ஆயகலைகள் அறுபத்தி நான்கோடு சேர்த்து, நம் மக்கள், சமீப காலமாக கற்று கொண்டிருக்கும் மற்றொரு அபாயக்கலை, அச்சுறுத்தல் நிறைந்த கலை, சமூக வலைதளத்தில் இயங்கு கலை. அரசியலை செதுக்க, வணிகத்தை வார்த்தெடுக்க, கலாசார கொடியை உயர்த்தி பிடிக்க, போராட்டங்களை வடிவமைக்க என, எவ்வளவோ இருக்கிறது, சமூக வலைதளத்தில்!'மிகச் சிறந்த வெற்றிகளும், வெளிச்சங்களும் ஒரே இரவில் கிடைப்பதில்லை' என்றே சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் நாம். ஆனால், இன்று ஒரே இரவில் என்ன... இரண்டே வினாடிகளில் கூட உலக அளவில், 'டிரெண்டிங்'கில் முதலிடத்தை பிடிக்க முடியும்; காரணம், சமூக வலைதளம்!
புகழ்ச்சியும், பிரபலமும், மனிதர்களுக்கு உத்வேகத்தை தர வல்லவை. ஆரம்ப காலங்களில், 'தினமலர்' சிறுவர் மலர் போன்ற வார இதழ்களில் நம் குழந்தைகளின் புகைப்படங்கள் வந்த போது, அதைப் பார்த்து பரவசப்பட்டோம்.
அதுபோன்றதொரு பரவச உணர்வை, சமூக வலைதளங்களில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பதிவிலும் பெறுகிறோம்.
அந்த பரவசத்திற்காக பலரும் தங்கள் பொன்னான நேரத்தையும், பணத்தையும் செலவிட்டு, நாட்டில் பரபரப்பையும், திகிலையும், கூடவே, குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்.'தினமலர்' நாளிதழில், 'அங்கே கலவரம்... இங்கே கலவரம்...' என்பன போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். ஆனால், சமூக வலைதளங்களின் பிரதான வேலையே, பரபரப்பை ஏற்படுத்துவது தான்!அதற்கு காரணமும் இருக்கிறது... சில ஆண்டுகளுக்கு முன் வரை, பத்திரிகைகள் தான் மிகப் பெரிய ஊடகங்களாக இருந்தன. ஆனால், இப்போது, இன்று ஒவ்வொருவர் கையிலும் ஊடகம். 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து, மொபைல் போனை வாங்கி, இணையத்துடன் தொடர்பு ஏற்படுத்தி விட்டால், நீங்களும், நானும் ஊடகவியலாளர் தான்.
கண்ணால் காண்பதையும், காதால் கேட்பதையும், படித்ததையும் அப்படியே, இன்னொருவருக்கு அனுப்பி, மகிழ்ச்சி அடைந்து விடுகிறோம்... நாமும் ஊடகவியலாளர் ஆகி விடுகிறோம்.தடியெடுத்தவன் எல்லாம் இன்று தண்டல்காரர்கள். நீங்கள் பதிவிட்டதை ஆதரித்தும் ஒரு கூட்டம் இருக்கும்; எதிர்த்தும் ஒரு கூட்டம் இருக்கும். உங்களை கதற கதற அழ வைக்கவும், இந்த வலைதளங்களால் முடியும்.
உங்களுக்கு பாடத்தெரியுமா... அதற்கென ஒரு செயலி இருக்கிறது. அதில் பதிவேற்றுங்கள். லட்சம் பேர், அதற்கு விருப்ப குறியிடுவர். நாளையே நீங்கள் பிரபல பாடகர் ஆகியிருப்பீர்கள்.கேரளாவில், மாலையில் மீன் விற்று, காலையில் கல்லுாரி சென்று வந்த பெண், சமூக வலைதளத்தால் உலகம் முழுதும், ஒரே நாளில் மிகவும் பிரபலமாகி விட்டார். மாநில முதல்வர் பினராயி விஜயனே, அந்த பெண்ணை அழைத்துப் பேசினார்.மறுநாள் அந்த பெண் குறித்து, நா கூசும் வார்த்தைகளால், சமூக வலைதளங்களில் அர்ச்சிக்கின்றனர், சிலர். இதைப் பார்த்த அந்த பெண், 'என்னை ஒரே நாளில் நட்சத்திரம் ஆக்கினீர்கள்; அடுத்த நாளே, கல் எறிகிறீர்களே ஏன்...?' என, எழுதினார்.படிப்படியாக உயரம் அடைகிறவர்கள், தவறும் போது விழும் அடி, சிறியதாகத் தான் இருக்கும். அதிலிருந்து மீள்வதற்கும், மீண்டு கடப்பதற்கும், மனம் பக்குவத்தை அடைந்திருக்கும். ஆனால், சட்டென அடைந்த உயரங்களில் இருந்து விழும் போது ஏற்படும் காயமும் ரணமும், எளிதில் மீள முடிபவை அல்ல.
அந்த மீளா துயரம் தான், சமூக வலை தளங்களின் பெரும்பாலான பயனாக இருக்கிறது. தனக்கு பிடிக்காதவர்களை பற்றி, தாறுமாறாக எழுதுவது, அதற்காக ஒரு குழுவை ஏற்படுத்தி, தொடர்ந்து அவதுாறு செய்வது என, சமூக வலைதளங்களின் முறைகேடுகள் ஏராளம்.ஆண்டாண்டு காலம் பேசியும், எழுதியும், பெரும் புகழ் சேர்த்த ஒரு கட்சியின் பெயரை, ஒற்றை இரவில் காலி செய்யவும், இந்த சமூக வலைதளங்களால் முடிகிறது. நேற்று முளைத்த காளான்களை, ஆழப்பதிந்த ஆலமரமென, கம்பீரமாக துாக்கி நிறுத்தவும் முடிகிறது.அப்போ, இது தவறான ஊடகம் தானே!பாரம்பரியத்திற்கு திரும்புகிறோம் என்ற பெயரில், போதிய அறிவும், பயிற்சியும் இன்றி, சில முயற்சிகள் செய்யப்படுவதால், உயிர் பலிகள் நிகழ்வதும், இதனால் இயல்பாகி விட்டது.வீட்டிலேயே சுகப்பிரசவம் என்பது தொடங்கி, இந்த நோய்க்கு இதை சாப்பிடுங்க... உடல் எடையை குறைக்க என, ஏராளமான, 'வீடியோ'க்கள், கருத்துகள், தகவல்கள், இதில் கொட்டிக் கிடக்கின்றன; கெட்ட மனதை மேலும் கெட வைக்கின்றன.ஒரு நோய்க்கு, நான்கு வித தீர்வுகளை பார்க்க நேரும் ஒரு சாதாரண மனிதனின் நிலையை நினைத்து பாருங்கள்... படிப்பது, பார்ப்பது, கேட்பது மட்டுமே அறிவல்ல... முறையான பயிற்சியும், முறையான அறிவும் அவசியம்.அப்படி முறையாக கற்றவர்களால் பகிரப்படுபவைகளையே, கணக்கில் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை புரிதல் அவசியம். ஆனால், சமூக வலைதளங்களில் பதிவிடுவோர், பெரும்பாலானோர் அதை செய்வதில்லை.தனி மனித புகழ் பாடுவதும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை, அன்பை, உற்சாகத்தை பரிமாறி கொள்ளும் வேளையில், சமூக அரங்கில் சொல்வதற்கு வாய் கூசும் சில வக்கிர சொற்கள், அகராதியில் இல்லா வார்த்தை பிரயோகங்களும், இங்கே சாத்தியமாகிறது.
தான் பெற்ற முதல் விருது, நிகழ்த்திய சாதனை, அடைந்த உயரம் என, ஏராளமான வீடியோ பதிவுகள் வந்து குவியும் அதே இடத்தில், ஒருவன் தன் தற்கொலையையும் சேர்த்தே நேரலை செய்கிறான்; அதையும் பார்க்க துணிகிறது, சில மனங்கள்.
ஏதோவொரு திசையில், யாரோ ஒருவர் செய்யும் தற்கொலையை எங்கோ அமர்ந்து பார்ப்பவனின் மனம், என்ன கொதி நிலையில் இருக்கும்... தன் மரணத்தை இப்படி பகிரங்கப்படுத்த விரும்பும் அந்த மனிதனின் உணர்வு நிலை, எப்பேர்பட்ட அழுத்தத்திற்கு ஆளாயிருக்கும்?இவை தான், இந்தசமூகவலைதளத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள்.கிழக்கில் இருப்பவனுக்கு, அவன் எதிர் திசை மேற்கு. மேற்கில் இருப்பவனுக்கு, அவன் எதிர் திசை கிழக்கு. இந்த இருவரிடமும் பொதுவாக, உனக்கு எதிர் திசை என்ன என, கேட்டு பாருங்கள்... அவனவன், அவன் கண்ட திசையை தான் சொல்வான். இதில் பொய் சொல்பவன் யார்?எனவே, இங்கே பதிவுகள் இடுபவர்களுக்கு என்றே உலகம் உண்டு. அதில் அவர் அனுபவத்தில், அவர் கற்றதை, பெற்றதை, விரும்பியதை, விரும்பி கொண்டிருப்பதை, இன்றைய சமூகமும், சூழலும் கொடுத்திருக்கும் தைரியத்தின் அடிப்படையில் பதிவு செய்ய முழு
சுதந்திரம் உண்டு.அதை விரும்புபவர்கள், அதை முன்னெடுத்து செல்லலாம்; விரும்பாதவர்கள் ஒதுக்கியிருக்கலாம். எதிர்வினை என்ற பெயரில் இங்கே நிகழும் அபத்தங்கள் களையப்பட வேண்டும்.அங்கதச்சுவை நம் மண்ணின் ஈரத்தோடு வேரோடி போயிருப்பது. நகைச்சுவை, கிண்டல், நையாண்டி இவைகளை, நவரசங்களுள் ஓர் ரசமாகவே கருதுபவர்கள் நாம். அச்சுவை அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சி தான் இன்றைய, 'மீம்'கள். நாட்டு நடப்பில் எவையெல்லாம் முக்கிய செய்திகளில் இடம் பிடிக்கிறதோ அவை, சுடச்சுட, மீம்களாக தயாராகி விடுவது ஆச்சர்யம்.தொலைகாட்சி நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், கல்லுாரி பரிதாபங்கள், பள்ளி பரிதாபங்கள் என, இவர்கள் செய்யும், அளப்பறைகளுக்கு அளவே இல்லை.
வாய் விட்டு சிரிக்க நேர்ந்தாலும், அந்த, மீம் உள்ளடக்கத்தில் இருப்பவர்கள், இதை பார்க்க நேர்ந்தால் அவரின் மனநிலை என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சி, இங்கு இருப்பதில்லை.இதுவே, சமூக வலைதளங்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமும் கூட!விருப்பமான நடிகைகளுக்கு, ரசிகர் மன்றம் ஆரம்பிப்பது முதல், தலைவர்கள், விளையாட்டு
வீரர்கள், சினிமா நட்சத்திரங்களின் பிறந்த நாட்களை கொண்டாடுவது என, இவர்கள் செய்யும், 'ஹாஷ்டேக்'களுக்கு அளவே இல்லை.
ஆனால், இவ்வாறு பரப்பப்படும் செய்திகளின் உண்மை தன்மை தான், இங்கு எழும் மாபெரும் கேள்வி.செய்தி பரிமாறும் செயலி களில் வந்து மலையென குவியும் காலை, மாலை, இரவு வணக்க வாழ்த்துகள், பொன்மொழிகள், '100 பேருக்கு பார்வேட் செய்யாவிட்டால்' என்ற மிரட்டல்கள், போலியான செய்திகள், திட்டமிட்டு பரப்படும் வதந்திகள் என, நம் கைகளின் வழியே கொட்டப்படும் வஸ்துகளிலிருந்து மீண்டெழவே முடியாது.ஓர் இரவில் எப்படி இந்த மாய யுகத்தில் நாம் சென்று சேர்ந்தோமோ, அதுபோல ஓர் இரவில் இதிலிருந்து வெளி வருவதென்பது சாத்தியமல்ல!எந்தவொரு பழக்கமும், அடிமைத்தனமும், நம்மை அது போல் ஒரே இரவில் விடுதலை செய்யாது என்பதை உணர வேண்டும்.மின்னஞ்சல் பார்க்க, மொபைல் போனை எடுப்போம். அது நம்மை, செய்தி பரிமாற்ற செயலிக்கு அழைத்துச் செல்லும். அப்படியே கொஞ்சம், முகநுால்... மெல்ல திரும்பினால் டுவிட்டர்... சட்டென குடும்பத்தோடு எடுத்த புகைப்படம் நினைவு வந்ததும், இன்ஸ்டாகிராம் என, நீளும்
பட்டியலில் இருந்து நீங்கள் மீண்டு வர, ஒரே தேவை, மனக்கட்டுப்பாடு!இதிலிருந்து மீள, ஒரு நாளில், நான்கு மணி நேரம் நீங்கள் இணையத்தை சமூக வலைதளங்களுக்காக பயன்படுத்தினால், அந்த நேரத்தை, ஒரு மணி நேரமாக குறையுங்கள்.நிஜத்தில் இல்லாத நிழலுலக நட்புக்கு, தொடர்புகளுக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தை நிஜத்தில் உங்கள் முன் அமர்ந்திருப்பவருக்கும், அமர விரும்புவர்களுக்கும் கொடுங்கள்; நண்பர்களை நேரில் சந்தித்து பேசுங்கள்.புத்தகம், பத்திரிகை வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துங்கள். நிச்சயம் உங்கள் மனம் உவக்கும் பழக்கம் உங்களிடமிருக்கும்; அதை வெளிக்கொணருங்கள். அதற்கென நேரம் ஒதுக்குங்கள். உங்கள் மூளையையும், மனதையும் எப்போதும் தரமான இயக்கத்திலேயே வைத்திருங்கள்.நம் தற்காலிக இன்பத்திற்காக, யாரையும் புண்படுத்தக் கூடாது என்ற குறைந்தபட்ச அறத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரு தகவலை, ஒரு செய்தியை பகிர்வதற்கு முன், அதன் உண்மை தன்மையை, ஆராய்தல் நம் அடிப்படை கடமை; பொறுப்பு.இணையத்தில் நாம் செல்லும் ஒவ்வொரு இடமும் தொழில்நுட்பத்தளத்தில் நாம் விட்டு செல்லும் கால்தடம். நாம் நினைக்கலாம், நாம் தனிமையில் இருக்கிறோம் என்று... எப்போதும் யாரோவொருவரின் கண்காணிப்பிலேயே இருக்கிறோம்.எனவே, தொந்தரவு இல்லாத, பிறர் மனதை துன்புறுத்தாத, எந்த நேரமும் இன்பம் தரவல்ல, பத்திரிகைகள், புத்தகங்கள் போன்ற கையால் எடுத்து படிக்கும் இன்ப நுகர்வில் மனதை செலவிடுங்கள்.
சமூக வலைதளங்கள், சமூகத்தை மாற்றப் போவதில்லை. மாறாக, கொதிப்பிலேயே வைத்திருக்கும்.எனவே, மன அமைதிக்கும், ஆரோக்கியமான சமூகத்திற்கும், கட்டாயம் விட்டொழிக்க வேண்டியது, சமூக வலைதள பதிவு அடிமைத்தனத்தை.விட்டொழிப்போம் இந்த வீணான பழக்கத்தை! எல்.கனகதுாரிகா சமூக ஆர்வலர்இ -- மெயில் kanaga.2412@gmail.com