தவமாய் தவம் இருந்து | Dinamalar

தவமாய் தவம் இருந்து

Added : ஆக 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

தவமாய் தவம் இருந்து குழந்தைகளை பெற்றால் மட்டும் போதுமா பெற்ற குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய நவீன உலகில் குழந்தை வளர்ப்பு முறையும் நவீனமாகி போனது. அந்த நவீனம் குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதை பெற்றோர் உணர்ந்தால் தான் குழந்தைகளை சுற்றி ஆரோக்கிய சூழ்நிலையை உருவாக்க முடியும்.டிஜிட்டல் டயட் : குழந்தைகள் ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டால் அவர்களுக்கு அதை முழுமையாக வெளிப்படுத்த தெரியாது. தன்னை தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் தன்மையும் குறைவு. அதனால் அதிக கோபம் வரும், கீழே விழுந்து புரண்டு அடம் பிடிப்பார்கள். 3 - 5 வயது வரை குழந்தைகளின் மனநிலை இப்படி தான் இருக்கும். அதை தவறாக புரிந்து கொண்டு குழந்தைகளை கண்டிக்கவோ, அடிக்கவோ கூடாது. அவர்கள் வழியிலேயே அவர்களை அணுக வேண்டும். குறிப்பாக குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவிட்டு அவர்களுடன் சிரித்து பேச வேண்டும், கட்டிப்பிடித்து அரவணைத்து அன்பை காட்ட வேண்டும், வெளியே அழைத்துச் சென்று வெளி உலக நடப்பு குறித்து தெரியப்படுத்த வேண்டும்.ஒரு வீட்டில் அப்பா அல்லது அம்மா ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கும் போது குழந்தை குறுக்கே வந்து ஏதாவது கேட்டால் 'தொல்லை பண்ணாதே போ' என்று விரட்டி விடுகிறார்கள். இப்படி விரட்டுவதால் அந்த குழந்தை தனிமையில் இருப்பதாக உணரும். இன்னும் சில பெற்றோர், குழந்தைகள் கையில் அலைபேசியை கொடுத்துவிட்டு 'தொல்லை விட்டது' என்று நிம்மதியாக 'டிவி' பார்க்கிறார்கள், துாங்க சென்றுவிடுகிறார்கள். இன்றைய சூழ்நிலையில் குழந்தைகள் படிப்பிற்காக அலைபேசி பயன்படுத்துவது தவறில்லை என்றாலும், படிப்பை தாண்டி பிற விஷயங்களை பார்க்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டும்.உடல் ஆரோக்கியத்திற்கு 'டயட்'டில் இருப்பதை போல குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு 'டிஜிட்டல் டயட்' அதாவது அலைபேசி பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். புளூவேல், வாட்ஸ் அப்பில் மோமோ சேலன்ஜ் போன்ற தற்கொலை கேம்கள் வலம் வரும் சூழ்நிலையில் குழந்தைகளை போனும் கையுமாக தனிமையில் விட்டுச் செல்வது மிகப்பெரிய தவறு என்பதை பெற்றோர் உணர்ந்து கவனமாக செயல்பட வேண்டும்.
வளர்ப்பு பொறுப்பு : ஒரு குழந்தையை வளர்ப்பதில் அம்மாவுக்கு தான் அதிக பொறுப்பு இருக்க வேண்டும். குழந்தைகளின் பேச்சு மற்றும் பழக்கங்கள் 'நெகட்டிவ்'வாக இருந்தால் கூட அதில் ஒரு 'பாஸிட்டிவ்' விஷயத்தை கண்டறிந்து அதை நோக்கி அவர்களை பயணிக்க செய்ய வேண்டும். உதாரணமாக ஒரு குழந்தை தரையில் பென்சில் வைத்து கிறுக்குகிறது என்றால் அந்த குழந்தையிடம் ஒரு பேப்பரை கொடுத்து ஓவியம் வரைய கற்றுக் கொடுக்க வேண்டும். அந்த ஓவியம் நன்றாக இல்லை என்றாலும் கூட 'ஆஹா சூப்பர் வெரிகுட்' என்று பாராட்ட வேண்டும். இப்படி செய்தால் தான் குழந்தைகள் தனக்குள் இருக்கும், தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை வெளிப்படையாக பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வர். சேட்டை செய்யாத குழந்தைகளே இல்லை அப்படி அவர்கள் சேட்டை செய்யும் போது 'சேட்டை செய்யாமல் சமத்தாக இருந்தால் ஒரு 'சாக்லேட்' பரிசாக கொடுப்பேன்' என்று கூறி கவனத்தை திசை திருப்ப வேண்டும். அப்பா அல்லது அம்மா குழந்தையை குளிக்க வைக்க வேண்டும், சாப்பிட வைக்க வேண்டும். அப்போது தான் அந்த குழந்தை பெற்றோரின் அரவணைப்பில், பாதுகாப்பாக இருப்பதாக உணர்வார்கள். வேலைக்கு செல்லும் பெற்றோர் பலர் குழந்தைகளை பணிப் பெண்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்று விடுவதால் அரவணைப்பு என்பது கிடைக்காமலே போய்விடுகிறது.
நவீன குருகுல கல்வி : குழந்தைகளுக்கு 2 - 5 வயதில் மூளை வளர்ச்சி அடையும் அந்த காலகட்டத்தில் அவர்களை பிரீ ஸ்கூலில் சேர்க்கலாம். பிரீ ஸ்கூல் என்பது அந்த கால குருகுல கல்வியின் நவீன வடிவம் தான் என்று கூறலாம். ஆ, ஆ... ஏ.பி.சி.டி... தவிர கிராப்ட் ஒர்க், ஒழுக்கம், எது சரி எது தவறு, பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பெரியவர்களிடம் எப்படி மரியாதை காட்ட வேண்டும் போன்ற வாழ்வியல் பண்புகளை கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு குழந்தை தவறி கீழே விழுந்துவிட்டால், சிரிக்காமல் உடனே ஓடிச் சென்று அந்த குழந்தையை துாக்கி விட வேண்டும் என்பதை கற்றுத்தர வேண்டும்.பொதுவாக பெற்றோர், குழந்தையின் 2 வயது வரை ஆரோக்கியமாக இருக்கிறார்களா, துாங்கினார்களா, சாப்பிட்டார்களா என்று தான் கவனிப்பார்கள். இரண்டு வயதுக்கு மேல் நன்றாக படிக்கிறார்களா என்று பார்ப்பார்கள். அவர்கள் புரிந்து படிக்கிறார்களா; இல்லை அப்படியே மனப்பாடம் செய்கிறார்கள் என்று கவனிப்பது இல்லை. சின்ன வயதிலேயே புரிந்து படிக்க பழக்கினால் தான் வளர, வளர குழந்தைகள் படிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.
பாரம்பரிய உணவும் : குழந்தைகளுக்கு தேர்ந்தெடுக்க தெரியாது நாம் எதை செய்கிறோமோ அதை பின்பற்ற தான் தெரியும். அதனால் அவர்கள் முன் கோபத்தை காட்டவோ, தீய வார்த்தைகளை பேசவே கூடாது. அதே போல் 'இன்று பீட்சா வாங்கி தருகிறேன் ஆனால் நாளை நீ சிறுதானிய உணவு சாப்பிட வேண்டும்' என்று, மென்மையாக கூறி துரித உணவு பழக்கத்தை மாற்றி பாரம்பரிய உணவு பழக்கத்தை கொண்டு வர வேண்டும். ஒரே மாதிரி உணவுகளை கொடுக்காமல் வித்தியாசமாக கொடுக்க வேண்டும். உதாரணமாக பொம்மை போன்ற தோசை, குட்டி இட்லி, கேரட் கலந்த சாதம் போன்ற பார்வைக்கு புதிதான அதே நேரம் சத்தான உணவுகளை கொடுக்கலாம்.டிவியில் கார்ட்டூன் அதிகம் பார்க்க ஆரம்பித்தால் அந்த கார்ட்டூன்களில் வன்முறை இல்லாத கார்ட்டூன்களை குறிப்பிட்ட நேரம் மட்டும் பார்க்க அனுமதிக்கலாம். சண்டைக் காட்சிகள், துப்பாக்கி சூடு, சாகசங்கள் நிறைந்த கார்ட்டூன்களை பார்த்தால் குழந்தைகளின் மனநிலையும் அதே போல் மாறிவிடும். ஒரு சில குழந்தைகள் கார்ட்டூன் கேரக்டர் போலவே மாறி பேசவும், நடக்கவும் ஆரம்பித்துவிடுவார்கள். எதுவாக இருந்தாலும் சரி அது அளவோடு இருக்க வேண்டும் என்று .உணர வைத்து குழந்தைகளை மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் வளர்ப்பதே பெற்றோரின் கடமை.- ஏ. சரண்யாகுழந்தைகள் நல கல்வியாளர்மதுரை. info@kiddiecastle.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X