மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா...

Updated : ஆக 21, 2018 | Added : ஆக 17, 2018 | கருத்துகள் (1)
Share
Advertisement
 மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா...

திருமலை திருப்பதி சென்றவர்கள் செல்பவர்கள் பெருமாளைப் பார்த்து தரிசித்து மகிழ்ந்த கையோடு இன்னோரு விஷயத்தையும் பார்த்து வியந்து போவர்.
அந்த இடத்திற்கு பெயர்தான் மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா நித்யா அன்னதான கூடம்.
பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் இந்த அன்னதான கூடத்தில் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் பேர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாக்காலங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.
காலையில் இருந்து இரவு வரை பக்தர்கள் வரிசை வரிசையாக போய் சாப்பிட்டுக்கொண்டே இருப்பர். ஒரே நேரத்தில் நாலாயிரம் பேர் வரை சாப்பிடலாம்.வருடத்திற்கு 96 கோடி ரூபாய் இந்த அன்னதானத்திற்காக செலவாகிறது.
சரி இனி விஷயத்திற்கு வருவோம் ஆசியாவின் மிகப்பெரிய இந்த அன்னதான கூடத்திற்கு மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா என்று பெயர் வைத்துள்ளனரே அவர் யார்? என்பதை தெரிந்து கொள்ளத்தான் இந்த கட்டுரை.
சதா சர்வ காலமும் திருவேங்கடவனையே நினைந்து உருகி தன்னை அவருக்கே அர்ப்பணித்து அவரை தன் கணவனாக பாவித்து திருமலையில் ஸ்ரீவாரி சேவை செய்து பரந்தாமனை அடைந்தவர் அவர்.
ஆந்திரா மாநிலம் ராய துர்க்க பகுதியில் உள்ள தரிகொண்டா என்ற கிராமத்தில் பிறந்தவர் வெங்கமாம்பா. சிறு வயது முதலே திருவேங்கடவனையே தன் கணவனாக வரித்தவர் இதன் காரணமாக வெங்கமாம்பா தனக்கு திருமணம் நடந்தும் இல்லற வாழ்வில் ஈடுபடாமல் இருந்தார்.
கணவர் நோய்வாய்பட்டு இறந்த போதும் தன் மங்கலச் சின்னங்களை அகற்ற அவர் அனுமதிக்கவில்லை. அவரது உறுதியைக் கண்ட உறவினர்கள் அவரை தேவுடம்மா என்று வழிபட ஆரம்பித்தனர்.
வெங்கமாம்பா வேங்கடவன் மேல் கீர்த்தனைகள் இயற்றுவதிலும், பாடுவதிலும், ஆடுவதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் வேங்கடவன் மீதான பக்தியின் காரணமாக திருமலைக்கு வந்து சேர்ந்தார்.
இவர் ஸ்ரீவேங்கடாசல மஹாத்மியம், தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சதகம், நரசிம்மர் விலாச கதை, சிவ நாடகம், பாலகிருஷ்ண நாடகம், விஷ்ணு பாரிஜாதம் போன்ற பல முக்கியமான நூல்களை இயற்றியதோடு யோகக் கலையையும் நன்கு பயின்று அஷ்டாங்க யோக சாரம் என்ற நூலையும் இயற்றியுள்ளார்.
திருமலையையும், திருவேங்கடவனையும் பற்றி ஏராளமான கவிகள் இயற்றி தலை சிறந்த கவியாக திகழ்ந்தார். தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் திருவேங்கடவனுக்கே அர்ப்பணித்த ஸ்ரீவெங்கமாம்பா ஒவ்வொரு நாள் இரவும் ஏகாந்தசேவை ஆரத்தியின் போது தட்டில் முத்துக்களை வைத்து வேங்கடவனை வணங்கி வந்தார்.
தினந்தோறும் காலையில் ஸ்ரீவேங்கடவன் சன்னிதிக் கதவுகள் திறக்கப்படும்போது அங்கு சிதறிக் கிடந்த முத்துக்களைக் கண்டு துணுக்குற்ற அர்ச்சகர்கள், வெங்கமாம்பாவே இதற்குக் காரணம் என்றறிந்து அவரை கோயிலிலிருந்து தொலைவில் உள்ள தும்புரகோணா என்ற குகைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வேங்கடவன் அருளால் அங்கிருந்து ஒரு குகைப் பாதையின் வழியாக திருமலைக்கு வந்து தன் ஆரத்தி சேவையை அவர் மீண்டும் தொடர்ந்தார்.
பின் தன் பக்தை வெங்கமாம்பாவின் ஆரத்தியுடன் தான் தனக்கு இரவு பூஜை முடிய வேண்டும் என்று அர்ச்சகர்களின் கனவில் பெருமாள் கட்டளையிட அர்ச்சகர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து ஏகாந்த சேவையின் போது வெங்கமாம்பாவை அனுமதித்தனர். தன்னுடைய ஆரத்தியில் ஏழுமலையானை அவர் கண்டு மெய்மறந்தார், இன்றைக்கும் இரவு இந்த ஆரத்தி ‛முத்தியாலு ஆரத்தி' என்று அழைக்கப்படுகிறது.
1730 ம் ஆண்டு பிறந்தார் தனது 87வது வயதில் 1817 ம் வருடம் திருமலையி தான் பெருமானுக்காக அமைத்த துளசி வனத்தில் ஜீவசமாதி அடைந்தார். ஸ்ரீவெங்கமாம்பாவின் சமாதி பக்தர்களின் பார்வைக்காகத் தினமும் திறந்து வைக்கப்படுகிறது.இப்போது போனாலும் தரிசிக்கலாம்.

இவர் நினைவாகவே தற்போது திருமலையில் அன்னதானக்கூடம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் இவரது சிலையையும் அமைத்துள்ளனர். இவர் ஜீவசமாதி அடைந்த நாள் 18 ந் தேதியான நாளைதான்.

தரிகொண்ட வெங்கமாம்பாவின் 201 வது ஜெயந்தி விழாவினை அவர் பிறந்த கிராமத்திலும் அவர் ஜீவசமாதி அடைந்த இடத்திலும் நடத்திட உள்ளனர்.

பதினேழாம் நுாற்றாண்டில் பழமையான கிராமம் மற்றும் நம்பிக்கைகளின் பின்னனியில் பிறந்தவர் என்றாலும் தான் கொண்ட கொள்கை காரணமாக விதவைக் கோலம் போட துணிந்து மறுத்தவர் என்ற முறையிலும், கல்வியிலும் கவிதையிலும் தனித்து விளங்கியவர் என்ற வகையிலும்,வேங்கடவனின் அபார அருளாசி பெற்றவர் என்ற நிலையிலும் அவர் போற்றத்தக்கவராக இருக்கிறார். அன்னதான கூடத்திற்கு இவரது பெயரை விட பொருத்தமான பெயர் வேறு என்ன இருக்கப்போகிறது.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-ஆக-201816:39:23 IST Report Abuse
Bhaskaran ஒரு தெலுங்கு படம் வெளிவந்ததாக நினைவு மீனா வெங்கமாம்பாவாக நடித்துள்ளார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X