பெரிய ஆபீசருக்கு அவரு தான் பி.சி.,... பேரை கெடுக்குறதுல எப்பவுமே பிஸி| Dinamalar

பெரிய ஆபீசருக்கு அவரு தான் பி.சி.,... பேரை கெடுக்குறதுல எப்பவுமே 'பிஸி'

Added : ஆக 07, 2018
Share
அலைபேசியில் பேசி முடித்த அடுத்த அரை மணி நேரத்தில், சித்ராவின் வீட்டில் 'என்ட்ரி' ஆனாள் மித்ரா; அவளை அதிர்ச்சியோடு பார்த்த சித்ரா, 'அதுக்குள்ள வந்துட்டியா...ஏன்டி இவ்ளோ 'பாஸ்ட்'டா வர்ற' என்று கோபித்தாள்.''இல்லைக்கா...உன்கிட்ட பேசுனப்ப, நான் பக்கத்துல தான் இருந்தேன்; நம்மூர்ல 'பாஸ்ட்'டா வர்றதால, எவ்ளோ மோசமான விபத்து நடக்குதுன்னு எனக்குத் தெரியாதா?'' என்றாள்
பெரிய ஆபீசருக்கு அவரு தான் பி.சி.,... பேரை கெடுக்குறதுல எப்பவுமே 'பிஸி'

அலைபேசியில் பேசி முடித்த அடுத்த அரை மணி நேரத்தில், சித்ராவின் வீட்டில் 'என்ட்ரி' ஆனாள் மித்ரா; அவளை அதிர்ச்சியோடு பார்த்த சித்ரா, 'அதுக்குள்ள வந்துட்டியா...ஏன்டி இவ்ளோ 'பாஸ்ட்'டா வர்ற' என்று கோபித்தாள்.
''இல்லைக்கா...உன்கிட்ட பேசுனப்ப, நான் பக்கத்துல தான் இருந்தேன்; நம்மூர்ல 'பாஸ்ட்'டா வர்றதால, எவ்ளோ மோசமான விபத்து நடக்குதுன்னு எனக்குத் தெரியாதா?'' என்றாள் மித்ரா.''ஆமா மித்து...போன வாரம் தான், நம்ம சிட்டிக்குள்ள 'ஆக்சிடென்ட்' குறைஞ்சிருச்சுன்னு புள்ளி விபரத்தோட பேப்பர்ல பார்த்தேன்; அடுத்த நாளே, ஒரே 'ஆக்சிடென்ட்'ல ஆறு பேர், அநியாயமா செத்துட்டாங்க; அடுத்து ரெண்டு நாள்ல, 'எல் அண்ட் டி' பை-பாஸ்ல மூணு காலேஜ் பசங்க 'ஸ்பாட் அவுட்' ஆகியிருக்காங்க; எல்லாத்துக்குமே காரணம், 'ஸ்பீடு'தான்...அதைத் தடுக்குறதுக்கு, போலீஸ் எதுவுமே செய்யுற மாதிரி தெரியலை'' என்றாள் சித்ரா.''இப்பவும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ஈரோடு ரூட்கள்ல, பிரைவேட் பஸ் வேகத்தை 'கன்ட்ரோல்' பண்ணலேன்னா, இந்த மாதிரி பெரிய ஆக்சிடென்ட் நடந்துட்டேதான் இருக்கும்'' என்றாள் மித்ரா.''இந்த பஸ்களோட எண்ணிக்கையைக் குறைக்க, பொள்ளாச்சிக்கு பாசஞ்சர் ரயில் விடணும்னு போராடிட்டே இருக்காங்க; ஆனா, கோட்ட அதிகாரிங்க, பிரைவேட் பஸ்காரங்கள்ட்ட பெட்டியை வாங்கிட்டு, 'ரயில் விட பெட்டி இல்லை'ன்னு இழுத்து அடிக்கிறாங்க; இன்னொரு பக்கம், கோயம்புத்துார்-சேலம் பாசஞ்சர் டிரெயினையும், அடிக்கடி ரத்து பண்றாங்க; இப்பக்கூட 13 நாள் 'கேன்சல்' பண்ணிருக்காங்க...நிரந்தரமா நிறுத்திருவாங்களோன்னு பயமா இருக்கு'' என்றாள் சித்ரா.
''அந்த 'ரூட்'காரங்களும் பெட்டி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்களோ என்னவோ'' என்ற மித்ரா, 'டிவி'யைப் போட்டு, ஒவ்வொரு சேனலாக மாற்றினாள். ஏதோ ஒரு சேனலில், 'ரத்தக்கண்ணீர்' எம்.ஆர்.ராதா, 'காந்தா...காந்தா' என்று கதறிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் மித்ரா கேட்டாள்...''அக்கா... எஸ்.பி., ஆபீஸ்ல 'க்ரைம்' பாக்குற 'பாப்' கட்டிங் 'இன்ஸம்மா'வை பத்தி, பேசிட்டு இருந்தோமே; புது எஸ்.பி., வந்த பிறகும், அவுங்களோட 'மிரட்டல் வசூல்' குறையவே இல்லியாமே...'எத்தனை எஸ்.பி., மாறுனாலும், என்னை யாரும் அசைக்க முடியாது'ன்னு 'பாப்' தலையை 'ஸ்டைலா' உலுப்புறாங்களாம்; அந்தளவுக்கு, அவருக்கு ஆளுங்கட்சியில பெரிய செல்வாக்கு இருக்குங்கிறாங்க; அப்பிடி 'ஆதரவு' தர்றது யாருன்னு தான் தெரியலை!''''ஆனா, புது எஸ்.பி., கை சுத்தமானவர்ங்கிறாங்களே?''''நானும் அப்பிடித்தான் கேள்விப்பட்டேன்...ஆனா, அவரு கை நீளம்னு தெரியும்; சாமளாபுரம் டாஸ்மாக் போராட்டத்தை மறக்க முடியுமா?''''கையைப் பத்தி பேசவும் கையெழுத்து ஞாபகம் வந்துச்சு...போதை ஊசி கடத்துன கேஸ்ல மாட்டுனவனுக்கு, ஜாமின் எடுக்குறதுக்கு, வலிப்பு நோய் இருக்குறதா, போலி சர்ட்டிபிகேட் 'புரடியூஸ்' பண்ணுன விவகாரத்துல, பல பேரு மாட்டுவாங்க போலிருக்கு. போலீஸ் தீவிரமா விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க; யாரோ ஒருத்தரோட 'மெடிக்கல் ஹிஸ்ட்ரி'யை எடுத்து, இவனோட பேரைச் சேர்த்து 'சர்ட்டிபிகேட்' ரெடி பண்ணிருக்காங்களாம்''
''அதுல, ஜி.எச்.ல இருக்குற ஒரு டாக்டரும் மாட்டுவார்ங்கிறாங்க...அவருக்கும், இந்த போதை கும்பலுக்கும் ரொம்ப நாளா தொடர்பு இருக்குமோன்னு, போலீஸ்க்கு 'டவுட்' வந்திருக்கு...அது மட்டுமில்லாம, அந்த பையனுக்கு திருப்பூர்ல கல்யாணம் நடக்கப் போறதா ஒரு பத்திரிக்கையும் அடிச்சு, ஜாமினுக்கு விண்ணப்பிச்சிருக்காங்க...அதுவும் உண்மையான்னு போலீஸ் விசாரிக்கிறாங்க''''எனக்கென்னவோ, போதைக் கும்பல் விஷயத்துல, போலீஸ்ட்ட பழைய ஸ்பீடு இருக்கிறது மாதிரித் தெரியலை'' என்றாள் சித்ரா.அதைக் கவனிக்காத மித்ரா, சேனலை மாற்றினாள். மியூசிக் சேனலில், 'ஒரு சூறைக்காத்து ஊரைப் பாத்துப் போகுது' என்று, ஜீன்ஸ் போட்டு 'பவர் பாண்டி'யாக ஆடிக்கொண்டிருந்தார் ராஜ்கிரண்.''அக்கா...நம்ம ஊர்லயும் ஒரு 'பவர் பாண்டி' இருக்காரு தெரியுமா...போஸ்ட்டிங் பேருலதான் அவரு 'பி.சி.'...ஆனா, ஆளு எப்பவுமே 'பிஸி'தான்'' என்று 'இன்ட்ரோ' கொடுத்தாள் மித்ரா.''என்னடி 'பி.சி.'ங்கிற... 'பிஸி'ங்கிற?'' என்று குழம்பினாள் சித்ரா.''நம்ம டிஸ்ட்ரிக்ட் ஆபீசர்ட்ட இருக்குற, பர்சனல் கிளார்க்கைத்தான் சொல்றேன்...அந்த பெரிய ஆபீசர், 'ஆக்டிவ்'வா செயல்படுறாரோ இல்லியோ...எளிமையான அணுகுமுறை உள்ளவர்ன்னு மாவட்டத்துக்கே தெரியும்; ஆனா, இவரு பண்ற 'பந்தா'வும், 'பவர்' காட்டுறதையும் பாத்துட்டு, எல்லா டிபார்ட்மென்ட் ஆபீசர்களும் கொதிச்சுப் போயிருக்காங்க; யார் போன் அடிச்சாலும், எடுக்குறதே கிடையாது; பெரிய ஆபீசரை யார் யார் பார்க்கணும்னு, இவர் தான் முடிவு பண்றாராம்'' என்றாள் மித்ரா.
''மித்து...அவரு, பெரிய ஆபீசர் பேரை ரொம்பவே 'மிஸ் யூஸ்' பண்ணி, நல்லா சம்பாதிச்சிட்டார்ங்கிறாங்க; ஊர்ல வலுவா சொத்து சேத்துட்டாராம்; ஆபீசர் பேரை ரொம்பவே கெடுத்துடுவாரு போலிருக்கு!'' என்றாள் சித்ரா.
''இப்பிடித்தான், தொண்டாமுத்துார் டவுன் பஞ்சாயத்து ஆபீஸ்ல இருக்குற முக்கியமான ஆபீசரும், தன்னைக் கொண்டு வந்த ஆளுங்கட்சிக்காரங்களுக்கே கெட்ட பேரு வாங்கிக்கொடுக்குறாரு; ஆபீசுக்கு வர்றதே கிடையாது; வந்தாலும் 'லேட்'டா வந்துட்டு, மாடியில இருக்குற ஓய்வறையில போய் உக்காந்துக்கிறாராம்; அங்க இருந்து, கீழ யார் யார் வர்றாங்கன்னு 'சிசிடிவி'யில பாத்துட்டு, அவருக்குத் தேவையான ஆள் வந்தா மட்டும், மேல கூப்பிட்டுப் பேசுறாராம்'' என்றாள் மித்ரா.''அப்பிடி 'செயல்'படாத அலுவலரா இருந்தா, ஆளுங்கட்சிக்காரங்களே விட்டு வைக்க மாட்டாங்களே'' என்று கேட்டாள் சித்ரா.''அது தெரியலை...அவர் மேல மெயின் புகார் என்னன்னா...லேடீஸ்களை 'நைட்' எட்டு மணிக்கு மேலயும் வேலை வாங்குறாராம்; ஊர்க்காரங்களே கொதிச்சுப் போயி, 'டிஎம்கே'காரங்கள்ட்ட சொல்லிருக்காங்க; அவுங்க, அவரை மாத்தச் சொல்லி, போராட்டம் நடத்தலாமான்னு யோசிச்சிட்டு இருக்காங்களாம்'' என்றாள் மித்ரா.''மாத்துறதுன்னதும் எனக்கு, பள்ளிக் கல்வித்துறையில அலுவலகப் பணியாளர்களுக்கு நடக்குற 'டிரான்ஸ்பர் கவுன்சிலிங்' ஞாபகம் தான் வந்துச்சு. மூணு வருஷத்துக்கு மேல இருக்கிறவுங்களை 'டிரான்ஸ்பர்' பண்ணனுமாம்; ஆனா, ஒண்டிப்புதுார்ல இருக்குற ஒரு லேடி ஆபீசர், அவுங்க ஆபீஸ்ல இருக்குற ஜூனியர் அசிஸ்டென்ட் பணியிடம் காலியா இருக்குறதையே மறைச்சிட்டு, சூலுார்ல இருந்து தனக்கு வேண்டிய ஒரு 'லேடி'யைக் கொண்டு வந்துட்டாங்களாம்'' என்றாள் சித்ரா.''அவுங்ககிட்ட அப்பிடி என்ன ஸ்பெஷலாம்?'' என்று கேட்டாள் மித்ரா.''அந்தம்மா, பிரைவேட் ஸ்கூல்களை எல்லாம் கூப்பிட்டு, 'அதைக் கொடுங்க; இதைக் கொடுங்க'ன்னு நல்லா 'புரோக்கர்' வேலை பார்ப்பாங்களாம்...அதே மாதிரி, சி.இ.ஓ., ஆபீஸ்லயும் ரெண்டு பேரு, மூணு வருஷத்துக்கு மேல இருக்குறாங்களாம்; அவுங்க ரெண்டு பேரும் நல்லா வேலை பார்ப்பாங்களாம்; அதனால, அந்த இடங்களை மறைச்சு, அங்கேயே இருக்க வச்சுட்டாராம், அய்யாவோட அண்ணன்'' என்றாள் சித்ரா.
''அக்கா...நம்மூரு யுனிவர்சிட்டி சார்புல, ஊரு உலகமெல்லாம் நடத்திட்டு இருந்த தொலைதுார கல்வி மையங்களை, வேற வழியில்லாம மூடுறாங்கள்ல...அதுக்குப் பதிலா, உயர் கல்வி கற்றல் மையம்கிற பேருல, பிரைவேட் காலேஜ்கள்ல, இதே மாதிரி 'சென்டர்'களை திறக்குறதுக்கு முயற்சி பண்ணுனாங்க...ஆனா, 49 காலேஜ் தான், இதை நடத்த விருப்பம் தெரிவிச்சிருக்காங்க; கொடுமை என்னன்னா, இதுக்கு இன்னும் யு.ஜி.சி., அனுமதியே வாங்கலை'' என்றாள் மித்ரா.''யுனிவர்சிட்டி போயிட்டு, மருதமலை போகாம வர முடியுமா...அங்க கோவிலுக்கு உபயதாரர்கள் கொடுக்குற பிரசாதங்களை எல்லாம், பக்தர்களுக்கு தராம, கீழ இருக்குற பிரசாதக்கடையில வித்து காசை வாங்கிக்கிறாங்களாம்; போன வாரம் வந்த மூணு தார் வாழைப்பழம், ஆறு கிலோ பேரிச்சம்பழத்தை இப்பிடித்தான் வித்திருக்காங்க'' என்றாள் சித்ரா.
''அப்பிடியே வடவள்ளி நியூஸ் ஒண்ணு...அங்க இருக்குற பதிவுத்துறை ஆபீசர், தொட்டதுக்கெல்லாம் துட்டு வாங்குறார்னு பேசிட்டு இருந்தோமே...அவருக்கும், அவரைக் கொண்டு வந்த ஆளுங்கட்சிக்காரங்களுக்கும் உரசலாயி, அடிதடி வரைக்கும் போயிருச்சாம்; அநேகமா, சீக்கிரமே அங்க இருந்து துாக்கிருவாங்கன்னு ஒரு தகவல்'' என்றாள் மித்ரா.சித்ராவின் அம்மா, உறவினர்கள் சிலருடன் வீட்டில் நுழைந்ததும், இவர்களின் அரட்டை, தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X