காலா...கபாலி...காதலியின் குரல்...நான்| Dinamalar

காலா...கபாலி...காதலியின் குரல்...நான்

Added : ஆக 12, 2018 | |
டப்பிங் என்பது ஒரு நுணுக்கமான கலை. திரைக்கு பின்னால் சத்தமே இல்லாமல் தங்கள் சத்தங்களை அளித்து பல நடிகர், நடிகைகளின் குரலாய் நம் மனதில் பதிந்தவர்கள் டப்பிங் ஆர்டிஸ்ட்கள். அப்படி 2004-ல் சிறு கதாபாத்திரங்களுக்கு பின்னணி பேச ஆரம்பித்து இன்று திரைப்படங்களிலும், சீரியல்களிலும் பல முன்னணி கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வருகிறார் டப்பிங் ஆர்டிஸ்ட் ஜிஜி.
காலா...கபாலி...காதலியின் குரல்...நான்

டப்பிங் என்பது ஒரு நுணுக்கமான கலை. திரைக்கு பின்னால் சத்தமே இல்லாமல் தங்கள் சத்தங்களை அளித்து பல நடிகர், நடிகைகளின் குரலாய் நம் மனதில் பதிந்தவர்கள் டப்பிங் ஆர்டிஸ்ட்கள். அப்படி 2004-ல் சிறு கதாபாத்திரங்களுக்கு பின்னணி பேச ஆரம்பித்து இன்று திரைப்படங்களிலும், சீரியல்களிலும் பல முன்னணி கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வருகிறார் டப்பிங் ஆர்டிஸ்ட் ஜிஜி. சின்னத்திரை, வெள்ளித்திரை என இரு பெருந்துறைகளிலும் டப்பிங்கில் தனக்கென தனிமுத்திரையை பதித்துள்ள ஜிஜி., அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்..
* இந்த பயணம் தொடங்கியது எப்படி?கல்லுாரி காலத்தில் இருந்தே டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவேண்டுமென்பதில் உறுதியாக இருந்தேன். 'செல்லமே' எனது முதல் படம். அதில் கூட்டத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்திருப்பேன். பின்னர் படங்களிலும் சீரியல்களிலும் சிறு கதாபாத்திரங்களுக்கு பின்னணி பேசிகொண்டிருந்தேன். 'வெயில்' படத்தில் தான் முதன்முதலில் கதாநாயகிக்கு டப்பிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பாவானாவின் குரல் என்னுடையது! அதன்பின்னர் பொல்லாதவன் (ரம்யா), படிக்காதவன் (தமன்னா), வானம் (அனுஷ்கா), மாசிலாமணி (சுனைனா), சமீபத்தில் வெளியான காலா (ஹீமாகுரோஷி) வரை பலபடங்களில் பணியாற்றி விட்டேன்.

* சின்னத்திரையில் கலக்குகிறீர்களே?சீரியல்கள் பலவற்றிலும் கதாநாயகிகளுக்காக பேசும் வாய்ப்பு அமைந்தது. இதில் பெரிய பெயர் வாங்கி கொடுத்தது 'சரவணன் மீனாட்சி'.

* எப்படி கதாப்பாத்திரங்களுக்கு குரலை வேறுபடுத்துகிறீர்கள்?எந்த கதாபாத்திரங்களுக்கும் நான் ஜிஜியாக பேசுவது கிடையாது. ஒரு கதாபாத்திரத்தை பார்த்த உடனே அவர்களை உள்வாங்கி கொண்டு எப்படி பேசினால் சாத்தியபடும் என்பதை தீர்மானித்து கொண்டு பேசுவேன்.

* உணர்ச்சிகரமான காட்சிகளை எப்படி கையாள்கிறீர்கள்? இயல்பில் நான் உணர்ச்சி வசப்படுவது கிடையாது.

* ரஞ்சித்துடன் தொடர்ந்து 3 படங்கள் பணியாற்றியது குறித்து?மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களில் அவருடன் பணியாற்றியது மிகப்பெரிய விஷயம். மெட்ராஸ் படத்தில் கேத்ரின் தெரஸாவிற்கு பேசிய வடசென்னை ஸ்டைலுக்கு பாராட்டு கிடைத்தது. கபாலியில் ராதிகா ஆப்தே, காலாவில் ஹீமாகுரோஷி என ஒன்றுக்கொன்று வித்தியாசமான கேரக்டர்கள்.
அதற்கேற்ப நானும் குரலை முற்றிலும் வேறு படுத்தி பேசியிருக்கிறேன். அதற்காக என்னை நானே பாராட்டி கொள்வேன்.

* நெகிழ்வான தருணம்?கபாலியில் ரஜினியை 25 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் காட்சியில் ராதிகா ஆப்தே உடைந்து அழுவார். அதன் டப்பிங்கில் உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அதன்படி அழுங்கள் என ரஞ்சித் கூறி விட்டார். அந்த காட்சிஅழுது முடித்த பின் நிஜமாகவே கண் கலங்கி விட்டது. அது நெகிழ்வான தருணம்.

* குரலை எப்படி பாதுகாப்பீர்கள்?நான் பொதுவாக சத்தமாக பேசுவது கிடையாது. எப்போதும் தொண்டையில் ஈரப்பதம் இருப்பதற்காக அடிக்கடி தண்ணீர் எடுத்து கொள்வேன் அவ்வளவே. சிலர் ஐஸ்கிரீம் சாப்பிட கூடாது என்பார்கள். ஆனால் நான் நன்றாக ஐஸ்கிரீம் சாப்பிடுவேன்.
இந்த பயணம் மிகவும் கடினமானதுதான். ஆனால் அதை நான் இஷ்டபட்டு செய்ததால் எதையும் கஷ்டமாக நினைப்பதில்லை. எப்பொழுதும் காலந்தவறாமை என்ற ஒன்றை கடைபிடிக்கிறேன். ஒரு செயலில் இறங்கினால் அதில் தீவிரமாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். இன்று டப்பிங்கில் எனக்கென ஒருபெயரை உருவாக்கியிருக்கிறேன் என்றால் அதற்கான உழைப்பை நான் அளித்திருக்கிறேன்.
வாழ்த்த : jessylg7@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X