விவசாய வளம் பெருக தண்ணீர் உதவட்டும்!

Added : ஆக 26, 2018
Advertisement

கேரளா வெள்ளம் அம்மாநிலத்தை உருக்குலைத்தது என்றாலும், இத்தடவை தமிழகத்தில், ஆவணி தொடக்கத்திலேயே மூன்று முறை மேட்டூர் அணை நிரம்பி வழிந்திருக்கிறது. காவிரி உபரி நீர் அதிக அளவு வருகை அதற்கு காரணம். சர்வ சாதாரணமாக, 1 லட்சம் கன அடி நீர் தொடர்ந்து பலநாள் வந்ததை, யாரும் எதிர்பார்த்து இருக்க முடியாது. ஆனால், கடைமடைப் பகுதியான பேராவூரணி உட்பட பல பகுதிகளுக்கு, காவிரி நீர் சென்றடையவில்லை. பொதுவாக, இவ்வளவு அதிகமாகத் தண்ணீர் திறக்கும் போது, 20 நாளுக்குள் தண்ணீர் செல்லவில்லை என்றால், இடைவெளியில் உள்ள வாய்க்கால்கள் துார்வாரப்படவில்லை என்பது அர்த்தமாகிறது.அதிக தண்ணீர் வரத்தில், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதலில் சிறு பயிர்கள், பருப்பு வகைகளை, பலரும் பயிரிட்டதாக, தகவல்கள் வருகின்றன. இதே அளவு தண்ணீர் வசதி தொடரும் பட்சத்தில், நிச்சயம் ஒரு போகம் நன்றாக நெல் விளைச்சல் இருக்கும்.அதே சமயம், கடும் வறட்சி கண்ட பூமியில், மழை இல்லாத காலத்தில் வரும் தண்ணீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவது இயல்பு. அத்துடன், நமக்கு பெய்ய வேண்டிய, வடகிழக்கு பருவமழை எங்கு அதிகமாக பெய்யும் அல்லது குறைவாகும் என்பதை இன்று மதிப்பிட முடியாது. தடுப்பணை மற்றும் தற்போது உள்ள அணைகளில் தண்ணீர் தேக்கம் குறித்து, புதிய அணுகுமுறைக்கு, தமிழக அரசு, கொள்கை முடிவுகளை எடுத்தாக வேண்டும். தமிழகம், அதிக சமவெளிப் பகுதியை கொண்டிருப்பதால், தடுப்பணை குறித்து தனித்துவ அணுகுமுறை தேவை.முக்கொம்பு அணை, 180 ஆண்டுகள் பழமை யானது என்பதால், லட்சக்கணக்கான கன அடி தண்ணீரை தொடர்ந்து சந்திக்க முடியாமல், அதன் மதகுகள் உடைந்துள்ளன. இதை ஆய்வு செய்வதுடன், தமிழகத்தில் உள்ள சிறிய, பெரிய அணைகளில் உள்ள மணல் திட்டுகள் அல்லது அதன் மதகுகள் குறித்த, கள ஆய்வை, பொதுப்பணித்துறை மேற்கொண்டு, அதற்கான தகவல்களை வெளியிட, அரசு முயற்சிக்க வேண்டும்.இந்த அணைகளை புதுப்பிக்கும் பட்சத்தில், அதற்கான, 'கான்டிராக்ட்' நடைமுறைகள் வெளிப்படைத்தன்மை கொண்டதாக அமைவது அவசியம்.'டெல்டா' பகுதியில் காவிரி ஆர்ப்பரித்து வருவது ஒரு புறம் இருக்க, பெரியாறு, வைகை அணையிலும் தண்ணீர் இத்தடவை, கணிசமாக வந்திருக்கிறது. கம்பம் பள்ளத்தாக்கு, உசிலம்பட்டி பகுதிகளில், 5,000 ஏக்கர், நெல் பாசன வசதி, இத்தடவை பெறுகிறது. அதுவும், உசிலம்பட்டி புதிய வாய்க்காலில் வைகைத் தண்ணீர் பாய்வது, அப்பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறது.மேற்குத் தொடர்ச்சி, வருஷ நாட்டில், மழை அளவுக்கதிகமாக பெய்ததால், வைகை அணை, 69 அடி நீர்மட்டத்தை எட்டியிருக்கிறது. வறண்ட வைகையை தொடர்ந்து பார்த்த மக்கள், இன்னமும், 100 நாளுக்கு அதில் தண்ணீர் ஓடும் என்பதை பார்த்து மகிழலாம். வாடிப்பட்டி, உசிலம் பட்டி கோட்டங்களில், இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் பயன் பெறும். அதே சமயம், சிவகங்கை மாவட்ட பகுதிகளில், 5,000 ஏக்கர், பாசன வசதி பெறும் என்ற தகவல் கூறப்பட்டிருக்கிறது.இதில், மானாமதுரை, பரமக்குடி ஆகிய பகுதி களில், குடிநீர் மட்டுமல்ல; இங்குள்ள கண்மாய்கள் வறண்டு புதராக இதுவரை காட்சி அளித்தன. இங்குள்ள விவசாயிகள், பருத்தி முதலியவை பயிரிட்டு, தொடர் வறட்சியை சந்தித்தனர்.மதுரையைத் தாண்டி, மானாமதுரை அருகே உள்ள, விவசாயக் கால்வாய் தண்ணீர், அருகில், விரகனுார், ராஜகம்பீரம் தாண்டி, பல சிற்றுார்களில் உள்ள கண்மாய்களில் பாயும். அதில், நடைபெறும் விவசாயத்தில், நெல் மகசூல், நன்கு இருக்கும். ஆனால், இக்கால்வாய் துவக்கத்தில், செல்வாக்கு மிகுந்த நபர்களுக்கு உள்ள வயல் பகுதிக்கு தண்ணீர் சென்றடையும் நிலை இருப்பது, அரசுக்கு தெரியும். அதைக் குறை கூறி பயன் என்ன?வைகை அணைத் தண்ணீரைத் திறந்துவிட்ட துணை முதல்வர், இப்பகுதி குறித்து எளிதாக ஆய்வு செய்யக் கூடியவர். இத்தடவை நிச்சயம், ராமநாதபுரத்தில் உள்ள, மார்நாடு பெரிய கண்மாய்க்கு, வைகை வெள்ளம் சென்றால், அது, தண்ணீர் இடையில் வீணாகவில்லை என்று அர்த்தமாகும். அத்துடன், இத்தண்ணீர் வரும் போது, சோழவந்தான் முதல், மதுரை வரை, குறைந்த பட்சம், ஆற்றுப்பரப்பில் மணல் சேரும் அளவைக் கண்டு, முறையாக தண்ணீர் வந்து சேர்ந்திருக்கிறதா என்றறியலாம்.இனி, வடகிழக்கு பருவமழை தொடங்கி, நல்ல மழை இருக்கும் பட்சத்தில், 'ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வைகை' என்ற பழைய மொழி உண்மையாகும்.

மொத்தத்தில், விவசாயிகள் துயர் நீங்க, இந்த தண்ணீர் வருகை உதவ வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X