'நொய்யலில் கொட்டப்படும் நிதி' நோகாமல் அள்ள தயாராகும் பிரதிநிதி!

Added : ஜூலை 31, 2018 | |
Advertisement
திருப்பூரில் பெய்த லேசான மழையினால், சளி, காய்ச்சல் என அவதிப்பட்ட மித்ராவை, சித்ரா, குமரன் ரோட்டிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள். ஏற்கனவே, அங்கே கூட்டம், அதிகமாக இருந்ததால், டோக்கன் பெற்று கொண்டு, சேரில் அமர்ந்து கொண்டனர்.''ஏக்கா... நொய்யல் பராமரிப்புக்குன்னு, இப்படி கோடி கோடியா பணம் ஒதுக்குறாங்களே. அது, உண்மையிலேயே ஆத்துக்குள்ளதான் போடுறதுக்கா? இல்லே..
'நொய்யலில் கொட்டப்படும் நிதி' நோகாமல் அள்ள தயாராகும் பிரதிநிதி!

திருப்பூரில் பெய்த லேசான மழையினால், சளி, காய்ச்சல் என அவதிப்பட்ட மித்ராவை, சித்ரா, குமரன் ரோட்டிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள். ஏற்கனவே, அங்கே கூட்டம், அதிகமாக இருந்ததால், டோக்கன் பெற்று கொண்டு, சேரில் அமர்ந்து கொண்டனர்.''ஏக்கா... நொய்யல் பராமரிப்புக்குன்னு, இப்படி கோடி கோடியா பணம் ஒதுக்குறாங்களே. அது, உண்மையிலேயே ஆத்துக்குள்ளதான் போடுறதுக்கா? இல்லே.. அவங்கவங்க பாக்கெட்டில் போடுறதுக்கா?'' என்று, இருமிக் கொண்டே கேட்டாள் மித்ரா.''உனக்கு உடம்பு சுகமில்லைன்னாலும், ரொம்ப காரமான மேட்டரைத்தான் பேசறே மித்து,''''இல்லக்கா... கலெக்டர் ஆபீசில், நடந்த கூட்டத்தில், இதைப்பத்தி அமைச்சரும் சரியாக பேசலையாமா?''''ஆமாம். உண்மைதாண்டி. சுற்றுச்சூழல் மினிஸ்டர் கலந்துட்ட கூட்டத்தில், நொய்யல் பராமரிப்புக்கு, 150 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது பற்றி, பத்திரிகைகாரங்க கேட்டாங்க. இதுக்கு முன்னாடியே, பக்கத்து தொகுதி அமைச்சரா இருந்தப்ப, நஞ்சராயன் குளத்து நீரை சுத்தம் செய்ய, ஒரு கோடி நிதி ஒதுக்கினது என்னாச்சு?''''ஆனால், அரைகுறை வேலையால், நஞ்சராயன் குளத்தில் அம்போன்னு நிக்குது. அப்படியிருக்கும்போது, நொய்யலுக்கு ஒதுக்கப்பட்டநிதி ஒழுங்கா செலவு செய்யப்படுமா? என, ஒரு நிருபர் குடைஞ்சு எடுத்துட்டாராம். ஆனால், அமைச்சர் நேரடியாக பதில் சொல்லாம, சுத்தி வளைச்சு, மழுப்பலாக பதில் கூறிவிட்டு 'நைசா' நழுவிட்டாராம்,''''அக்கா.. அதே மேட்டரில், ரெண்டு 'தொகுதி'களுக்கும் நடந்த 'ஈகோ வார்' பத்தி தெரியுங்களா?''''ஏன்.. அதுதான் ஊருக்கே தெரியுமே. நொய்யலுக்கு, பணம் ஒதுக்கியதில், 'நார்த்துக்கு ஒண்ணுமே இல்லை. பூராமே, எனக்கே வேணும்னு, 'சவுத்' விடாப்பிடியா வாங்கிட்டாராம். அதுதான் பிரச்னையாம். எப்படிப்பார்த்தாலும், இந்த மேட்டரில், ரொம்ப 'பெரிசாக' கரெக்ட் பண்ணிடாலாமுன்னு, பிளான் போட்டு, காரியத்தை சாதிச்சுட்டாராம்,'' ''ம்...ம்.. இது எங்க போய் முடியப்போகுதே? எல்லாம் சரி, 'ஸ்மார்ட் சிட்டி' , அப்புறம், தமிழக அரசுன்னு, மொத்தம், 192 கோடி ரூபாயில், நொய்யல் கரையை மட்டும் சுத்தம் செய்யறாங்க. 'ஆத்துல போட்டாலும் அளந்து பார்க்காம போட்டிருவாங்களோ'னு, பொதுமக்கள் யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அரசாங்க பணம் நல்லபடியாக செலவாகணும்னு, ஒருசிலர் கோர்ட்டுக்கு போறதுக்கு தயாராயிட்டாங்களாம்,'' ''ஏக்கா... இப்படி, குளம், ஆறுன்னு, நிதி கொட்டினால்தானே 'லம்பா' அள்ள முடியும். ரெண்டாவது, அவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாதுங்கறது தைரியத்திலதான், எல்லோரும் மிடுக்கா சுத்துறாங்க,''சொல்லி விட்டு மீண்டும் இருமினாள்.''சரி.. சரி.. ரொம்ப பேசாததே. நர்ஸ் வந்தா திட்டுவாங்க. ஏம்பா.. பக்கத்துல, இருக்கிற 'சிவன்' பேரிலுள்ள மலைக்கோவிலுக்கு சமீபத்தில் ஒரு 'ஜீப்' வாங்கினாங்க. அதை, திருப்பூரில் உள்ள அதிகாரிகள்தான் ஓட்டறாங்களாம். பெட்ரோல், மெயின்டனென்ஸ், டிரைவர் சம்பளம் எல்லாமே, கோவில் கணக்கில் காட்டப்படுது. இத்தனைக்கு, அந்த கோவிலுக்கு அதிகாரியும் வந்துட்டாரு. ஆனாலும், மனசில்லாமல், 'ஜீப்'பை ஒப்படைக்க மாட்டேங்கறாங்களாம். உனக்கு ஏதாவது தெரியுமா?,''''ம்.. ம்.. சொன்னாங்க்கா. உண்மைதான். அதே ஜீப்பை, வெளியூருக்கு போறதுக்கு யூஸ் பண்றாங்களாம். இதெல்லாத்தையும், அந்த, ....மலை ஆண்டவரே பார்த்துப்பாரு,''மித்ரா சொல்லி கொண்டிருக்கும்போதே வந்த நர்ஸ் ஒருவர், டெம்ப்ரேச்சர் பார்த்து விட்டு, '101' இருக்குது என்று சீட்டில் எழுதி கொடுத்து சென்றார்.''பார்த்தியாடி. லேசாத்தான் சுடுது. ஆனால, 101 இருக்குது. இதே மாதிரி, கோழிப்பண்ணையூரில், நகர பொறுப்பாளர் நியமனம் விஷயத்தில், உடன்பிறப்புகள் கொதிக்குறாங்களாம்,'3''ஆமாங்க்கா. இதுநாள் வரைக்கும் கட்சி நடத்தின எந்த போராட்டத்திலும் பங்கேற்காமல், 'நாம் கே வாஸ்த்' செஞ்சுட்டு இருந்த ஒருவரை, நகர பொறுப்பாளராக நியமித்தால், கட்சியை எப்படி வளர்க்கிறது? தங்களின் செல்வாக்கை மேலிடத்தில் காட்டி, 'முக்கியமான ஆட்களை கைக்குள் போட்டுட்டு, பணத்தை கொடுத்து கட்சிப் பதவிக்கு வந்துட்டாருன்னு,' என பகிரங்கமாகவே கூட்டத்தில் சிலர் பேச, ஏக... கலாட்டா ஆகிடுச்சு. எங்கயாவது கைகலப்பு ஆயிருமுன்னு, கட்சியில் மூத்த ஆட்கள், தடுத்தாங்களாம்,'' என்றாள் மித்ரா. ''சரி... சரி..! இந்த விஷயமாவது தலைமைக்கு போகுமா. இல்லாட்டி, வழக்கம்போல் 'கறுப்பு ஆடுகள்' இதை மென்னு, முழுங்கி விடுமா?''என்றாள் சித்ரா.''இருந்தாலும் இருக்கும். சில போலீஸ் பண்றததை பார்த்து, அவங்களும் பழகிக்கிறாங்க. அடி... இதைக்கேளு, 'குட்கா'மேட்டரில், சிட்டியில், கெடுபிடியா இருக்கிறதால், சில வியாபாரிகள் தங்களோட இடத்தை, பக்கத்திலுள்ள அவிநாசி, பெருமாநல்லுார், பல்லடம் பகுதிக்கு மாத்திட்டாங்களாம். இப்ப.. அங்கிருந்துதான், சிட்டிக்குள் சப்ளை ஆகுதாம். ரூரல் அதிகாரி, இதுவிஷயத்தில், கடுமையா நடவடிக்கை எடுத்தாங்கன்னா பரவாயில்லை,''அதற்குள், 'மித்ரா உள்ளே வாங்க,' என்றதும், இருவரும், டாக்டர் அறைக்குள் சென்றனர். செக்கப் செய்த டாக்டர், மருந்து எழுதித்தர, இருவரும், வாங்கி கொண்டு, மெடிக்கல் ஷாப்புக்கு சென்றனர்.அங்கும் கூட்டம் இருக்கவே, பெஞ்சில் அமர்ந்தனர்.''தெற்கு தொகுதிக்காரர் மக்கள் கிட்ட 'ஸ்பான்சர்' வாங்கி, ஏதாவது செஞ்சிட்டு, நல்ல பேர் வாங்கிறதில் ரொம்ப கில்லாடி. இப்ப பாரு, பாலம் கட்டுற வேலைக்கு ஜரூரா வசூல் பண்ண ஆரம்பிச்சுட்டார். இண்டஸ்ட்ரீ, தன்னார்வ அமைப்பு.. இப்படி பலர்கிட்டயும், 'கலெக்ஷனுக்கு' திட்டம் போட்டுட்டார்,''''இதற்காக, காசியின் பெயர் கொண்ட ஒரு பாளையத்தில் உள்ள தன்னோட பினாமி தோட்டத்தில், ஆலோசனைகூட்டம் போட்டிருக்கார்,''''அவர்.. அவரோட ரூட்டில் சரியாப் போறாருன்னு சொல்லுங்க..'''ஏம்பா... சிட்டியில் இருக்கிற சவுத், நார்த் அதிகாரிங்க, இப்போது சீறிப்பாய துவங்கிட்டனராம். லாட்டரி, சரக்கு என, இல்லீகல் மேட்டரில், 'செம' கலெக்ஷன் பண்ணறாங்களாம். இதனை கண்டுபிடிக்க வேண்டியவங்களும், கண்டுக்கறதில்லையாம். நமக்கு என்ன வந்தது இருக்கறதும் ஒரு நேரத்தில, பிரச்னையா வந்துடும் பாரேன்,''''அக்கா.. நானொரு மேட்டர் சொல்றேன் கேளுங்க. நார்த்தில் உள்ள அதிகாரி, எப்படியாவது ஸ்டேஷனை ஆளோணும்னு குறி வைச்சு, அதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டுறாராம். இப்ப அதுக்காக, ரொம்பவே மெனக்கெடறாராம். இப்ப இருக்கற அதிகாரி லீவில் போனாக்கூட, 'டிப்டாப்'பா யூனிபார்ம் போட்டுட்டு, 'மைக்'கை கையில் எடுத்துகிட்டு சும்மா விழுந்துவிழுந்து வேலை பார்க்கிறார்,''''அதுக்காக, பெரிய அதிகாரி பின்னாடியே சுத்துறாராம். எப்படியும் இடத்தை புடுச்சுடுவாரா? இல்லாட்டி, 'ச்சை...' இந்தப்பழம் புளிக்கும்னு விட்டுடுவாரா'ன்னா தெரியலை''''சரி அதைவிடுக்கா. போன வாரம், கோழிப்பண்ணையூரில், 'முத்தான' அதிகாரி, டிரான்ஸ்பர் விஷயமா பேசினோம், ஞாபமிருக்கா?''''ஆமா.. அதிலென்ன அப்பேட்?'' ''அது விஷயத்துல, தனக்கு வேண்டாதவங்க, யாரோ கிளப்பி விட்டுட்டாங்க'ன்னு சொல்றாரு,'' என்றாள் மித்ரா.அதற்குள் கூட்டம் சற்று குறையவே, கவுன்டரில் சென்று, மருந்து சீட்டை நீட்டினாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X