அ.தி.மு.க.,வில் நீக்கப்பட்ட முன்னாள், எம்.பி.,யான, கே.சி.பழனிசாமி, நேற்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
பா.ஜ.,விற்கு எதிரான கருத்துகளை கூறியதற்காக, கே.சி.பழனிசாமி, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டார். 'என்னை கட்சியிலிருந்து நீக்க, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் இல்லை' என, அவர் அறிவித்தார்.'அ.தி.மு.க., பொதுச்செயலர், அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும்' என, அவர் தேர்தல் கமிஷனில் கொடுத்த மனு, இன்னமும் நிலுவையில் உள்ளது.
சமீபத்தில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க, டில்லி சென்றார். அவரை சந்திக்க, நிர்மலாசீதாராமன் மறுத்து விட்டார்.
இதனால் பன்னீர்செல்வம், ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார். மாநிலத்தின் துணை முதல்வரை, மத்திய அமைச்சர் பார்க்க மறுத்தது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், கே.சி.பழனிசாமி, நேற்று டில்லியில், நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில், ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
நிர்மலா சீதாராமனிடம், அ.தி.மு.க., விவகாரங்கள் குறித்து, அவர் பேசி உள்ளார். இது குறித்து, அவரை கேட்டபோது, ''இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு. பா.ஜ.,வில் இணைவதற்கு முன்னோட்டம் அல்ல. நான் என்றும் அ.தி.மு.க.,காரன் தான்,'' என்றார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE