டில்லியில், பிரதமர் நரேந்திர மோடியின் தூதரும், ராஜ்யசபா எம்பியுமான புபீந்தர் யாதவ், தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்மலாவுடன் சந்திப்பா:
பன்னீர்செல்வம், நேற்று இரவு, டில்லி வந்தார். பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, இன்று, நேரில் சந்தித்துப் பேசவுள்ளார். சில வாரங்களுக்கு முன், பன்னீர்செல்வத்தின் உடல்நலம் குன்றிய சகோதரரை, உடனடியாக மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. ஏர் ஆம்புலன்ஸ் கிடைப்பதில் சிக்கல் நிலவியது. பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாரமன் தான் அதற்கு ஏற்பாடு செய்தார். இதற்கு நன்றி தெரிவிப்பதற்காக, இன்று நிர்மலாவை பன்னீர்செல்வம் நேரில் சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது.
இருப்பினும், துணை முதல்வரின், இந்த திடீர் டில்லி பயணம் குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: சின்னம் ஒதுக்கீடு செய்வதற்கு, கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், பன்னீர்செல்வத்தின் கையெழுத்து அவசியம். இது தொடர்பாகவும், சென்னையிலிருந்து பன்னீருடன், இணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர் ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் பங்களாவுக்கு சென்றனர்.அங்கு, சிறிது நேரத்தில், ராஜ்யசபா எம்.பி., புபீந்தர் யாதவ் வந்தார். பா.ஜ.,மேல்மட்ட தலைவர்களில், முக்கியமானவர் இவர். கட்சியின் முக்கிய விவகாரங்களை கையாள்பரும் கூட. பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,தலைவர் அமித்ஷாவின் நம்பிக்கைக்கு உரியவராக கருதப்படும் புபீந்தர் தான், அவர்களின் தூதராக, பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளார்.
பன்னீர்செல்வத்துடன் நடந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும் பேசப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்க வழக்கின் போக்குகள் குறித்தும், ஆலோசிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த வருமானவரிச்சோதனைகள் குறித்து தான் விரிவாக பேசப்பட்டது.
சென்னையில் ஆலோசனை:
டில்லிக்கு பன்னீர் கிளம்புகிறார் என்றதும், சென்னை கோட்டையில் இரண்டு மூத்த முக்கிய அமைச்சர்கள் அவருடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். அந்த தகவல்களும், புபீந்தருடன் பரிமாறப்பட்டதாக தெரிகிறது.இவ்வாறு அந்த வட்டாரங்கள், தெரிவித்தன.
விளக்கம்
இதனிடையே, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தான் சந்திக்கவில்லை எனவும், எம்.பி., மைத்ரேயனை மட்டும் சந்திக்க நேரம் ஒதுக்கியதாகவும் ராணுவ அமைச்சர் நிர்மலா கூறியுள்ளார்.
மரியாதை நிமித்த பயணம்
இந்நிலையில், டில்லியில் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், இது மரியாதை நிமித்தமான பயணம். அரசியல்ரீதியாகவோ, அரசு ரீதியாகவோ டில்லி வரவில்லை.என் சகோதரர் நோய்வாய்பட்டிருந்த போது ராணுவ ஹெலிகாப்டர் வழங்கி நிர்மலா உதவினார். இதற்கு நன்றி தெரிவிக்க டில்லி வந்தேன்.லோக்சபா தேர்தலுக்கான சூழல் உருவாகவில்லை. அறிவிப்பு வந்தவுடன் நிர்வாகிகள் கூடி முடிவு செய்வார்கள்.
-நமது டில்லி நிருபர்-