புதுடில்லி : மாநிலங்களின் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்த வகை செய்யும் சட்ட கட்டமைப்பை, சட்ட கமிஷன் பரிந்துரை செய்ய உள்ளது.
'சட்டசபைகளுக்கும், லோக்சபாவிற்கும் வெவ்வேறு சமயத்தில் தேர்தல் நடத்த, அரசிற்கு பெருந்தொகை செலவாவதால், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். இதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சட்ட சிக்கல் :
ஆனால், இந்த திட்டத்தை அமல்படுத்துவதில், சில சட்ட சிக்கல்கள் உள்ளதாக, தலைமை தேர்தல் ஆணையர், ஓ.பி.ராவத், தெரிவித்திருந்தார். இதையடுத்து, ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கான சட்ட கட்டமைப்பை, மத்திய சட்ட கமிஷன் விரைவில் பரிந்துரைக்க உள்ளதாக, அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்காக, அரசியல் சாசனத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும், தேவையான
திருத்தங்களை, சட்ட கமிஷன் பரிந்துரை செய்ய உள்ளது. இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; இருப்பினும், இதுதொடர்பாக சட்ட கமிஷன் அளிக்கும் அறிக்கை தொடர்பான விவாதங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் இடையே நடக்க, வாய்ப்புகள் உள்ளன.
ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கு, அரசியல் சாசனத்தில் இரண்டு ஷரத்துகள் திருத்தப்பட்டு, நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களில் உள்ள சட்டசபைகளில், அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு நடந்தால், 2019 முதல், நாடு முழுவதும் ஒரே சமயத்தில், இரு கட்டங்களாக தேர்தல் நடத்தும் வாய்ப்பு உள்ளது. 2019ல், முதல் கட்ட தேர்தலும், 2024ல், இரண்டாம் கட்ட தேர்தலும் ஒரே சமயத்தில் நடத்தப்படலாம்.
இது தொடர்பாக, கடந்த ஏப்ரலில், சட்ட கமிஷன் தயாரித்துள்ள ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்தலை அடுத்து, பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மை கட்சியின் தலைவரும், முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மை கட்சியின் தலைவரும், தங்கள் அரசின் ஸ்திரத் தன்மையையும், லோக்சபா அல்லது சட்டசபையின் ஸ்திரத் தன்மையையும் உறுதி செய்ய வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் அரசு, பாதியில் கவிழ்ந்தால், மீதமுள்ள காலத்திற்கும் அந்த அரசே ஆட்சியில் நீடிக்கும்; தேர்தல் நடந்து ஐந்தாண்டுகள் வரை, புதிதாக தேர்தல்
நடத்தப்படாது. முதல் கட்டமாக, ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்தலில், 2021க்குள் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் மாநிலங்கள் உள்ளன. ஆந்திரா, அசாம், பீஹார், ம.பி., மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள், இதில் உள்ளன.
பதவிக்காலம் :
வரும், 2024ல், இரண்டாம் கட்டமாக, ஒரே சமயத்தில் நடத்தப்படும் தேர்தலில், உ.பி., குஜராத், கர்நாடகா, டில்லி, பஞ்சாப் உள்ளன. லோக்சபா தேர்தலுடன், சட்டசபைத் தேர்தலை நடத்த, இந்த மாநிலங்களின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கு, அரசியல் கட்சிகள் மத்தியில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. மத்தியில் ஆளும், அகாலிதளம், சமாஜ்வாதி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகியவை, ஒரே சமயத்தில் தேர்தலை ஆதரிக்கின்றன. காங்., திரிணமுல் காங்., ஆம் ஆத்மி, தி.மு.க., தெலுங்கு தேசம், இடதுசாரி கட்சிகள், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய எதிர்க்கின்றன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (15)
Reply
Reply
Reply