புதுடில்லி, மணிப்பூரில் போலீஸ் அலுவலகத்தில், துப்பாக்கிகள் திருடப்பட்ட வழக்கில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,வை, தேசியபுலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர், நாங்க்தோம்பாம் பிரேன் சிங் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது.
தலைநகர் இம்பாலில் உள்ள போலீஸ் ஆயுதக் கிடங்கில் இருந்து, 2016, 2017 ஆண்டு களில், 56 பிஸ்டல்கள் மற்றும் தோட்டாக்கள் காணாமல் போயின.இந்தத் திருட்டு குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.
சமீபத்தில், இம்பாலில் உள்ள, காங்., - எம்.எல்.ஏ.,வான, யாம்தோங்ஸ் ஹோகிப்பின் வீட்டில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். முன்பு திருடப்பட்ட போலீஸ் பிஸ்டல், பல்வேறு ஆவணங்கள், அப்போது கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக ஹோகிப், நேற்று கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நிலை சரியில்லாததால், அவருக்கு சிகிச்சை அளிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை, 16 பிஸ்டல்கள் மீட்கப்பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.