காவிரி: என்ன செய்கிறது தமிழக அரசு?| Dinamalar

காவிரி: என்ன செய்கிறது தமிழக அரசு?

Added : ஆக 04, 2018 | கருத்துகள் (7)
காவிரி: என்ன செய்கிறது தமிழக அரசு?

ஐந்து ஆண்டுகளாக வறண்டு கிடந்த காவிரியில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரியின் தோற்றுவாயாக கர்நாடகா இருப்பினும், தமிழகத்தில், 12 மாவட்டங்களில் பாய்ந்து, அம்மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கிறது; 26 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன; சென்னை உட்பட, 17 மாவட்ட மக்கள், இந்த ஆற்று நீரைக் குடிநீராகப் பயன்படுத்தி, உயிர் வாழ்கின்றனர்.இதயத்திலிருந்து ரத்தம் செல்வதால், இதயமே ரத்தம் முழுமைக்கும் சொந்தம் கொண்டாட முடியாது; கூடாது. நதிகள், வேளாண்மையின் ரத்த நாளங்கள். எனினும், கர்நாடக அரசு சட்டம், தர்மம், மனித நேயம், மாற்றார் உரிமை என, எதையும் மதிக்காது, புதிது புதிதாய் அணைகளைக் கட்டி, தண்ணீரை தங்கள் மாநிலத்திலேயே சேர்த்து வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. இருப்பதை பகிர்ந்து கொள்ளக் கூட, பக்கத்து மாநிலங்கள் தயாராக இல்லாத அளவிற்கு, இறுக்கமான அரசியல் சூழ்நிலையில் வாழும் நமக்கு, இயற்கையாக பார்த்து, அதிகபட்சமாக மழை பெய்து, அங்குள்ள அணைகளில் தேக்க முடியாமல், தண்ணீர் பெருகி வந்ததால் தான், காவிரியில் தண்ணீரை பார்க்க முடியும் என்ற நிலை இருக்கிறது! திருச்சியில் இருந்து பூம்புகார் வரை, காவிரியோடு சேர்ந்து ஒரு பயணம்... பயணத்தின் போது களிப்பை விட, களைப்பை விட, நம் மோசமான நீர் மேலாண்மையை நினைத்து, கவலை தான் மேலோங்குகிறது.பல தடைகளை தாண்டி, தமிழகத்திற்கு பாய்ந்தோடி வரும் காவிரி நீரை உரிய முறையில் சேமித்து, பயன்படுத்த வேண்டிய கடமை தமிழகத்திற்கு உள்ளது. ஆனால், முறையான பாசன திட்டம், நீர் மேலாண்மை இல்லாததால் பெருமளவு தண்ணீர் வீணாகும் சூழல் தான் இருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பி, தற்போது உபரி நீர், காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. உபரி நீர் திறப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதை முழுமையாக சேமிக்க முடியாத சூழல் ஏற்படும் என, நீர் வல்லுனர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தண்ணீர் வரும் போது மட்டுமே, சேமிப்பது குறித்து கவலைப்படுவதை விடுத்து, முன் கூட்டியே சரியான திட்டமிடல் அவசியம் என்கின்றனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம், 90 அடியாக இருக்கும் போதே, திறந்து இருக்க வேண்டும். அவ்வாறு திறந்து இருந்தால், அணை நிறைந்து விட்டாலும் கூட, தண்ணீர் முழுமையாக, கடைமடைப் பகுதி வரை சென்று சேர்ந்திருக்கும். தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை; பாசன வாய்க்கால்களை துார் வாரி, நீரை சேமிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை.முறையான துார் வாரும் பணிகள், பல ஆண்டுகளாகவே நடைபெறவில்லை. கால்வாய்கள் புல் மண்டி கிடப்பதால், தண்ணீர் செல்வதில் சிக்கல் நிலவுகிறது. கிளை கால்வாய்கள் உட்பட அனைத்தும், துார் வாரப்பட்டால் தான், மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர், கடைமடைப் பகுதி வரை சென்று சேரும். தமிழகத்தின் பாசனப்பகுதியில், 63 சதவீதம் காவிரி பாசன பகுதி தான். இதனால் இந்த விஷயத்தில், தமிழக அரசு, கூடுதல் முனைப்பை இதுவரை காட்டவில்லை!'ஒரு புல், ஒரு கலன் தண்ணீரை சேமிக்கும்' என, கிராமத்தில் சொல்வர். வயல் வெளியில் பாயும் சாதாரண கால்வாயை துார் வாரி, தண்ணீரை திறந்து விட்டால், 900 மீட்டர் சென்றடைய, 15 நிமிடங்கள் தான் பிடிக்கும். அதுவே, துார் வாராவிட்டால், 45 நிமிடங்கள் கூடுதலாக தேவைப்படும். அது மட்டுமின்றி தரையால் உறிஞ்சப்பட்டு, நீர் பாயும் பாசன அளவு, மூன்றில் ஒரு பங்கு குறைந்தும் விடும்.அப்படியானால், காவிரி பாசனப்பகுதியில் உள்ள பல, 100, கி.மீ., காவிரி கால்வாய்களில், தண்ணீர் எவ்வளவு வீணாகும் என்பதை உணர்ந்து கொள்ளலாம். காவிரி ஆற்றில் மணல் எடுக்கப்பட்டதால், குழிகளாக மாறி, தண்ணீர் போவது முற்றிலும் குறைந்து விட்டது. எனவே, காவிரி நீர் வரத்தை சீரமைக்க,மேட்டூர் துவங்கி, கடைசி பாசனப்பகுதி வரை, ஒவ்வொரு, 15 கி.மீ., இடைவெளியிலும், 3 அடி உயரம் கொண்ட சிறிய தடுப்பணைகளை அமைக்கலாம். இந்த அணைகள் மூலம், கணிசமான அளவு தண்ணீரை சேமிக்க முடியும்; நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக உயரும். குடிமராமத்து பணிகளை மிகவும் தாமதப்படுத்தி, தண்ணீர் திறக்கப்படும் நேரத்தில், அரைகுறையாக செய்து விட்டு, இதற்கான நிதி கொள்ளையடிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இம்முறையும், இதே காரணத்தால், ஒரு பக்கம் மேட்டூர் அணை திறப்பது தாமதப்படுத்தப்பட்டதோடு, மறு பக்கம் குடிமராமத்து பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.கடந்த ஓராண்டுக்கு மேல், பாசன வடிகால்வாய்கள் வறண்டு கிடந்த போதெல்லாம், துார் வாரும் பணியை மேற்கொள்ளாமல், தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து, மேட்டூர் அணை நிரம்பும் வரை, துார் வாரும் பணியை தாமதப்படுத்துவது ஏன் என்ற கேள்விக்கு யாரிடம் இருந்து பதிலை எதிர்பார்ப்பது...இதே போல, கடந்த ஆண்டே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, 'காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணைகளை கட்டியதைப் போல, தமிழக அரசு புதிய அணைகளை கட்டாதது ஏன்? புதிய அணைகளை கட்டியிருந்தால், மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை சேமித்து இருக்கலாமே...'நீர் சேமிப்பு திட்டங்களில் தமிழக அரசு கவனம் செலுத்தாமல் இருந்தது ஏன்? பெருமழைக் காலங்களில் மேட்டூர் அணை போன்ற முக்கிய அணைகளில் நீரை சேமித்து வைத்தால், அதை வைத்து, வறட்சி காலங்களில் தமிழகம் சாகுபடி செய்யலாமே... 'நீர் சேமிப்பு, நீர் மேலாண்மை தொடர்பாக தமிழக அரசு இதுவரை என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது?' என, சரமாரியாக கேட்ட கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை.நடப்பாண்டில் மட்டுமல்லாமல், கடந்த பல ஆண்டுகளாகவும், இதே நிலைமை தான் ஏற்பட்டு வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.குறிப்பாக, 2013ம் ஆண்டு, இதே போல, கடை மடைக்கு தண்ணீர் எட்டாத நிலையில், அதிகமான அளவு கடலில் திறந்து விடப்பட்டது. அதற்கு முன், 2005ம் ஆண்டும், இதே போல பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலையில், 140 டி.எம்.சி., தண்ணீர் கடலுக்கு திறந்து விடப்பட்டது.காவிரியில் உபரியாக கிடைக்கும் தண்ணீரை தேக்கி வைக்க, பல புதிய பாசனத் திட்டங்கள் தீட்டப்பட்டிருந்த போதும், அவற்றை நிறைவேற்றுவதில் அரசு அக்கறை காட்டவில்லை. குறிப்பாக, மாயனுார் கதவணையிலிருந்து காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் தீட்டப்பட்டிருந்த போதும், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், உபரி நீரை, தமிழகத்தின்வறண்ட மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகருக்கு திருப்பி விட்டு, பயன்படுத்தியிருக்க முடியும். அது போல, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில், ஏற்கனவே திட்டமிட்ட, தலா, ஏழு கதவணைகளை கட்டி முடிப்பதன் மூலம், ஓரளவு தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்த முடியும். இத்தகைய திட்டங்களை நிறைவேற்றாமல், கிடைக்கும் தண்ணீரை கடலில் திறந்து விட்ட பின், தண்ணீருக்காக கையேந்தும் நிலை தான் நீடிக்கிறது.எனவே, தமிழக அரசு, இனியாவது கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து வைத்து, திட்டமிட்டு பயன்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.தொடர்புக்கு: எல்.முருகராஜ்பத்திரிகையாளர்murugaraj@dinamalar.inWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X