கொச்சி : கேரளாவில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், 12 மாவட்டங்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ளதால், கொச்சி விமான நிலையம், நாளை மறுநாள் வரை மூடப்படுவதாக, அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில், கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பெரும்பாலான பகுதிகள், வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. நேற்று ஒரே நாளில் மழை, வெள்ளத்துக்கு, 25 பேர் பலியாகினர். முல்லை பெரியாறு, இடுக்கி, இடமலையர் அணை உள்ளிட்ட பல்வேறு அணைகளில் இருந்து, உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும், தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாலும், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும், 12 மாவட்டங்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கொச்சி விமான நிலையத்தின் ஓடு தளத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், விமானங்கள் புறப்படுவதிலும், தரை இறங்குவதிலும்
சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று இரண்டு மணி நேரம், விமானங்கள் வருகை, ரத்து செய்யப்பட்டன.
மேலும், வரும், 18 வரை, கொச்சி விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கொச்சி வர வேண்டிய விமானங்கள், வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. 'திருவனந்தபுரம், திருச்சூர் உள்ளிட்ட, 12 மாவட்டங்களில், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் காற்றுடன் பலத்த மழை பெய்யும்' என, தனியார் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக, குருவாயூர் எக்ஸ்பிரஸ் உட்பட, நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சில பயணியர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதிரப்பள்ளி, மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, சுற்றுலா பயணியர் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பெரியாறு, பம்பா, கிள்ளியாறு உள்ளிட்ட ஆறுகளில், வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
திருவனந்தபுரம் அருகேயுள்ள சில கிராமங்கள், தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால், அங்கு வசிப்பவர்களை மீட்க முடியாத சூழல் நிலவுவதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, கேரள போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்து, முழு வீச்சில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியாறு அணை நீர்பிடிப்பில், இரண்டு வாரங்களாக தொடர் மழை பெய்கிறது. நேற்று முன்தினம் காலை, 136.10 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று மதியம், 12:50 மணிக்கு, 142 அடியை எட்டியது. அணையின், மொத்த உயரம், 152 அடி. உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டியதால், நேற்று மதியம், அணைக்கு வந்த, 12 ஆயிரம் கன அடி தண்ணீர், அப்படியே வெளியேற்றப்பட்டது. தமிழகப் பகுதிக்கு, 2,200 கன அடி நீரும், அணையை ஒட்டியுள்ள, 13, 'ஷட்டர்கள்' வழியாக, கேரள பகுதிக்கு, வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கேரள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு லோயர்கேம்ப் மின் நிலைய குழாய்கள் வழியாக 1600 கன அடி நீரும், இறைச்சல் பாலம் வழியாக 900 கனஅடி தண்ணீர் மட்டுமே தமிழக பகுதிக்கு திறக்க முடியும். மீதியுள்ள தண்ணீரை கேரள பகுதிகளுக்கு தான் திறக்க முடியும். தற்போது கேரள பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கும் நிலையில் பெரியாறில் இருந்தும் 10 ஆயிரம் கன தண்ணீர் அங்கு செல்கிறது. வறண்டு கிடக்கும் மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு வெறும் 2200 கன அடி மட்டுமே திறக்க முடிந்துள்ளது. பெரியாறில் இருந்து தமிழக பகுதிகளுக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வழி செய்தால் அணையில் நீர்மட்டம் உயரும் போது மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசன பகுதிகள் பயன்பெறும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (28)
Reply
Reply
Reply