ஆரோக்கியமான சமூகம் மலரட்டும் | Dinamalar

ஆரோக்கியமான சமூகம் மலரட்டும்

Added : ஜூலை 31, 2018
 ஆரோக்கியமான சமூகம் மலரட்டும்


காலம் காலமாக பெண்ணானவள் அடிமையின் அடையாளமாக, தீட்டின் குறியீடாக இச்சமூகம் கட்டமைத்து பொத்தி பொத்தி பாதுகாத்து வருகிறது. ஆண்களை அதிகாரத்தின் மையப்பொருளாக காட்டும் இச்சமூகம் பெண்களை அடக்குமுறையின் அவதாரமாக சித்தரிக்கிறது. இறைவனின் படைப்பில் ஆணும், பெண்ணும் சமம். சட்டத்தின் பார்வையில் ஆணும், பெண்ணும் சமம். அப்படியெனில் எங்கிருந்து துவங்குகிறது இந்த பாலின பாகுபாடு என்பதை நாம் யோசிக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் பெண்களின் மீதான தாக்குதல்களும், பாலியல் வன்மங்களும் உச்சத்தை தொட்டிருக்கின்றன.கருவறை தாங்கிய பெண்களை கல்லறைக்கு அனுப்பி வைத்து வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். பெண்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் தட்டி பறக்கும் ஆண்களை தத்தெடுத்து கொண்டிருக்கிறது இச்சமூகம். தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த தவப்புதல்விகள் தன் அடிப்படை வாழ்வியலுக்காக ஆண்களிடம் போராட வேண்டியிருக்கிறது. காரணம் பெண் குழந்தைகளை அடக்கியும், ஒடுக்கியும் வளர்க்கத் தெரிந்த இச்சமூகத்திற்கு ஆண் குழந்தைகளை அப்படி வளர்க்கத் தெரியவில்லையா. இல்லை அப்படி வளர்க்க கூடாது என நினைக்கிறார்களா?


எழுதப்படாத சட்டம்ஒரு பெண் கருவுற்ற நாளில் இருந்து அந்தக் குழந்தையை பெற்றெடுக்கும் வரை அவளது கணவன் துவங்கி அத்தனை உறவுகளும் பிறக்கப் போவது ஆணா, பெண்ணா என்ற மிகப்பெரியதொரு பட்டிமன்றமே நடத்தி முடித்து விடுகிறது. பிறப்பது ஆணா இருந்தாலென்ன பெண்ணா இருந்தாலென்ன எந்தக்குழந்தையாக இருந்தாலும் அது நம் குழந்தை தானே என்ற சந்தோஷ மனநிலைக்கு சமூகம் வர மறுக்கிறது. மாறாக ஆண் குழந்தை என்றால் ஆனந்தமாய் ஆராவரிப்பதும் பெண் குழந்தை என்றால் பொட்டைப்புள்ளையா என ஏளனமாக பார்ப்பதும் இச்சமூகத்தின் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. பிறப்பின் இந்த இடத்தில் இருந்தே ஆண், பெண் என்ற பாகுபாடு வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் வளர்ச்சி பெற்று போகிறது.ஆண் என்றால் ஆதிக்கமும், பெண் என்றால் அடிமைத்தனமும் வேர்விட்டுப்படர்கிறது. பிறந்தது ஆண் குழந்தை என்றால் உற்றார் உறவினர்களுக்கும், ஊரில் உள்ள அனைவருக்கும், அழைக்கும் விருந்தாளிக்கும், அழையா விருந்தாளிக்கும், அலைபேசி வழித்தகவல் பறக்கிறது. பையன் பிறந்திருக்கிறான், பையன் பிறந்திருக்கிறான் என பெருமை கொள்கிறது. வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. சமையலும், சாதமும் பொங்கி வழிகிறது. இனிப்பும், இன்சுவை பதார்த்தங்களும், தாம்பூலத்தை நிரப்புகிறது. சாப்பிடா விட்டாலும் வயிறு பசியெடுக்க மறுக்கிறது. பகைவனை கண்டால் கூட மனம் இளகிப் போகிறது. ஆடுகளும், கோழிகளும் அறுவடைக்கு தயாராகின்றன. ஆனால் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து ஆண் குழந்தையை பெற்றெடுத்தது ஒரு பெண் என்பதை இச்சமூகம் மறந்து போய் விட்டது. இதே நேரத்தில் பிறந்தது பெண்ணாக இருந்தால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் பித்துப்பிடித்தது போல் ஆங்காங்கே உட்கார்ந்து விடுகின்றனர். பார்க்கவும், பேசவும் வாய் திறக்க மறுக்கிறது. உற்றார் உறவுகளை கூட பகையாளியைப் பார்ப்பது போல் பார்த்து ஒதுங்கி போகிறது. பிறப்பின் இந்த பிரிவினை என்றைக்கு இச்சமூகம் அனுமதித்ததோ அன்றைக்கே பெண் அடிமையாகி போனாள்.


சமதர்மத்தை அசைத்து பார்க்கும்


பெண் குழந்தையாய் பிறந்தது முதல் அவள் குமரியாகும் வரைக்கும், ஆண் குழந்தையாய் பிறந்தது முதல் அவன் குமரன் ஆகும் வரைக்குமான கால இடைவெளி சமூகத்தின் சமதர்மத்தினை அசைத்து பார்க்கும் ஆணி வேராகும். ஆண் குழந்தையை அதிகார தோரணையுடன் வளர்க்கும் இச்சமூகம் பெண் குழந்தையை அடக்கி வளர்க்க ஆசைப்படுகிறது.ஒரு பெண் எங்கு போக வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எப்படி உடை உடுத்த வேண்டும், யாருடன் பழக வேண்டும், எத்தனை மணிக்கு வீடு திரும்ப வேண்டும். யாருடன் பேச வேண்டும் என தீர்மானிப்பது அந்தப் பெண் அல்ல, அப்பெண் சார்ந்த குடும்பமும், அது சார்ந்த சமூகமும்.ஆனால் ஆண் வளர்ப்பு அப்படியல்ல. மேற்கூறிய செயல்கள் அத்தனைக்கும் நேர்மறையான வளர்ப்பு முறை. கண்டிப்பு இருக்காது. கால நேரம் பார்க்க மாட்டார்கள். ஒரு விதமான மென்மையான அணுகுமுறை அடிநாதமாக இருக்கும். தவறுகள் கண்ணுக்குத் தெரியாது. தெரிந்தாலும் மன்னிப்பு நிறைய இருக்கும். நட்புகள் அதிகம் இருக்கும். செலவிற்கு பணம் கேட்காமல் கிடைக்கும். கேட்டதையும் மறுக்காமல் வாங்கி கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தும். இதுபோன்ற சமூகத்தின் மாறுபட்ட வளர்ப்பு முறையினால் தான் பல ஆண்கள் பாதை மாறுகிறார்கள். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நல்லொழுக்கத்தை கற்று கொடுங்கள். சமூகத்தின் அவலத்தை சுட்டிக்காட்டுங்கள். வக்கிரமான வன்மங்களின் ஆபத்தினை ஒவ்வொரு ஆண் மகனுக்கும், அழுத்தமாக கூறி நல்வழிப்படுத்துங்கள்.


வன்மங்களுக்கு வடிகால்இன்றைக்கு இச்சமூகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொடிய நோய் ஏதுவெனில் பெண்களின் மீதான பாலியல் துன்புறுத்தல் ஆகும். கிராமம் துவங்கி நகரம் வரைக்கும் ஒவ்வொரு தளத்திலும் வேர்விட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது இந்த வன்மம். குழந்தை துவங்கி ஒவ்வொரு பருவத்தினரும் பாலியல் வன்மத்திற்கு ஆளாகி கற்பையும் இழக்கின்றனர். சில சமயங்களில் உயிரையும், உயில் எழுதிக் கொடுத்து விட்டுமாண்டு போகிறார்கள். இத்தனை வன்மங்களுக்கும் காரணம் ஆண் தானே, அவனுக்கு ஒழுக்கத்தை கற்று கொடுத்து வளர்ந்திருந்தால் சமூகம் இந்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்காதே .ஆண்களுக்கு அதிகாரத்தையும், ஆணவத்தையும் சொல்லிக் கொடுத்த இச்சமூகம் பெண்களின் மீதான பாலியல் வன்மங்களை ஏவிவிடக்கூடாது என்பதனை சொல்லி கொடுக்க மறந்தது போனது ஏன். தன்னை பெற்றவளையும், தன் உடன் பிறந்தவளையும் தவிர்த்த ஏனைய பெண்களை ஏன் சகோதரியாக பார்க்க தெரியவில்லை. ஏன் தாயாக, தங்கையாக நினைக்கத் தோணவில்லை. இங்கு தான் வன்மம் வடிவம் கொள்கிறது. யாருடைய உயிரையும் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அப்படி என்றால் செயினை பறிக்கும் பொழுது தள்ளிவிட்டு கொள்வதும், வீட்டில் தனியாக இருந்தால் கொன்று விட்டு கொள்ளையடிப்பதும், பாலியல் பலாத்காரம் செய்து விட்டு கொன்று துாக்கி வீசி எறிவதும் எந்தவகையில் நியாயம். அவர்களுக்கு இந்த உரிமை எங்கிருந்து வருகிறது. ஆண் எனும் ஆணவத்தை கொட்டி வளர்த்தார்களே அதன் எதிர்வினைத் தான் இத்தனை வன்மங்களுக்கு வடிகால்.


ஒழுக்கத்தை கற்று கொடுங்கள்பெண் குழந்தைகளுக்கு காலம் காலமாக வெட்கம், அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்று ஒவ்வொன்றையும் பாடம் நடத்தி சொல்லிக் கொடுத்த இச்சமூகம் இனிவரும் காலங்களில் ஆண் குழந்தைகளுக்கும், இளமையில் துவங்கி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்மையின் மீதான மரியாதையை கற்று கொடுக்க வேண்டும். தாய்மையின் புனிதத்தை சொல்லி கொடுங்கள். ஒவ்வொரு ஆணையும் வன்மத்துடன் அணுகாமல் அன்போடு ஆணுக சொல்லுங்கள். ஒழுக்கத்தை கற்று கொடுங்கள். உண்மையை பேச சொல்லி கொடுங்கள். நட்புக்களை ஆராய்ந்து பழக சொல்லுங்கள். சமூகத்தில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் மதித்து போற்றப்பட வேண்டியவள். அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஆண்டிற்கு உண்டு. வேலியே பயிரை மேய்ந்தது போல் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய ஆண்கள் பாலியல் வன்மத்தில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத குற்றம். தன்னை பெற்றவளும், தன்னுடன் பிறந்தவளும் ஒரு பெண் என்பதனை நினைவில் வைப்பது அவசியம்.ஆண், பெண் என்ற பாகுபாட்டை முன்னிலைப்படுத்தாதீர்கள். இரண்டு பேருக்கும் சம மரியாதை கொடுங்கள். வளர்ப்பு முறையில் வேறுபாட்டை காட்டாதீர்கள். நல்லதை எடுத்து சொல்லுங்கள். தீயதை சுட்டி காட்டுங்கள். கொலை, கொள்ளை, பாலியல் வன்மம் போன்ற சமூகத்தை சீரழிக்கும் செயல்களை ஒரு போதும் அனுமதிக்காதீர்கள். அது எதிர்கால நம் சமூகத்தை சிதைத்து விடும். எனவே பெண்களின் மீதான அடிமைத்தனத்தையும், ஆபாசத்தையும் அறுத்தெறிந்து ஆரோக்கியமான சமூகமாக மலரட்டும். அதற்கு ஆண்களும் துணை நிற்கட்டும்.-மு.ஜெயமணிஉதவிப் பேராசிரியர்ராமசாமி தமிழ் கல்லுாரிகாரைக்குடி. 84899 85231

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X