தமிழக அரசின், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து, 30 சதவீத தனியார் மருத்துவமனைகள் விலகிச் செல்வதாக, கடந்த 11ம் தேதி தேர்தல் களத்தில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக, அத்திட்டத்தைச் செயல்படுத்தி வரும் ஸ்டார் ஹெல்த் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் அனுப்பியுள்ள விளக்கத்தின் சாராம்சம்: காப்பீட்டுத் திட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை, சொந்த காரணங்களுக்காக விலகியுள்ள ஓரிரு மருத்துவமனைகள் தவிர, எந்த மருத்துவமனையும், திட்டத்தின் குறைபாடுகளால் விலகியதில்லை.
தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இதுவரை, 105 மருத்துவமனைகள் விலக்கி வைக்கப்பட்டுள்ளன. அதன் பின், அவை அளித்த விளக்கத்தின்படி, 72 மருத்துவமனைகள் மீண்டும் இத்திட்டத்தில் இணைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை குறை கூறி, மருத்துவமனைகள் விலகியதாக கூறுவது ஏற்புடையதல்ல.
இவ்வாறு ஸ்டார் ஹெல்த் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், சேலம் எஸ்.பி.எம்.எம்., மருத்துவமனை இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடு எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அத்துடன், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிபந்தனைகள் புரிவது இல்லை. "காப்பீட்டுத் திட்ட அட்டை இருந்தால் போதும்; சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்' என, விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், நோயாளிகளுக்கு முதல்கட்ட பரிசோதனைகளான, எக்ஸ்-ரே, ஸ்கேனிங், ரத்தப் பரிசோதனை உள்ளிட்டவற்றுக்கு செலவிடப்படும் தொகைகளை, இத்திட்டத்தில் சேர்க்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இன்சூரன்ஸ் நிறுவனத்தினரே, குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து, அந்தத் தொகைக்கு மேல் ஆகும் செலவை ஏற்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். "ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு, இந்நிறுவனத்தின் அனுமதி பெற்ற பின்னரே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்' எனவும், மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அவர்களின் முன்அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் பொறுப்பேற்பதில்லை. அத்துடன், குறிப்பிட்ட நாள் மட்டுமே மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டும் எனவும் இன்சூரன்ஸ் நிறுவனம் விதிமுறைகளை வகுத்துள்ளது.
அறுவை சிகிச்சை முடித்த பின், இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு மருத்துவமனை தரப்பில் அனுப்பி வைக்கப்பட்ட செலவு, "பில்'லில், குறிப்பிட்ட தொகையை மட்டுமே நிறுவனம் வழங்குகிறது. இதனால், மீதி தொகையை நோயாளிகளிடம் இருந்து பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், எட்டு மாதங்களுக்கு முன்பே இத்திட்டத்தில் இருந்து விலகி விட்டோம். இவ்வாறு தேவராஜன் கூறினார்.
இதுபோலவே, மேலும் பல மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. அவர்களின் விவரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE