காது நலன் காக்கும் வழி!| Dinamalar

காது நலன் காக்கும் வழி!

Added : ஆக 16, 2018
Advertisement
 காது ,நலன், காக்கும் ,வழி!

மழைக்காலம் தொடங்கி விட்டால் போதும் ஜலதோஷம், மூக்கடைப்பு, சளி, ஆஸ்துமா என்று ஆரோக்கிய பிரச்னைகள் வரிசைகட்டிவிடும். அதிலும் மூக்கில் ஏற்படும் சளிப்பிரச்னையை அலட்சியப்படுத்தினால், அது காதுப்பிரச்னையாக உருவெடுத்து ரொம்பவே சிரமப்படுத்தும்.

மூக்குக்கும் காதுக்கும் தொடர்பு இருப்பதால் தான் இந்தத்தொல்லை ஏற்படுகிறது.காது நோய்களில் முக்கியமானது காதுவலி. காதில் கொப்பளம் தோன்றுவது, சீழ் வடிவது, அழுக்கு அல்லது அந்நியப் பொருள்கள் அடைத்துக் கொள்வது, எறும்பு போன்ற பூச்சி புகுவது, அடிபவது போன்றவற்றால் வலி வரும்.மூக்கில் சளி பிடிப்பது, மூக்கு ஒழுகுவது, தடுமம் போன்ற மூக்குப் பிரச்னைகளால் காதுவலி வருவது தான் அதிகம். தொண்டை யில் சளி பிடித்து புண் ஏற்படுவது, டான்சில் வீங்குவது போன்றவையும் காதுவலியை வரவேற்கும். காதுவலிக்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணமாகும்.

காதில் சீழ் வடிந்தால்

காதில் சீழ் வடிவதற்கு முக்கியக் காரணம், ஜலதோஷம்தான். இதன் துவக்கத்தில், மூக்கில் தண்ணீர் மாதிரி சளி கொட்டும். தும்மல் வரும். இதைக் கவனிக்கத் தவறினால், மூக்கிலிருந்து மஞ்சள் நிறத்தில் சளி கட்டியாக வரும். இப்போதாவது இதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், சளியில் உள்ள கிருமிகள், தொண்டையையும் நடுக்காதையும் இணைக்கிற குழல் வழியாக நடுக்காதுக்குச் சென்று, சீழ் வைக்கும்.

பிறகு அங்குள்ள செவிப்பறையைத் துளைத்துக் கொண்டு வெளி காது வழியாக சீழ் வெளியேறும். காதில் சீழ் வடிந்தால், அது செவித் திறனைப் பாதிக்கும். ஆகவே, இதற்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றுவிட வேண்டும். காலம் கடத்தினால் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்க வேண்டும். இதற்கு இயற்கை நமக்குத் தந்துள்ள பாதுகாப்பு வளையம்தான், காதுக் குரும்பி. வெளிக்காதில் ஒருவித திரவம் சுரக்கிறது. அதுதான் குரும்பியாக மாறி, செவிப்பறையைப் பாதுகாக்கிறது. காதுக்குள் நுழையும் பூச்சி, அழுக்கு, அந்நியப் பொருள் போன்றவை செவிப்பறையைப் பாதித்து விடாதபடி தடுப்பது, இந்தக் குரும்பிதான். இதை அகற்றவேண்டிய அவசியமில்லை. தானாகவே ஊர்ந்து வெளியில் வந்துவிடும்.

அகற்றுவது எப்படி

குரும்பியை மூன்று வழிகளில் அகற்றலாம். நம் கண்ணுக்கு எளிதில் தெரியும்படி உருண்டையாகத் திரண்டிருக்கும் குரும்பியை ஊக்கு கொண்டு அகற்றிவிடலாம். சிலருக்குக் காதின் உள்புறமாக குரும்பி ஒட்டிக்கொண்டிருக்கும். இவர்களின் காதில் இதற்கென உள்ள சொட்டு மருந்து அல்லது தேங்காய் எண்ணெய் சில சொட்டுகள் சில நாட்களுக்கு விட்டால், குரும்பி அதில் ஊறி, தானாகவே வெளியில் வந்து விடும். என்றாலும், நாட்பட்ட குரும்பி இந்த வழியில் வராது. சிரிஞ்சு மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அகற்ற வேண்டும். இதற்கு மருத்துவர்தான் உதவ வேண்டும்.

காதுக்குள் ஏதாவது பிரச்னை என்றால், உடனே நாம் கையில் எடுக்கும் பொருள் 'பட்ஸ்'தான். காதுக்குள் குரும்பி சேர்ந்தால் பட்ஸ் கொண்டு அதை எடுக்க முயல்கிறோம். இந்த முயற்சி, குரும்பியை இன்னும் கொஞ்சம் உள்ளே தள்ளிவிடுமே தவிர, வெளியில் கொண்டுவராது. மாறாக, செவிப்பறையைத் தாக்கிப் புண்ணாக்கிவிடும். ஆகவே, கையில் தொடக்கூடாத ஒரு பொருள் உண்டென்றால் அது 'பட்ஸ்'தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இன்னும் பலருக்குக் காது குடைவது ஒரு பழக்கமாகவே உள்ளது. ஊக்கு, பேனா, பென்சில், பலப்பம், தீக்குச்சி, சாவி என்று கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் நுழைத்துக் குடைந்து கொண்டிருப்பார்கள். இந்தப் பழக்கம் நீடித்தால், செவிப்பறை பழுதடைந்து, பின்னொரு நாளில் காது கேட்காமல் போகும்.

சொட்டு மருந்து -கவனம்!

காதுக்குள் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், தலையைச் சாய்த்துப் பொருளைக் கீழே விழ வைக்கலாம் அல்லது மருத்துவரிடம் காண்பித்து அதற்குரிய கருவியால் வெளியில் எடுப்பதே நல்லது. காதில் எறும்பு போன்ற பூச்சி புகுந்திருந்தால், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை சில சொட்டுகள் விட்டால், பூச்சி அதில் இறந்துவிடும். பிறகு சில சொட்டுகள் தண்ணீர் விட்டு, தலையைச் சாய்த்தால் பூச்சி வெளியில் வந்துவிடும்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் காய்ச்சிய எண்ணெய்யைக் காதுக்குள் ஊற்றாதீர்கள். அப்படிச் செய்தால் அது காதைப் பாதிக்கும்.வலி, அடைப்பு, இரைச்சல் என்று காதுப் பிரச்னை எதுவானாலும் உடனே சொட்டு மருந்தை ஊற்றிக் கொள்வது சிலருக்குப் பழக்கம். இதனால் அவர்களுக்கு ஆபத்து தான் வருமே ஒழிய; காதுக்குப் பாதுகாப்பு ஏற்படுவதில்லை.

காது எப்போதுமே உலர்ந்த தன்மையுடன் இருக்க வேண்டிய உறுப்பு. அதில் அவசியமேயின்றி எண்ணெய், சொட்டு மருந்து என்று எதையாவது ஒன்றை ஊற்றி ஈரமாக வைத்திருந்தால், காற்றில் கலந்து வரும் பூஞ்சைக் கிருமிகள் அதில் உட்கார்ந்து கொண்டு அரிப்பை ஏற்படுத்தும். காது அடைத்த மாதிரி தோன்றும். காதுவலி, சீழ் வடிவது என்று பிரச்னைகள் தொடரும்.

இறுதியில் காது கேட்பது குறையும். ஆகவே தேவைப்பட்டால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனைப்படி காதில் சொட்டு மருந்து ஊற்றுங்கள்.
காது நலன் காக்க
1. அடிக்கடி சளி, ஜலதோஷம் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

2. கண்டகண்ட பொருட்களால் காதைக் குடையக்கூடாது.

3. குளிர் பானங்கள் குடிப்பதைக் குறைத்துக் கொள்வது நல்லது.

4. மூக்கைப் பலமாகச் சிந்தக்கூடாது.

5.காதுக்குள் காய்ச்சிய எண்ணெய்யை ஊற்றக்கூடாது.

6. சைனஸ், டான்சில் போன்ற வற்றுக்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

7. காதுகளில் வாக்மேன், ஹெட்போன் அணிந்தால் குறைந்த அளவில் வைத்துக் கேட்க வேண்டும்.

8.சுற்றுவட்டாரத்தில் அதிக இரைச்சல் இருந்தால், காதில் பஞ்சை வைத்து கொள்ள வேண்டும்.

9. தொடர்ந்து அலைபேசியில் பேசும் நிலை ஏற்பட்டால் ஒரு காதிலிருந்து மறு காதுக்கு மாற்றி மாற்றிப் பேசுவது நல்லது.

10. மதுவும் புகைபிடிப்பதும் காதின் நலனை பாதிக்கும். இந்த இரண்டுக்கும் விடை கொடுப்பது நல்லது.

-டாக்டர் கு. கணேசன் மருத்துவ இதழியலாளர் ராஜபாளையம்gganesan95@gmail.com

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X