delhi ush | முடிக்காமல் விடமாட்டார்| Dinamalar

முடிக்காமல் விடமாட்டார்

Updated : ஆக 12, 2018 | Added : ஆக 11, 2018 | கருத்துகள் (3)
delhi ush, டில்லி உஷ், பிரதமர் மோடி, PMMOdi, rajyasabha,ராஜ்யசபா, odisha ஒடிசா, நவீன் பட்நாயக், naveen patnaik,  பிஜு ஜனதாதளம், biju janatadal, ஐக்கிய ஜனதாதளம், United janata dal, நிதிஷ்குமார், Nitish kumar, காங்கிரஸ், congress, ராகுல், rahul, துணைத்தலைவர்,vicepresident, திமுக,  dmk, குலாம்நபி ஆசாத், gulamnabi azad, ஹரிவன்ஷ், harivansh, கருணாநிதி, karunanidhi, நிர்மலா சீதாராமன், nirmala sitaraman, பா.ஜ., bjp, கனிமொழி,kanimozhi, மெரினா, merina, குருமூர்த்தி, gurumurthi,முதல்வர் பழனிசாமி, palanisamy


பிரதமர் மோடி ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால், அதை முடிக்காமல் விடமாட்டார். அதற்காக எதையும் செய்ய தயாராக இருப்பார். ராஜ்ய சபா துணைத்தலைவர் தேர்தலில், பா.ஜ., கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற மோடி மேற்கொண்ட முயற்சி, பா.ஜ.,வினரையே திணறடித்து விட்டது. குறிப்பாக, ஒடிசாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர், தர்மேந்திர பிரதானை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. 'ஒடிசா மாநில முதல்வர் வேட்பாளர் நீங்கள் தான்; அதற்கான வேலையில் இப்போதிலிருந்தே ஈடுபடுங்கள்' என பிரதானிடம் சொல்லியிருக்கிறார், மோடி.இதனால், ஒடிசாவில், பிஜு ஜனதாதள முதல்வர், நவீன் பட்நாயக்கை கடுமையாக தாக்கி பிரசாரம் செய்து வருகிறார், தர்மேந்திர பிரதான். இந்நிலையில், நவீன் பட்நாயக்கின் ஆதரவைக் கேட்டுள்ளார், மோடி. 'எங்கள் மாநிலத்தில், பா.ஜ., தான் எதிர்க்கட்சி; உங்களுக்கு ஆதரவு அளிக்க முடியாது; ஆனால், உங்கள் கூட்டணி வேட்பாளரை ஆதரிப்போம்' என, பட்நாயக் சொன்னாராம்.உடனே, பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு போன் போட்டு, அவர் கட்சி வேட்பாளரை போட்டியிட சொன்னதோடு, 'பட்நாயக்கிடம் பேசிவிடுங்கள்' எனவும், மோடி சொன்னாராம். இதனால், 'யாருக்கு எதிராக போராட வேண்டுமோ, அவருடைய ஆதரவையே கேட்டு பெற்றுள்ளாரே' என, பிரதான் நொந்து போயுள்ளார். அதே சமயம், ஒடிசா மாநில தேர்தல் பிரசாரத்தில், பட்நாயக்கை எதிர்த்தும் பேசுவார் மோடி என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இப்படி, மோடி அனைவருடனும் போனில் பேசி ஆதரவு கேட்டுக் கொண்டிருக்க, காங்., தலைவர் ராகுல், எதையும் கண்டு கொள்ளவில்லை. எந்த எதிர்க்கட்சி தலைவருடனும் ராகுல் பேசவேயில்லை; குலாம்நபி ஆசாத் மட்டுமே பேசினாராம்.


தெளிவில்லாமல் இருக்கின்றனரே?

சமீபத்தில், ராஜ்யசபா துணைத்தலைவர் தேர்தல் நடந்து முடிந்து, பா.ஜ., கூட்டணியைச் சேர்ந்த நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் ஹரிவன்ஷ் வெற்றி பெற்றார்.இதன் பின்னணியில், பல பரபரப்பு விவகாரங்கள் நடந்தேறியுள்ளன. இதனால், காங்கிரஸ் கடுப்பில் உள்ளது. இந்த தேர்தலுக்கு முன், தி.மு.க., தலைவர், கருணாநிதி காலமானார். மறுநாள் தேர்தல்.தி.மு.க., - எம்.பி.,க்கள், நான்கு பேர் ஓட்டளிக்க, டில்லி வருவரா என, எதிர்க்கட்சியினர் மத்தியில் சந்தேகம் இருந்தது. ஆனால், கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட அன்று இரவே, தி.மு.க., - எம்.பி.,க்கள், சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் டில்லி வந்துவிட்டனர்.'ராஜ்ய சபா தேர்தலில் பங்கு பெறவில்லை என்றால் சரியாக இருக்காது' என்பது தலைமையின் கருத்தாம். தேர்தல் நடைபெறும் தினத்தன்று, 'ஓட்டெடுப்பில் பங்கு பெறாமல் வெளியேறுங்கள்' என, எம்.பி.,க் களுக்கு சென்னையிலிருந்து உத்தரவு வந்ததாக சொல்லப்படுகிறது.ஆனால் சிறிது நேரத்தில், 'பா.ஜ., கூட்டணி வேட்பாளருக்கு எதிராக ஓட்டளியுங்கள்' என மறுபடியும் சென்னையிலிருந்து உத்தரவு. கடைசியில், காங்., வேட்பாளருக்கு ஆதரவாக, தி.மு.க., ஓட்டளித்தது.இந்த விஷயம், காங்., சீனியர் தலைவர்களுக்கு தெரிந்ததும், 'ஏன் இப்படி, தி.மு.க., தெளிவில்லாமல் இருக்கிறது' என வருத்தப்பட்டனராம். கருணாநிதியின் மறைவிற்கு பின் கூட்டணி எப்படியாகுமோ என, காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் வீண் புரளி என மறுக்கின்றனர், தி.மு.க.,வினர். 'இந்த விவகாரத்தில், காங்., சரியாக செயல்படவில்லை; பா.ஜ., கூட்டணி விரைந்து செயல்பட்டதைப் போல் காங்கிரஸ் முயற்சிக்கவில்லை' என, தி.மு.க., குற்றம் சாட்டுகிறது. இதற்கிடையே, சிவாவை, ராஜ்யசபா துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சி வேட்பாளராக நிறுத்த முயற்சி நடந்துள்ளதாகவும், அதற்கு, தி.மு.க., தலைமை அனுமதி தரவில்லை என்றும் பார்லி., வட்டாரங்களில் பேசப்படுகிறது.


டில்லியில் நடந்தது என்ன?

சென்னை நீதிமன்ற உத்தரவுப்படி, தி.மு.க., தலைவர் கருணாநிதி, அண்ணாதுரை சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டார். இதற்காக, தி.மு.க., தலைவர்கள் எப்படி செயல்பட்டனர் என்பது இப்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, தி.மு.க.,வின் சீனியர் தலைவர்கள் அடிக்கடி, பா.ஜ., அமைச்சர்களோடு பேசி வந்துள்ளனர். கனிமொழி, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அடிக்கடி இது குறித்து பேசியுள்ளார். கருணாநிதி சமாதி விவகாரத்தில் உதவ வேண்டும் என, நிர்மலாவிடம் கேட்டாராம், கனிமொழி. தவிர, பிரதமர் நரேந்திர மோடியுடனும் பேசினாராம் கனிமொழி. 'இடம் ஒதுக்குவது மாநில அரசின் வேலை; எங்களுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை; மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கும், மெரினாவில் இடம் ஒதுக்குவதற்கும் எந்த தொடர்பும் கிடையாது' என, தி.மு.க., தலைவர்களிடம் மத்திய அரசு தரப்பிலிருந்து சொல்லப்பட்டு விட்டதாம்.இந்த சமயத்தில், பா.ஜ., ஆதரவாளர், குருமூர்த்தி, 'மெரினாவில் இடம் தர முடியாது' என, தமிழக முதல்வர் பழனிசாமி சொன்னதற்கு ஆதரவாக பேசியுள்ளார். இது பெரும் பிரச்னையைக் கிளப்பியது. ரிசர்வ் வங்கியின் முக்கிய பதவிக்கு, மோடி அரசு, குருமூர்த்தியை நியமனம் செய்த அன்றே, அவர் அப்படி பேசியது, பா.ஜ., வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேவையில்லாமல் எதற்கு குருமூர்த்தி பேசி, பா.ஜ.,வின் பெயரைக் கெடுக்க வேண்டும் என, சீனியர் தலைவர்கள் வருத்தப்படுகின்றனர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X