செல்லப்பிள்ளை நான்...ஒரு நடிகனின் நாடகம்| Dinamalar

செல்லப்பிள்ளை நான்...ஒரு நடிகனின் நாடகம்

Added : ஆக 05, 2018
செல்லப்பிள்ளை நான்...ஒரு நடிகனின் நாடகம்

சிறிய கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் கூட திறமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து, 'டிவி' சீரியல்களில் பாசக்கார அண்ணனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தேனி மீனாட்சிசுந்தரம். இவர் கதாபாத்திரங்கள் மூலம் தமிழ் சீரியலில் தனக்கான ஒரு இடத்தையும் பிடித்திருக்கிறார். தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக இவர் மனம் திறந்ததாவது...

பிறந்தது தேனி மாவட்டம். சிறிய வயதில் மதுரைக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்து விட்டோம். அங்கு பள்ளி, கல்லுாரி படிப்பை முடித்தேன். பள்ளிக் காலங்களில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' உட்பட சில நாடகங்கள் நடத்துவோம். நான் தான் கட்டபொம்மன் வேஷம் தரிப்பேன். என் குரல் வளம் நாடகங்களில் ஹீரோ வாய்ப்புகளை பெற்று தந்தது. வசனங்களை சத்தமாக உச்சரித்து நடிக்கும் போது, பார்வையாளர்கள் நம் நடிப்பை ரசிப்பது புரிந்தது.

அப்போதே இனி நடிப்புத் தான் எல்லாம் என முடிவு செய்தேன். பின் கதை, கட்டுரைகள், ஜோக்குகள் எழுத துவங்கினேன். தினமலர் வாரமலரில் என் கவிதை, கதை, ஜோக்குகளுக்கு பரிசுகள் கிடைத்துள்ளன. ஒரு நாள் 'டிவி' யில் சீரியல் பார்த்து கொண்டிருந்த அம்மா, நீயும் நடிக்க போடா, பாரதிராஜா நம்மூர்காரர் தான் போய் வாய்ப்பு கேளுன்னு விளையாட்டாய் கூறியதை, சீரியஸாக எடுத்துக் கொண்டு, மறுநாளே தேனியில் பாரதிராஜாவை சந்தித்தேன். சிறிய வயதில் நடித்த மேடை அனுபவம் தைரியமாக அவர் முன்பு யதார்த்தமான நடிப்பை தர உதவியது.

'அப்பனும் ஆத்தாளும்' என்ற சீரியலில் மெயின் ரோலில் நடிக்கும் வாய்ப்பை தந்தார். அடுத்த அவர் இயக்கிய 'அன்னக்கொடி' திரைப்படத்திலும், 'முதல் மரியாதை' சீரியலிலும் நடிக்க வைத்தார். அவருடைய செல்லப்பிள்ளையாக மாறினேன். பின் நடிக்க வாய்ப்பின்றி தனியார் கம்பெனிகளில் வேலை பார்த்து வந்தேன். அந்த நேரத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா' திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தேன். அதன்பின் வாய்ப்பின்றி சோர்ந்து போயிருந்த நேரத்தில் இயக்குனர் அருள்ராஜனிடம் இருந்து அழைப்பு வந்தது. 'வந்தாள் ஸ்ரீதேவி' சீரியலில் ஹீரோயினுக்கு அண்ணன் கதாபாத்திரம் கிடைத்தது. இந்த சீரியல் மூலம் தமிழ்நாட்டு பெண்களின் பாசமான அண்ணனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சினிமா முயற்சியும் தொடர்கிறது. சினிமா, சீரியல் என்ற வேறுபாடு இல்லாமல், ஹீரோ, வில்லன், காமெடியன் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயார், என்றார் மீனாட்சிசுந்தரம்.

இவரை வாழ்த்த 99408 92889.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X