கரூர்: இதய அறுவை சிகிச்சைக்கு கிடைத்த தொகையில், 5,000 ரூபாயை, கேரளா வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய, பள்ளி சிறுமியின் கொடை உள்ளத்தைக் கண்டு, மக்கள் மனம் நெகிழ்ந்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே, குமாரபாளையத்தைச் சேர்ந்த, ஜோதிமணி மகள் அக்ஷயா, 11, அங்குள்ள அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை தனியார் மருத்துவமனையில், 'இரண்டு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே, பிழைக்க வாய்ப்புள்ளது' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.
முதல் அறுவை சிகிச்சைக்கு, 3.50 லட்சம் ரூபாய் செலவாகும் என்ற நிலையில், என்ன செய்வதென தெரியாமல், ஜோதிமணி தவித்தார். சமூக வலைதளம் மூலம், தொட்டகுறிச்சி சாதிக், சலீம் ஆகியோர் உதவ முன் வந்தனர்.பலர் வழங்கிய நிதியால், அவரது முதல் அறுவை சிகிச்சை, நல்ல முறையில் முடிந்தது. வரும் நவம்பரில், இரண்டாவது அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. இதற்கு தேவையான, 2.50 லட்சம் ரூபாயை, சமூக வலைதளங்கள் மூலமாக, சிறுமி திரட்டி வருகிறார்.இதுவரை, 20 ஆயிரம் ரூபாய் சேர்ந்துள்ளது. இந்நிலையில், கேரள மக்கள், வெள்ள பாதிப்புகளால் பரிதவிப்பதைப் பார்த்த அக்ஷயா, 20 ஆயிரம் ரூபாயில், 5,000- ரூபாயை வெள்ள நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.'மக்கள் பாதை' என்ற அமைப்பு மூலம், இந்தத் தொகை, கேரளாவுக்கு அனுப்பப்பட உள்ளது. சிறுமியின் மனிதாபிமானத்தை கண்டு, அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.