சென்ட்ரலுக்கு வர்றதுக்கு 40 லட்சம்... செஞ்சு கொடுத்தாலும் பிரஷர்தான் மிச்சம்!| Dinamalar

சென்ட்ரலுக்கு வர்றதுக்கு 40 லட்சம்... செஞ்சு கொடுத்தாலும் 'பிரஷர்'தான் மிச்சம்!

Added : ஆக 21, 2018
Share
கேரளாவுக்கு நிவாரணப் பொருட்களைச் சேகரிப்பதில் 'பிஸி'யாக இருந்ததால், பல நாட்களாக சித்ராவும், மித்ராவும் சந்தித்துக் கொள்ளவே இல்லை. அலைபேசியில் அழைத்த சித்ரா, 'மித்து! அஞ்சே நிமிஷத்துல வந்துர்றேன்; ரெண்டு பேரும் சேர்ந்து, ஒரு ஸ்பான்சரைப் பார்க்கப் போவோம்' என்றாள். அடுத்த பத்து நிமிடங்களில் வந்து இறங்கினாள். இருவரும் சேர்ந்து, வண்டியில் கிளம்பினர்.''அக்கா!
சென்ட்ரலுக்கு வர்றதுக்கு 40 லட்சம்... செஞ்சு கொடுத்தாலும் 'பிரஷர்'தான் மிச்சம்!

கேரளாவுக்கு நிவாரணப் பொருட்களைச் சேகரிப்பதில் 'பிஸி'யாக இருந்ததால், பல நாட்களாக சித்ராவும், மித்ராவும் சந்தித்துக் கொள்ளவே இல்லை. அலைபேசியில் அழைத்த சித்ரா, 'மித்து! அஞ்சே நிமிஷத்துல வந்துர்றேன்; ரெண்டு பேரும் சேர்ந்து, ஒரு ஸ்பான்சரைப் பார்க்கப் போவோம்' என்றாள். அடுத்த பத்து நிமிடங்களில் வந்து இறங்கினாள். இருவரும் சேர்ந்து, வண்டியில் கிளம்பினர்.''அக்கா! நிஜமாவே நம்ம ஊரு மக்கள் 'கிரேட்' தான்...'கோயம்புத்துார் பார் கேரளா' அமைப்புக்கு, பொருட்களைக் குவிச்சிட்டே இருக்காங்க'' என்று வண்டியை ஓட்டிக் கொண்டே பேசினாள் மித்ரா.''கேரளா கவர்மென்ட்டே, ஓணம் கொண்டாட்டங்களை ரத்து பண்ணிடுச்சு; ஆனா, நம்மூர்ல இருக்குற சில காலேஜ்கள்ல, கொஞ்சம்கூட கவலைப்படாம, 'ஓணம் பெஸ்டிவல்' கொண்டாடுறாங்க'' என்று கொதித்தாள் சித்ரா.''ஆமாக்கா...நானும் பார்த்தேன்...அதுக்கு செலவழிச்ச காசை, அந்த மக்களுக்கு நிவாரணமா கொடுத்திருக்கலாம்; அதைச் செய்யாம, கும்மி அடிச்சு, கோலம் போடுதைப் பார்த்தா...!'' என்று தனது பங்கிற்கு கொந்தளித்தாள் மித்ரா.''இதுக்கே இப்பிடி கொதிச்சா எப்பிடி...நம்மூரு ஜி.எச்.,ல 60 லட்ச ரூபாய்க்கு, கவர்மென்ட் வாங்கிக் கொடுத்த 'ஹார்ட் லங்க்' மெஷினை, பயன்படுத்தாமலே போட்டு வச்சு, அது வீணாப் போயிருச்சாம்; ரொம்ப நாள் கழிச்சு, அதைக் கண்டுபிடிச்சு, அப்போ அந்த டிபார்ட்மென்ட்டுக்கு எச்.ஓ.டி.,யா இருந்த லேடி டாக்டருக்கு மூன்றரை லட்ச ரூபாய் 'பைன்' போட்ருக்காங்க. இதுல என்ன விசேஷம்ன்னா, அந்தம்மா இப்போ வேற ஊர்ல இருக்குற ஜி.எச்.,க்கு 'டீன்' ஆயிட்டாங்க'' என்றாள் சித்ரா.''அங்க போய் எத்தனை பொருளை வீணாக்கப் போறாங்களோ?'' என்றாள் மித்ரா.''அந்த மெஷின் கெட்டதுக்கு, அந்த டிபார்ட்மென்ட்ல இருந்த நர்ஸ்கள், மத்த ஸ்டாப்களுக்கும் 'பைன்' போட்ருக்காங்களாம். எச்.ஓ.டி., பண்ணுன தப்புக்கு, நாங்க என்ன பண்ண முடியும்னு அவுங்க கேக்குறாங்க!'' என்றாள் சித்ரா.''இப்ப மட்டும் அங்க என்ன வாழுதாம்...ரெண்டரை லட்ச ரூபாய் 'எக்யூப்மென்ட்'களை, குப்பையில போட்டு இருக்காங்களாம்; நல்ல கண்டிஷன்ல இருக்குற மெஷின்களை குப்பையில போட்டுட்டு, அப்பிடியே அங்க இருந்து, வெளியில கடத்துறதுக்கு, முயற்சி நடக்குதுன்னு சந்தேகமா இருக்குதாம்'' என்றாள் மித்ரா.''இருக்கலாம்...அங்க இருக்குற டாக்டர்கள், ரெண்டு விஷயத்துல கொதிச்சுப் போய் இருக்காங்க. அங்கீகரிக்கப்படாத எம்.டி., படிப்பை படிச்சிருக்குற ஒரு மயக்க டாக்டரை, பல டிபார்ட்மென்ட்களுக்கு 'நோடல் ஆபீசர்'னு போட்ருக்காங்க; இவருக்கு ஏன் இவ்ளோ முக்கியத்துவம் கொடுக்குறாங்கன்னு பல டாக்டர்களுக்கு வருத்தம்'' என்று சித்ரா சொல்லிக் கொண்டிருந்தபோதே குறுக்கிட்டாள் மித்ரா.''முக்கியப் பொறுப்புல இருக்குற யாருக்காவது நெருக்கமா இருப்பார்னு நினைக்கிறேன்!''''கரெக்ட்...சுதந்திர தினவிழாவுல, பல டாக்டர்களுக்கு விருது கொடுத்தாங்களே...அதுலயும் இந்த மாதிரி 'ரெகமண்டேஷன்'தான் எடுபட்டிருக்காம்; அர்ப்பணிப்போட வேலை பாக்குற பல டாக்டர்களைப் புறக்கணிச்சிட்டாங்களாம்; அதுலயும் பல டாக்டர்களுக்கு ரொம்பவே வருத்தம்!'' என்றாள் சித்ரா.''டாக்டர்கள் மட்டுமா...அங்க இருக்குற ஆர்.எம்.ஓ.,வும் தான் புலம்புறாராம்...அவர் மேல '17 பி' சார்ஜ் போட்ருக்காங்களாம்; நேரத்துக்கு 'டூட்டி'க்கு வர்றதில்லை; ஜி.எச்.,ல தங்குறதே இல்லைன்னு சொல்றாங்களாம்'' என்றாள் மித்ரா.''அவரு சரியான நேரத்துக்கு வர்றதில்லைங்கிறது உண்மையா இருக்கலாம்; ஆனா, ஆர்.எம்.ஓ., குவாட்டர்சே அங்கே இல்லையே... அப்புறம் எங்க தங்குவாரு?'' என்றாள் சித்ரா.''அதையே தான், அவரும் கேக்குறாரு!'' என்ற மித்ரா, 'கீதா...சங்கீதா' என்று ராகத்தோடு பாடினாள்.''மித்து...நம்ம ஊர்ல ஸ்கூல்களைக் கவனிக்குற முக்கியமான ரெண்டு பொறுப்புல, ஒரே பேரைக் கொண்ட ரெண்டு பேரு இருக்காங்க தெரியுமா?'' என்று கேட்டாள் சித்ரா.''அதான் பாட்டாவே படிச்சிட்டேனே...மேட்டரை சொல்லு!'' என்றாள் மித்ரா.''அவுங்கள்ல தற்காலிகமா 'பொறுப்பு'ல இருக்குற ஆபீசர், எதுக்கெடுத்தாலும், ஒரு பெரிய இடத்து மருமகளோட பேரைப் பயன் படுத்துறாங்களாம்; எய்டடு ஸ்கூல்களுக்கு 'இன்ஸ்பெக்ஷன்' போற அந்த லேடி மேடம், 'என்னோட ஆபீசை 'ஏசி' பண்ணிக்கொடுங்க; ஆனா, யார்ட்டயும் சொல்லக்கூடாது'ன்னு கண்டிஷன் போடுறாங்களாம்'' என்றாள் சித்ரா.''அந்த மேடத்தைப் பத்தி, இன்னொரு மேட்டரும் கேள்விப்பட்டேன்; சிட்டிக்குள்ள நிரந்தரமா அதே பதவியில இருக்குற லேடி ஆபீசர், ஒரு 'பிளே ஸ்கூல்'ல எந்த வசதியும் இல்லைன்னு நோட்டீஸ் கொடுத்திருக்காங்க; அதுக்கு, அந்த 'பொறுப்பு' லேடி ஆபீசர், 'அதை ரினிவல் பண்ணிக்கொடுத்திருங்க; பெரிய இடத்து மருமகள் சொல்லீட்டாங்க'ன்னு சொல்லிருக்காங்க!'' என்றாள் மித்ரா.''எல்லா இடத்துலயும் 'இன்சார்ஜ்'களோட ஆதிக்கம் தாங்கலை...நம்ம யுனிவர்சிட்டியில, போன வாரம் நடந்த 'சிண்டிகேட்' கூட்டத்துல, பல வருஷமா 'இன்சார்ஜ்'ல இருந்த பி.ஆர்.ஓ., ரிசர்ச் டைரக்டர், தேர்வு கட்டுப்பாட்டு கூடுதல் இயக்குனர் மூணு பேரையும் மாத்திட்டாங்க; ஆனா, ரிட்டயர்டு வயசாயிட்ட பதிவு மேடத்தை மட்டும் மாத்தலை'' என்றாள் சித்ரா.''வரவர 'லேடி ஆபீசர்'கள் மேல வர்ற 'கம்பிளைன்ட்'தான் அதிகமா இருக்கு...புழல் சிறையில இருந்து இங்க 'பனிஷ்மென்ட்'ல வந்த லேடி ஜெயிலர் மேடம், பேருக்கேத்த மாதிரி 'மணி'யில தான் குறியா இருக்காராம்; வசதியான பெண்கள் யாராவது ஜெயிலுக்கு வந்தா, அவுங்களுக்கு தன்னோட வீட்டுல இருந்தே, ஆள் வச்சு சமைச்சுக் கொண்டு வந்து கொடுக்குறாராம்; அவுங்களை யாராவது பார்க்க வந்தா, தன்னோட அறையில சந்திச்சுப் பேச விடுறாராம்'' என்றாள் மித்ரா.''அந்த மோசடி நடிகை, உள்ளே இருக்குறப்போ, அவரோட பேருல வெளியில 'அக்கவுன்ட்' திறந்ததா ஒரு 'கம்பிளைன்ட்' வந்துச்சே... ஒரு வேளை, அந்தப் பொண்ணு உள்ளே இருந்தே அதை 'ஓபன்' பண்ணுறதுக்கு இவுங்க உதவியிருப்பாங்களோ?'' என்று கேட்டாள் சித்ரா.''அதைத்தான் போலீசும் சந்தேகப்படுறாங்க!'' என்றாள் மித்ரா.''போலீஸ்ன்னதும் ஞாபகம் வந்துச்சு...பீளமேட்டுல இருக்குற ஒரு எஸ்.ஐ., கேரளா லாட்டரிகளை பாக்கெட்ல வச்சுட்டே திரியுறாராம்'' என்று 'இன்ட்ரோ' கொடுத்து நிறுத்தினாள் சித்ரா.''அப்பிடியாவது கேரளாவுக்கு நிவாரணம் பண்ணலாம்னு நினைக்கிறாரோ?'' என்று சிரித்தாள் மித்ரா.''அதில்லை மித்து...லாட்டரி வித்து எப்பவோ மாட்டுனவுங்களை அடிக்கடி பிடிச்சிட்டு வந்து, இவரே அவுங்க பாக்கெட்ல வச்சு விட்டு, கேசைப் போடுறாராம். பாதிக்கப்பட்ட சிலர் சேர்ந்து, உயரதிகாரிட்ட பெட்டிஷன் கொடுத்திருக்காங்க'' என்றாள் சித்ரா.''அந்த ஏரியாவுல 'ஜீவன்' உள்ள ஒரு எஸ்.ஐ.,தான், இதுக்கெல்லாம் காரணமா இருப்பார்னு நினைக்கிறேன். ஏன்னா, ஸ்டேஷனே அவரோட 'கன்ட்ரோல்'ல தான் இருக்கு...எந்தெந்த அதிகாரி பேரை எல்லாம் சொல்லி, வசூல் பண்றதே இவர் தான்; இவருக்குக் கீழ இருக்குற ஒரு எஸ்.எஸ்.ஐ.,தான் இவருக்கு ஊரெல்லாம் வசூல் பண்ணி, ரசீது இல்லாமலே கணக்குக் கொடுப்பாராம்; போன வாரம், மாமூல் தரலைன்னு ஒரு இளநிக்கடை லேடிட்ட, ரெண்டு அரிவாரிளைத் துாக்கிட்டுப் போயிட்டாராம்'' என்றாள் மித்ரா.''ரொம்ப நாளா தப்பிச்சிட்டிருந்த பிரபல அக்யூஸ்ட் பாலாஜியையே, அந்த ஸ்டேஷன் போலீஸ்தான் துாக்கிருக்காங்க; உசுரைப் பணயம் வச்சு, அவுங்க பேரு வாங்கிக் கொடுக்க, இந்த மாதிரி ஆளுங்க பேரைக் கெடுக்குறாங்க'' என்றாள் சித்ரா.''அக்கா...நம்ம சென்ட்ரல் ஆர்டிஓ உதயகுமார், 'டிடிசி'யாகிப் போயிட்டார்ல...அந்த 'போஸ்ட்டிங்'கிற்கு வர்றதுக்கு பல பேரு முயற்சி பண்ணுனாங்களாம்; வழக்கமா அங்கே வர 20 லட்ச ரூபா வாங்குவாங்களாம்; ஆனா, இப்போ துறை வி.ஐ.பி.,க்கு, முப்பது, உள்ளூர்க்கு பத்துன்னு 40 லட்ச ரூபா கேக்குறாங்களாம்; அதனால, அங்க வர்றதுக்கு யாருமே தயாரா இல்லியாம்'' என்றாள் மித்ரா.''மித்து...துட்டு மட்டும் காரணமில்லை; எப்பப் பார்த்தாலும், இதைச் செஞ்சு கொடுங்க; அதைச் செஞ்சு கொடுங்கன்னு இங்க வர்ற 'பொலிட்டிகல் பிரஷர்'ல 'பிரஷர்' எகிறிடுதாம்; நாலு ஆபீஸ்கள்லயும் நாலு சூப்பரின்டெண்ட், 18 ஜூனியர் அசிஸ்டெண்ட், 10 அசிஸ்டெண்ட் போஸ்ட்டிங் காலியா கிடக்குறது இதனால தானாம்!'' என்றாள் சித்ரா.''இதெல்லாம் கேட்டா, எனக்கும் 'பிரஷர்' ஆகுது...ஒரு லெமன் ஜூஸ் சாப்பிடுவோம்!'' என்ற மித்ரா, வண்டியை கடையின் முன் ஓரம் கட்டினாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X