புரிந்துகொள்ளுங்கள் அன்புக் குழந்தைகளை!| Dinamalar

புரிந்துகொள்ளுங்கள் அன்புக் குழந்தைகளை!

Added : ஆக 02, 2018
புரிந்துகொள்ளுங்கள் அன்புக் குழந்தைகளை!

ம் வீட்டின் பாசமலர்கள்! அன்புமணம் வீசும் சின்னமலர்கள் குழந்தைகள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாத குட்டி உத்தமர்கள் குழந்தைகள். சிறகுகளைச் சுமந்தபடி சின்னதாய் பள்ளிக்குச்செல்லும் வண்ணத்துப்பூச்சிகள். நம் வீட்டின் ஆனந்தமே குழந்தைகள்தானே! குழந்தைகள் இல்லாத வீடு வீடாக இருக்குமா? நம் வீட்டு சின்ன மலர்களாம் குழந்தைகளின் குறும்புகள் கொஞ்சநஞ்சமா? புதிதாகக் கட்டிய வீட்டின் அழகுச் சுவர்களைத் தங்கள் எண்ணத்தால் மேலும் வண்ணமிட்டவர்கள் அவர்கள்தானே! எந்தக் கவலையும் இல்லாமல் அவர்களால் எப்படி மலர்களைப் போல் சிரிக்கமுடிகிறது? பாட்டி தாத்தாக்களை எப்படி அவர்களால் யானையாக உப்புமூட்டை சுமப்பவர்களாய் மாற்றி அவர்களையும் குழந்தைகளாக்க முடிகிறது?
இனிய துாதுவர்கள் : முதன்முதலாய் சேலை கட்டிப் பழகிய குழந்தை அம்மா போல் அதட்டிப் பேசும் விந்தையை நாம் நம் வீட்டுக்குள் கண்டிருக்கிறோமே! பள்ளியில் மாறுவேடப் போட்டியில் தான் வேடமிட்ட பாத்திரத்தின் வசனத்தைக் வேடம் கலைத்த பின்னும் பார்ப்பவரிடமெல்லாம் சொல்லிக் காட்டுமே போலி நடிப்பறியா அந்த நற்குழந்தை! எல்லா இடங்களிலும் தான் இருக்கமுடியாது என்பதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட குட்டி நம்பிக்கைகள் நம் குழந்தைகள். குழந்தைகள் எல்லாவற்றையும் ஆழமான பார்வையால் படிக்கிறது. தன் கையைப்பிடித்து அழைத்துச் செல்வோரை முழுமையாய் நம்புகிறது. கோபப்படும்போதுகூடக் குழந்தைகள் அழகாயிருக்கின்றன. ஆனால் அவர்களை நாம் எப்படி நடத்துகிறோம்?நாம் குழந்தைகளின் அழகான உலகைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம். அவர்களுக்கும் குட்டிகுட்டி ஆசைகள் உண்டு என்று நினைக்க மறுக்கிறோம். எப்போதும் அவர்களைப் பதற்றத்தில் வைத்திருப்பதே படிப்பு என்று நாம் தவறாகப் புரிந்திருக்கிறோம். குறும்பாலானது அவர்களின் குட்டி உலகம்.
பாலியல் வன்முறைகள் : குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் ஒருபுறம்! ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையோடு ஒப்பிடும் பெற்றோர்கள் மறுபுறம் ! இவர்களுக்கு மத்தியில் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாய் தங்கள் குழந்தைப் பருவத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றன. பஞ்சைப் பஸ்பமாக்கும் செந்தீ போல் பிஞ்சைப் பிய்த்தெறியும் நச்சு விரல்கள் சமூகத்திற்கு எப்படி வந்தது? அவர்களிடம் இருந்து குழந்தைகளை காப்போம். பள்ளிக் கதைகளைப் பெற்றோர்களிடம் சொல்லும்போது குழந்தைகள் இன்னும் பரவசமாகின்றன. பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும்போது தாயும் தந்தையும் தன்னை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றன. ஆனால் நாம் பக்கத்து வீட்டுக் குழந்தையின் உருவை நம் கக்கத்தில் துாக்கி அதைப் போல் நம் குழந்தைகளை உருமாற்ற நினைக்கிறோம்! அவர்கள் போடும் குழந்தைச் சண்டைகள் குவலத்திற்குப் புரியாது. சொட்டுச் சொற்களால் கவிதை எழுதுகிற மழை மாதிரி குழந்தைகள் இறுக்க வினாடிகளை விட்டு விடுதலையாகத் துடிக்கிறார்கள். விடுமுறை விட்ட உடன் தாத்தா பாட்டியைப் பார்க்க கிராமத்திற்குப் போகவேண்டும் என்று துடிக்கிறார்கள். ஆனால் நம் சிறைகள் அவர்களின் சிறகுகளைக் கத்தரித்து வைத்திருக்கின்றன. நம்மால் முடியாமல் போன கடந்தகாலக் கனவுகளையெல்லாம் குழந்தைகளின் முதுகில் ஏற்றத்துடிக்கிறோம். காலாண்டு, அரையாண்டு விடுமுறைகளில் கூட ஓய்வில்லாமல் ஏதாவது ஒரு பயிற்சிவகுப்புக்கு அனுப்பிவிடத் துடிக்கிறோம்.
கொண்டாடுவோம் : கவிக்கோ அப்துல் ரகுமான் ஒரு கவிதையில் “புத்தகங்களே சமர்த்தாயிருங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்” என்று எழுதினார். சிலேட்டில் குச்சி பிடிக்கவேண்டிய வயதில் அவர்களைத் தீக்குச்சி அடுக்கவைத்தது யார் குற்றம்? மத்தாப்புப் புன்னகைகளால் நம்மை மகிழவைப்பவர்களை பணி செய்யவைத்தது யார் குற்றம்? மதிப்பெண் மண்டபங்களில் அவர்களை மகுடமேற்றுவதாய் சொல்லி குழந்தைக் குறும்புகளை நம் வகுப்பறைகள் அவர்களை விட்டு அப்பால் நகர்த்திக்கொண்டிருக்கின்றன. கல்விச்சுமை அவர்களின் துாக்கத்தைக்கூட ஏக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன. சுற்றிநடப்பது ஏதும் தெரியாமல் புத்தகப்புழுக்களாய் குழந்தைகளை மாற்றுவதால் யாருக்கு லாபம்? நம் கனவுகளைச் சுமக்கும் சுமைதாங்கிகளா அவர்கள்? தேர்வில் தேர்ச்சி பெறல் மட்டுமே வாழ்வின் நோக்கமென்று யார் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது?வாவென்றழைத்து வாழென்றுரைத்து கைதுாக்கி விடுகிறது நம்பிக்கை எனும் ஒற்றைச் சொல்லால் இந்த வாழ்க்கை. சலிக்கத்தான் செய்யும் மாவாக இருக்கும் வரை எந்தச் சல்லடையும். குழந்தைகளுக்குள்ளிருக்கும் ஒளியை ஒழித்துவைத்துவிட்டு நாம் அவர்களின் வெளிச்சத்தை வெளிக்கொண்டு வருவதாய் இனியும் சொல்லிக் கொண்டிருக்கவேண்டாம். அவர்களை யாரைப் போலவோ மாற்ற நினைத்து அவர்களின் நோக்கமறியாமல் தவறான புரிதலை குழந்தைகள் மீது இனியேனும் திணிக்காமலிருப்போம். அவர்கள் நம்மிடம் விரும்புவது பொன்னையும் பொருளையும் அல்ல. ஒரு சிறு புன்னகையையும் ஒரு சிறு ஊக்குவிப்புச் சொல்லையும்தான். தங்கக் கடைகளிலும் குழந்தைகள் தேடுவது பலுான்களைத்தானே!
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. குற்றங்களை மறந்துவிடும். பராசீகக்கவிஞர் கலீல்ஜிப்ரான் “உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர். உங்கள் மூலம் வெளிப்படும் பிரபஞ்சத்தின் குழந்தைகள்” என்று விளக்குகிறார். குழந்தைத் தன்மையோடு வாழக் குழந்தைகளை அனுமதிப்போம். குழந்தைகளுக்குச் சீக்கிரம் புரிகிற வடிவம் கதைவடிவம்தான். ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம் என்று பாட்டி சொன்னவுடன் எந்தக் குழந்தையும் நிமிர்ந்து அமர்ந்து கொண்டு உற்சாகமாய் கதை கேட்கத் தொடங்கும். ஆனந்தமாய் அவை கதைகேட்கும்போது நாம் சொல்லவிரும்பும் நீதியை அக்கதையின் ஊடாக வெகு எளிதாகச் சொல்லிவிடமுடியும். நல்ல கதைசொல்லிகளாய் நாம் மாறுவோம். கதைகளால் அவர்களை நல்ல மனிதர்களாய் மாற்றுவோம். வீட்டில் ஆண்குழந்தைகளுக்கு ஒரு விதமான வளர்ப்பு, பெண் குழந்தைகளுக்கு வேறுவிதமான வளர்ப்பு என்கிற பேதம் வேண்டாம். இருகண்களில் எந்தக் கண்ணை உயர்வாய் சொல்வீர்கள்? எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே! நல்ல நெறிகளைச் சொல்லி உயர்ந்த அறத்தைச் சொல்லிக் குழந்தைகளை வளர்ப்போம். குழந்தைகளின் உலகு கனவுகளாலும் நினைத்துக்கூடப் பார்க்க இயலாத கற்பனைகளாலும் ஆனது. அவர்களின் கனவுகளை அறிந்து அதற்கு வடிவம் கொடுக்கப் பாடுபடுவோம்.
நேசத்தோடு பேசுவோம் : நேசத்தோடு குழந்தைகளிடம் பேசுவோம். அவர்கள் இறக்கை இல்லா அழகுப் பறவைகள். சொல்ல நினைப்பதைச் செவிகொடுத்துக் கேட்போம். உங்கள் பணிப்பளுவைக் காரணம் காட்டி அவர்களோடு நேரம் செலவளிக்க மறுத்தால் அவர்கள் குழந்தைப் பருவம் மெல்ல நகர்ந்து அப்பால் போய்விடலாம். திணிக்க திணிக்க மறுப்பேதும் சொல்லாமல் ஏற்க அவர்கள் ஒன்றும் சாக்கு மூட்டைகள் அல்லர். மலரை விட மென்மையானவர்கள்.துாக்கிக் கொஞ்சவேண்டிய குழந்தைகளின்மீது பாரத்தை ஏற்றி சோகத்தில் ஆழ்த்துவது என்ன நியாயம்? அவர்களின் சுவர்க் கிறுக்கல்களைச் சுதந்திரமாய் அனுமதியுங்கள். அவர்களின் தொடர்ப் பேச்சுகளைத் தொல்லையெனத் தடுக்காமல் அனுமதியுங்கள். அவர்களின் விசித்திர சித்திரங்களை விருப்பத்துடன் ஏற்றுப் பரிசு தாருங்கள். கணினித்திரைகளுக்குள்ளே தொலைந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு வாசிப்பின்மீது நேசிப்பை உண்டாக்குவதும் அவசியம். எப்போதும் கொண்டாடுவோம், நம் வீட்டு சின்ன ராஜாக்களையும் சின்ன ரோஜாக்களையும்!
சவுந்தர மகாதேவன்தமிழ்த்துறைத்தலைவர்சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி, திருநெல்வேலி.99521 40275

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X