். 'பாகுபலி' ரம்யா கிருஷ்ணன் கேரக்டரில் நடிக்க ஆசை. சினிமாவிற்கும் நாடகத்திற்கும் வித்தியாசம் உள்ளது. சினிமாவில் வழங்கப்பட்ட கேரக்டரில் நடித்தால் போதும். ஆனால் ஒன்றரை மணி நேர நாடகத்தில் அதனோடு அனைவரும் ஒன்றியிருக்க வேண்டும். எவ்வளவு நீள 'டயலாக்'கையும் ஒருமுறை சொன்னால் பேசி விடுவேன். அப்பா தமிழ்ப் பேராசிரியர் என்பதால் சின்ன வயதில் இருந்தே தமிழ் மீது அப்படி ஒரு ஆர்வம். சினிமாவில் நடித்தாலும் நாடகத்தில் தொடர்ந்து இருப்பேன், என்றார். jaanuthil@yahoo.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE