வெள்ளம்: புரிந்து கொள்வரா ஆட்சியாளர்கள்! | Dinamalar

வெள்ளம்: புரிந்து கொள்வரா ஆட்சியாளர்கள்!

Added : ஆக 18, 2018 | கருத்துகள் (7) | |
தமிழகத்தில், தண்ணீர் இன்றி பயிர்கள் கருகிய போது, '1 டி.எம்.சி., தண்ணீராவது தாருங்கள்...' என, கர்நாடகாவிடம் தமிழக அரசு பல முறை கேட்டும், சட்ட போராட்டங்கள் நடத்தியும், தண்ணீர் தர அந்த மாநிலம் மறுத்தது தான், கடந்த காலவரலாறு.தமிழகத்திற்கு இந்தந்த காலங்களில், இந்த அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என, காவிரி நடுவர் நீதிமன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும், அந்த மாநிலம்
வெள்ளம்: புரிந்து கொள்வரா ஆட்சியாளர்கள்!

தமிழகத்தில், தண்ணீர் இன்றி பயிர்கள் கருகிய போது, '1 டி.எம்.சி., தண்ணீராவது தாருங்கள்...' என, கர்நாடகாவிடம் தமிழக அரசு பல முறை கேட்டும், சட்ட போராட்டங்கள் நடத்தியும், தண்ணீர் தர அந்த மாநிலம் மறுத்தது தான், கடந்த காலவரலாறு.

தமிழகத்திற்கு இந்தந்த காலங்களில், இந்த அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என, காவிரி நடுவர் நீதிமன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும், அந்த மாநிலம் மதித்ததில்லை.
இதனால், தமிழக விவசாயிகளுக்கு நேர்ந்த பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமில்லை. ஆனால், இப்போது, போதும் போதும் என, சொல்லும் அளவுக்கு, வினாடிக்கு, 2 லட்சம், 2.5 லட்சம் என, தமிழகத்திற்கு ஏராளமாக தண்ணீரை திறந்து விட்டு, டெல்டா மாவட்டங்களையும், அதை ஒட்டியுள்ள நகரங்களையும், வெள்ளக்காடாக மாற்றி வருகிறது, கர்நாடகா.

தமிழகத்திற்கு உரிய நீரை திறக்க வேண்டும் என்ற, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு அடி பணியாத அந்த மாநில அரசு, பெருகி வரும் தண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல், இயற்கைக்கு முன் மண்டியிட்டு நிற்கிறது.தன் மாநில அணைகளில் சேர்த்து வைத்தது போக, மீதமுள்ள தண்ணீரை அப்படியே திறந்து விட்டு, தமிழகத்திற்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்திற்கு தண்ணீர் தேவை இருக்கும் போது தராமல், அதிகமாக கிடைக்கும் போது, அப்படியே திறந்து விட்டு, தண்ணீர் அரசியல் விளையாடிக் கொண்டிருக்கும் கர்நாடகாவை, நாம் புத்திசாலித்தனமாகவே எதிர்கொள்ள வேண்டும்.அந்த காலத்தில், மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் அரசியல் இல்லை என்பதால், நம் முன்னோர், தமிழக பகுதியில், காவிரியில் தடுப்பணைகள் கட்டுவதில் ஆர்வம் காட்டாமல் இருந்து விட்டனர்.

எனினும், திருச்சி முக்கொம்பு பகுதியில், காவிரியின் குறுக்கே கல்லணை கட்டி, பல பிரிவுகளாக தண்ணீரை பிரித்து, பாசனத்திற்கு திருப்பி விட்ட அவர்களின் மேலான தொழில்நுட்பத்தை பாராட்டவே வேண்டும்.அது போல, மீண்டும் ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையை மேற்கொண்டால் மட்டுமே, இனி வரும் காலங்களில், காவிரியில் திறந்து விடப்படும் வெள்ள நீரால், தமிழகமும், மக்களும் பாதிப்படையாமல் இருப்பர்.

கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி, 320 கி.மீ., கடந்து, தமிழக எல்லைக்குள், 416 கி.மீ., பாய்ந்து, வங்கக் கடலில் கலக்கிறது.அந்த நதி, கர்நாடகாவில் பயணிக்கும் பகுதிகள் அனைத்தும், மேடானவை என்பதால், மழைக் காலங்களில், பெரும்பாலும் வெள்ள பாதிப்புகளை அங்கு ஏற்படுத்துவதில்லை. ஆனால், தமிழகத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்திவிடுகிறது.கடந்த சில வாரங்களாக, தமிழகத்தில் காவிரி நதியும், அதன் கிளை ஆறுகளும், இரு கரைகளையும் தொட்டு, பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் இன்னும் சில மாதங்களுக்கு தண்ணீர் தேவை பூர்த்தியாகும் என்றாலும், வெள்ள நீரால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பது தான் யதார்த்தம்!கர்நாடகா, அதன் வடிகால் பகுதியாக மட்டுமே தமிழகத்தை பாவிக்கிறது; அண்டை மாநிலம் என்றோ, அங்கும் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள், காவிரி நீருக்காக காத்து கிடக்கின்றன என்றோ யோசிப்பதே இல்லை.

இயற்கையின் கொடையால், நடப்பாண்டில் நல்ல மழை பெய்து, கர்நாடகாவின் உபரி நீர், தமிழகத்திற்கு தாராளமாக கிடைக்கப் பெற்றுள்ளது.ஆனால், போதுமான அளவு தடுப்பணைகள் இல்லாததால், கிடைத்த நீர், கடலில் கலந்து வீணாகிறது.தமிழகத்தில், காவிரி டெல்டா பகுதிகள், சம தளத்தில் அமைந்துள்ளதால், ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைப்பது சாத்தியமில்லை என, முதல்வர் முதற்கொண்டு, அதிகாரிகள் வரை பொதுவாக கூறுகின்றனர்.
அதற்காக, வரும் காலங்களிலும் இப்படியே, கர்நாடகாவால், தண்ணீர் பாதிப்பை தமிழகம் சந்திக்க அனுமதிப்பதா?

கர்நாடகாவிலிருந்து அதிகமாக ஓடி வந்து, தமிழகத்தை பாதிப்படையச் செய்து, வீணாக கடலில் கலக்கும் நீரை, விஞ்ஞானப்பூர்வமாக நாம் மேற்கொள்ளும் சில சாதாரண நடவடிக்கைகளால் தடுத்து நிறுத்த முடியும்; பாதிப்பை கணிசமாக குறைக்க முடியும்.நம் மாநில டெல்டா பகுதிகளில், காவிரி ஆற்றின் படுகை, இயற்கையாகவே, 6 அடி தாழ்வாக அமைந்துள்ளது. இது, இயற்கை நமக்கு அளித்த அரண்.

எனவே, இந்த, 6 அடி தாழ்வான ஆற்றுப் படுகையில், தேவையான இடங்களை தேர்வு செய்து, தடுப்பணைகள் அமைத்து, தண்ணீரை நிலத்தடிக்கு அனுப்பி, வெள்ள பாதிப்பையும், வீணாக கடலில் சேர்வதையும் குறைக்க முடியும்.இதற்காக, தேவைப்படும் இடங்களில், அந்த இடத்திற்கு ஏற்ப, தடுப்பணையின் உயரத்தை தீர்மானித்து கொள்ளலாம். ஒவ்வொரு தடுப்பணையின் மேல் பகுதியிலும், இரண்டு அல்லது மூன்று, செறிவூட்டும் குழாய் கிணறுகளை அமைக்க
வேண்டும்.

செறிவூட்டும் குழாய் கிணறுகளை, வறண்ட மணல் படிவம் இருக்கும் பகுதிகளை கண்டறிந்து அமைத்தால் நல்லது.ஒவ்வொரு குழாய் கிணற்றின் மேல் பகுதியிலும், வடிதொட்டிகள் அமைத்து, அந்த தொட்டிகளின் மட்டம், தடுப்பணை மேல் மட்டத்திற்கு, 1 அடி தாழ்வாக இருக்குமாறு பார்த்து கொள்ளவேண்டும்.இத்தகைய கட்டமைப்புகளை ஏற்படுத்திய பின், ஆற்றில் நீர் ஓடும் போது, தடுப்பணையால் தடுக்கப்பட்டு, தரையில் நீர் தேங்கி, அதன் மட்டம், தடுப்பணையின் மேல் மட்டம் வரை உயர்ந்து, அதன் பின் வழிந்தோடும்.

அவ்வாறு தடுப்பணையால் நீர் தடுக்கப்பட்டு, நீர் மட்டம் தடுப்பணையின் மேல் மட்டம் வரை உயர்வதால், குழாய் கிணற்றின் மீது கட்டப்படும் வடிதொட்டியில் நீர் தேங்கி, மூழ்கும்.
அவ்வாறு மூழ்குவதாலும், செறியூட்டும் குழாய் கிணறு, வடிதொட்டியுடன் இணைக்கப் படுவதாலும், புவி ஈர்ப்பு விசையின் காரணமாக, வடிதொட்டி வழியாக நீர், வறண்ட நிலத்தடி நீர்த்தேக்கப் பகுதியை சென்றடையும்.

இது, ஆற்றுப்படுகை நீரை, நிலத்தடி நீர்த் தேக்கப் பகுதிக்குக் கடத்தி செல்ல ஏற்படுத்தப்படும், செயற்கை நீர் வழிப் பாதையாக அமையும்.ஏற்கனவே, பல ஆண்டுகளாக, நிலத்தடி நீரை, முடிந்த அளவுக்கு மோட்டார்கள் மூலம் உறிஞ்சி, விவசாயம், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்குப் பயன்படுத்தி விட்டோம்.ஆனால், அதற்கு இணையாக, மழை நீர் செறியூட்டல் நிலத்தில் செய்யப்படாததால், நிலத்தடி நீர்மட்டம் வெகு ஆழத்திற்குச் சென்று விட்டது. இதனால், இடைப்பட்ட மணல் பகுதி வறண்டு, காற்று நிரம்பியதாக இருக்கிறது.

எனவே, அத்தகைய மணல் பகுதி, நிலத்தடி நீர் தேக்கப் பகுதிகளாக, ஏராளமான நீரை சேமிக்க உகந்த பகுதிகளாக மாறும்.மேற்கூறியவாறு தடுப்பணைகள் மற்றும் செறிவூட்டும் குழாய்க் கிணறுகள் அமைத்த பிறகும், மழை நீர் உபரியாக வழிந்தோடி, கடலில் கலக்கிறது என்றால், அதைக் குறைக்க, கூடுதலாகத் தடுப்பணைகள் மற்றும் செறிவூட்டும் குழாய்க் கிணறுகள் அமைப்பதை, வறண்ட காலங்களில், தொடர்ந்து பல இடங்களில் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம், ஒரு கட்டத்தில், மழை நீர் உபரியாகக் கடலில் கலப்பதை முழுமையாகத் தடுக்க முடியும். இதனால், கர்நாடகாவிலிருந்து தமிழகத்தை கபளிகரம் செய்ய வரும் தண்ணீரை, எதிர்கால சந்ததிக்கு பயன்படுத்த முடியும்.

தடுப்பணைகள் கட்டுவது மற்றும் செறிவூட்டும் குழாய்க் கிணறுகள் அமைப்பது போன்றவற்றிற்கு, ஆரம்ப கால செலவினம் மட்டுமே ஏற்படும். அதன் பின் அவ்வப்போது, பராமரிப்பு செலவு மட்டுமே போதும்.இத்தகைய முறையில், பலன் அதிகம். வெள்ளப் பெருக்கைத் தடுக்கலாம்; உபரி நீர் கடலில் கலப்பதைத் தடுக்கலாம்; நிலத்தடியில் சேமிக்கும் நீரைத் தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்; நிலத்தடி நீர்மட்டம் தாழ்வதை வெகுவாகக் குறைக்கலாம்.
மேலும், டெல்டா பகுதியில் பெரிய ஏரிகள், நீர் நிலைகள் இருப்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு.

எனவே, தடுப்பணை அருகே உள்ள குளம் குட்டைகளுக்கு, தடுப்பணைகளில் இருந்து, இணைப்பு வாய்க்கால்களை ஏற்படுத்தி, நீரை நிரப்பலாம்.நீர் நிலைகள் பராமரிப்பிற்காக, தமிழக அரசு, ஆண்டுதோறும் கணிசமான நிதியை ஒதுக்கீடு செய்கிறது.
ஆனால், ஒதுக்கீடு செய்யும் தருணத்தில், கால முறையை கணக்கில் கொள்ளாமல், காவிரியில் நீர் திறந்து விட நிர்ணயிக்கப்படும், ஜூன் மாதத்தில் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.அவ்வாறு அவசர கதியில் மேற்கொள்ளப்படும் பணியின் அளவு மற்றும் தரம், செயலாக்கத்தின் போது கண்காணிக்கப்படுவதில்லை.இதனால், பண விரயமும், விவசாயிகளுக்கு முழுமையான பலனும் கிடைப்பதில்லை.

மேலும், காவிரியின் கிளைக் கால்வாய்களில் செல்லும் நீர், கடை மடை வரை செல்ல, கால்வாயின் தரை தளத்தில், கான்கிரீட் பலகைகளைப் பதித்து, தண்ணீர் சேதாரம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இந்த பணியை கொஞ்சம், கொஞ்சமாக, ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவேற்றினால், கடைமடைப் பகுதிக்கும் தண்ணீர் ஒழுங்காக சென்றடையும்.கால்வாய்களில் கான்கிரீட் பலகைகளை பதித்து, முறையாக பராமரிப்பதால், ஒவ்வொரு ஆண்டும் வாய்க்கால்களைத் துார் வார தேவை இருக்காது; வாய்க்கால் பகுதிகளில் மண்ணால் தடையும் ஏற்படாது.
வாய்க்கால்களிலும் தடுப்பணைகள் அமைத்தால், வறட்சி ஏற்படும் காலங்களில், முறையான பாசன திட்டத்தை செயல்படுத்த இயலும்.

மேலே குறிப்பிட்ட, தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டால், கடைமடைப் பகுதிகள் நிறைந்துள்ள நாகை, திருவாரூர், கடலுார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவர்.டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, கடலுார், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலுள்ள ஏரிகள், சிறிய நீர்நிலைகளிலும் நீரை சேமிக்கஇயலும்.எனவே, எத்தனை காலத்திற்கு தான், கர்நாடகாவின் வில்லங்க செயலுக்கு நாம் இரையாவது என்பதை கவனத்தில் எடுத்து, தடுப்பணைகள் அமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்போம். இதற்காக நாம், எந்த
மாநிலத்திலும் அனுமதி பெறவும் தேவையில்லை.

இந்த எளிய முறையை, இது வரை நம் பொறியாளர்களும், அமைச்சர்களும் ஏன் செயல்படுத்தாமல் இருந்தனர் என்பதும் புரியாத புதிராக உள்ளது. காவிரி தோன்றிய காலத்தில் எப்படி அது ஓடி வந்ததோ, அதை அப்படியே இப்போதும் பராமரிக்கிறோம்.கல்லணைகள் போல, ஒன்றிரண்டு கட்டியது போதும் என, பொறுப்பில்லாமல் இருந்து விட்டதால் தான், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததோடு, வெள்ளப் பெருக்கின் போது, காவிரி தாய், நமக்கு மிகுந்த பாதிப்பையும் ஏற்படுத்துகிறாள்!

இதை இனிமேலாவது புரிந்து, காவிரியில் தடுப்பணைகள் கட்ட, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். தண்ணீரால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கண்ணீர் வராமல்
பார்த்துக்கொள்வோம்!

இ-மெயில்:

rajakumar1608@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X