பெற்ற குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்வது மாதிரி : நாஞ்சில் சம்பத் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெற்ற குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்வது மாதிரி : நாஞ்சில் சம்பத்

Added : மார் 16, 2011 | கருத்துகள் (46)
Share

திருநெல்வேலி : ஜெயலலிதாவின் நடவடிக்கை பெற்ற குழந்தையை விஷம் கொடுத்து கொல்வது மாதிரியானதாகும் என நாஞ்சில் சம்பத் கூறினார்.அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட ம.தி.மு.க.,விற்கு சீட்கள் தராமல் அ.தி.மு.க.,தன்னிச்சையாக பட்டியல் வெளியிட்டது.இது ம.தி.மு.க.,தொண்டர்களையும் கூட்டணியை எதிர்பார்த்து காத்திருந்த அ.தி.மு.க.,தொண்டர்களையும் கூட அதிர்ச்சியில் ஆழ்த்துவதாக உள்ளது. இதுகுறித்து ம.தி.மு.க.,கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியதாவது: அ.தி.மு.க.,வின் வாக்கு வங்கி மட்டுமே அவர்களுக்கு வெற்றியை தேடி தராது. இதுவரையிலும் அரசு செய்த தவறுகளை அச்சப்படாமல் சுட்டிக்காட்டிவந்தோம். அ.தி.மு.க.,அறிக்கை மட்டும்தான் வெளியிடுவார்கள். அத்திப்பூ பூப்பது போலவும், ஆடிப்பிறை தெரிவது மாதிரியும்தான் அவர்களது சந்திப்பு. ம.தி.மு.க.,வினர் மறியல் வரை சென்றோம். சிறை சென்றோம். எங்கள் உழைப்பும் வியர்வையும் அவர்களுக்கு போய்சேர்ந்தது. ஆனால் எங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் தராதது ஏன் என புரியவில்லை. எங்களை அலட்சியப்படுத்துகிற அம்மையாரின் முடிவை அ.தி.மு.க.,தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நாங்கள் அ.தி.மு.க.,கூட்டணியில் தொடர்வோம் என்ற நம்பிக்கை இழந்துவிட்டோம். அதற்காக கவலைப்படபோவதில்லை. எங்களுக்கு இழைக்கப்படுகிற அவமானங்கள் எங்களுக்கு உரமாகும். வைகோவை பொடா சட்டத்தில் 19 மாத சிறையில் வைத்ததால்தான் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் ஜெயலலிதா தோற்கடிப்பட்டார். வரலாறு தருகிற படிப்பினில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள மாட்டேன் என அடம்பிடிப்பவர்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எது நடந்தாலும் எதிர்கொள்கிற ஆண்மையும், ஆன்மபலமும் வைகோவிற்கும் வைகோவின் சகாக்களுக்கும் உண்டு. நிலத்தை நிராகரித்துவிட்டு நதி நடக்கமுடியாது. காற்றை கைது செய்துவிட்டு கால்மணி நேரம் கூட
உயிர்வாழ முடியாது. நீலவானத்தை அலட்சியப்படுத்திவிட்டு நிலவு சிரிக்கமுடியாது எனவே ம.தி.மு.க.,வையும் வைகோவையும் அலட்சியப்படுத்திவிட்டு அ.தி.மு.க.,வெற்றிபெற முடியாது. இத்தகைய முடிவால் அ.தி.மு.க.,.தொண்டன் உற்சாகத்தை இழந்துவிட்டான். பெற்ற பிள்ளைக்கு விஷம் கொடுத்து கொல்வது மாதிரியாகிவிட்டது. ம.தி.மு.க.,ஒரு வெங்கலபானை. கீழே விழுந்தால் சத்தம் கேட்கும் ஆனால் உடையாது. ஆனால் அ.தி.மு.க.,என்ன குடம் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். பொதுமக்கள் மத்தியில் எங்கள் மீது ஏற்பட்டிருக்கிற அனுதாபமும், அ.தி.மு.க.,தொண்டர்கள் எங்கள் மீது காட்டுகிற பரிவும் இந்த அம்மையார் திருந்தமாட்டார் என நடுநிலையாளர்கள் வைத்திருக்கிற விமர்சனமும் இப்போது எங்களுக்கு அனுதாபத்தை தருகிறது. 2006 தேர்தலில் 22 தொகுதிகள் தருவதாக கருணாநிதி தெரிவித்தார். ஒரு தொகுதி அதிகம் கேட்டதற்கு முடியாது என கருணாநிதி வெறுப்பை கக்கினார். அப்போது தி.மு.க.,கூட்டணியில் இருந்து வெளியேறினோம். அ.தி.மு.க.,கூட்டணியில் 35 சீட்கள் கொடுத்தார். அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் 23 சீட்கள் கேட்டோம்.7 சீட், 8 சீட் என பேரம் பேசுவது எங்கள் தரத்தையும் தகுதியையும் கொச்சைப்படுத்துவதாகும். இதனை கடைசி தொண்டன் கூட பொறுத்துக்கொள்ளமாட்டான். 50 தொகுதிகளில் வெற்றிதோல்வியை நிர்ணயிக்கிற சக்தி நாங்கள். எங்கள் முடிவை வரும் 19ம் தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள்கூட்டத்தில் வைகோ அறிவிப்பார் இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X