திருச்சூர்: கேரளாவில், கன மழை மற்றும் பெரும் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது ஒரு புறம் இருக்க, காட்டு யானை ஒன்று கடந்து செல்வதற்காக அணை மதகுகளை மூடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா, திருச்சூர் மாவட்டத்தில் ஓடுவது சாலுக்குடி ஆறு. இதன் குறுக்கே பெருங்கல்குத்து அணை கட்டப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால், ஆக., 9ம் தேதி அணையின் மதகுகள் திறக்கப்பட்டன. இதனால் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது.
ஆக., 12ம் தேதி சார்பா மற்றும் இடானி ஆகிய இடங்களுக்கு இடையே காட்டுப்பகுதியில் யானை ஒன்று ஆற்றை கடக்க முடியாமல் பாறைகள் மீது நின்றிருப்பதை வனத்துறை ஊழியர்கள் கண்டனர். அவர்கள் அணை பராமரிப்பு ஊழியர்களை தொடர்பு கொண்டு அணை மதகுகளை மூட கோரினர். மதகுகள் மூடப்பட்டு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. நான்கு மணி நேரம் காத்திருந்த பிறகு, காலை 11 மணி அளவில் ஆற்றில் நீர் ஓட்டம் குறைந்தது. யானையும் அப்பகுதியை கடந்து சென்றது. இதன் பிறகே அணையின் மூன்று மதகுகளும் மீண்டும் திறக்கப்பட்டன.