சென்னை: 'இந்துக்களின் மனம் புண்படும் வகையில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி, 'டுவிட்டரில்' கருத்து பதிவிட்டுள்ளது போல், சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பி வரும் விஷமிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவால், சென்னை, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து, அரசியல் கட்சி தலைவர்கள், மருத்துவமனை சென்று, குடும்பத்தாரிடம் நலம் விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், விநாயகர் கோவில் பிரசாதத்துடன் சென்று, நலம் விசாரித்தார்.இந்நிலையில், 'அர்ஜுன் சம்பத் கொடுத்த கோவில் பிரசாதத்தை குப்பை தொட்டியில் வீசிவிட்டேன். என் தந்தையை எந்த ஆன்மிகவாதியும் வந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. 'தி.மு.க.,வினர் மொட்டை அடித்தல், கோவில் வழிபாடு போன்ற மூட நம்பிக்கையில் ஈடுபடக்கூடாது' என, கனிமொழி, தன், டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாக, மர்ம நபர்கள், சமூக வலைதளங்களில், தகவல் பரப்பி வருகின்றனர்.அதேபோல், 'மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோவிலுக்கு செல்வதில் எந்த தவறும், தீட்டும் இல்லை. நான் கூட மாதவிடாய் காலத்தில், திருப்பதி கோவிலுக்கு சென்று வந்தேன். என்னை வெங்கடாஜலபதி கொன்றுவிட்டாரா?' என்றும், கனிமொழி கருத்தை பதிவு செய்திருப்பதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.இதுகுறித்து, கனிமொழி சார்பில், வழக்கறிஞர் செல்வநாயகம் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்:தந்தை கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதால், அவரது மகள் கனிமொழி மிகுந்த மனவேதனையில் உள்ளார். இதனால் அவர், 'டுவிட்டர்' கணக்கை பயன்படுத்துவது இல்லை.ஆனால், கனிமொழி, இந்துக்களின் மனம் புண் படும் வகையில், 'டுவிட்டர்' பக்கத்தில், கருத்து பதிவிட்டு இருப்பதுபோல், விஷமிகள், சமூக வலைதளங்கள் வாயிலாக அவதுாறு பரப்பி வருகின்றனர். அதற்காக, கனிமொழியின், 'டுவிட்டர்' கணக்கை போலியாக சித்தரித்துள்ளனர்.கனிமொழி மீது, இந்துக்களிடம் விரோதம் மற்றும் குரோதம் ஏற்படும் வகையில், விஷமிகள் திட்டமிட்டு அவதுாறு பரப்பி வருகின்றனர். மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்யும் விஷமிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE