கலை நயமிக்க நாடகங்களை இயக்கி பெருமை பெற்றவர் சிவகாசி எம்.புதுப்பட்டி பொன்முருகன். பள்ளி பருவத்திலேயே தமிழ் மீது தீராப்பற்று கொண்டவர். சமூகம் சார்ந்த விடியல் கவிதைகளை எழுதி மெட்டு அமைத்து பாடி பிரபலமானவர். கவிச்செம்மல், பல்துறை வித்தகர், சீர்மிகு கவிஞர் போன்ற பல விருதுகள் இவரை தேடி வந்துள்ளன. தமிழ் மீது கொண்டுள்ள வேட்கையால் நாவலாசிரியராகவும் உருவெடுத்துள்ளார்.
இவரது 'சண்டியரும் கூல்பாண்டி' நாவல் திரைத்துறை முன்னணி இயக்குனர்களின் மனதை தொட்டது. இந்த நாவலை அடிப்படையாக கொண்டு திரைப்படம் எடுத்து இயக்குனராகவும் அவதாரம் எடுக்கவுள்ளார். தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் மனம் திறந்ததாவது.....
சிறு வயதில் பள்ளி படிப்பு முடித்து தந்தையுடன் கம்பு, மக்காச்சோள வயலில் உதவியாக இருந்தேன். இயற்கை காற்றை சுவாசித்து உணர்வு பூர்வமாக கவிதைகள் எழுதுவேன். அவ்வப்போது நாடகங்களை இயக்கி வந்தேன்.
கதைக்கேற்ப பாடல்களை நொடி பொழுதில் எழுதி மெட்டமைத்து காட்டுவேன். இதனால் நண்பர்கள் மூலம் 'அழகே இல்லாத அழகான 'கதை திரைப்படத்தில் பாடல்கள் எழுத வாய்ப்பு கிடைத்தது. பின் தொடர்ந்து பாடல் எழுத வாய்ப்புகள் இல்லை.
இயக்குனராக வேண்டும் என்பது தான் என் லட்சியம். இயக்குனர் முத்தையாவுடன் அறிமுகமாகி, மருது, கொம்பன் படங்களில் உதவியாளராக பணிபுரிந்தேன். தற்போது அவர் இயக்கும் தேவராட்டம் படத்திலும் உதவியாளராக இருந்து கொண்டே, நான் எழுதிய கதை 'சண்டியரும் கூல்பாண்டி'யை திரைப்படமாக எடுக்க உள்ளேன். பலரும், பாராட்டிய கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது என் லட்சியம்.
தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை கூறியுள்ளேன். அவர் ஓ.கே., தெரிவித்ததும் படப்பிடிப்பு துவங்கும் என்றார் பொன்முருகன்.இவரை வாழ்த்த 88384 89957.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE