தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் இன்று கூடுகிறது. அதில், கட்சியின் புதிய தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும், ஒருமனதாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒருமுறை, பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.இதன்படி, 2017ல், தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்த போது, கருணாநிதிக்கு, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், செயல் தலைவராக, ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.இந்த ஆண்டுக்கான, தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில், ஆக., 19ல் நடப்பதாக இருந்தது. ஆனால், ஜூலை, 27ல், கருணாநிதிக்கு ஏற்பட்ட திடீர் பாதிப்பால், காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதனால், அந்த பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.இம்மாதம், 7ம் தேதி, கருணாநிதி மரணம் அடைந்தார். அவர் மறைந்து, 30வது நாள் முடிந்ததும், செப்., 12ல், பொதுக்குழுவை கூட்டலாம் என, ஆலோசிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்க்க, ஸ்டாலின் மறுத்து விட்டார். அழகிரி, தனி அணி ஒன்றை உருவாக்கி, செப்., 5ல், கருணாநிதி மறைந்த, 30வது
நாளையொட்டி, சென்னையில் அமைதி பேரணி நடத்துகிறார்.அதற்குள்,
பொதுக் குழுவை கூட்டி, புதிய தலைவராகி விட வேண்டும் என, ஸ்டாலின்
திட்டமிட்டார். அத்துடன், நாளை மறுநாள், கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம்,
ஸ்டாலின் ஏற்பாட்டில் சென்னையில் நடக்கிறது.
இதில், தேசிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் பேசுகையில், ஸ்டாலினை, 'தி.மு.க., தலைவர்' என, குறிப்பிட வேண்டும்என்பதற்காகவே, இன்று பொதுக்குழுவை கூட்டிஉள்ளனர்.இன்று காலை, 9:00 மணிக்கு, கட்சி தலைமை அலுவலகமான, அறிவாலயத்தில், பொதுக்குழு கூடுகிறது. அதில், 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.முதலில், கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதும், தணிக்கைக் குழு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும், நேற்று முன்தினம், வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கு எதிராக, யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, கட்சியின் புதிய தலைவராக ஸ்டாலின், பொருளாளராக துரைமுருகன் பொறுப்பேற்கின்றனர். அவர்களை வாழ்த்தி, முக்கிய நிர்வாகிகள் மட்டும் பேச அனுமதிக்கப்படுகின்றனர்.
சீன பட்டாசான அழகிரி
மதுரை,: இன்று கூடும், தி.மு.க., பொதுக் குழுவில், ஸ்டாலின் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், ''கட்சியில் எங்களை சேர்க்கவில்லை என்றால், தி.மு.க., பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்,'' என, முன்னாள்மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவிற்கு பின், தன்னையும், ஆதரவாளர்களையும்,
கட்சியில் சேர்க்க வேண்டும் என, அவரது மூத்த மகன் அழகிரி போர்க்கொடி துாக்கினார். இதை, ஸ்டாலின் நிராகரித்தார்.இதையடுத்து, சென்னையில், செப்., 5ல் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் பேரணிக்கு, அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு, ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி:கருணாநிதி உயிருடன் இருந்தார் என்பதற்காகத் தான், இதுவரை அமைதியாக இருந்தோம். அவர் தற்போது இல்லாததால், கட்சியை காப்பாற்ற களத்தில் இறங்கியுள்ளோம். எங்களை கட்சியில் சேர்க்கவில்லை என்றால், தி.மு.க., பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். தொண்டர்கள் கேட்டுக் கொண்டதால், சென்னையில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.'பேரணியில், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்பரா?' என்ற கேள்விக்கு, ''உங்கள் யூகத்திற்கு பதில் இல்லை,'' என்றபடி, வேகமாக நடையைக் கட்டினார். இவரது பேச்சு, சரவெடியாக இருக்கும்; புதிய அறிவிப்பு ஏதும் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த அவரது தொண்டர்களுக்கு, இது, மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.'பின் விளைவுகள் என்ற வசனத்தை ஏற்கனவே சொல்லிட்டு தானே இருக்காரு... தலைவர் புதுசா ஏதாச்சும் சொல்வார்ன்னு பார்த்தா, சீன பட்டாசு மாதிரி, வெடிச் சத்தமே இல்லாம, பேட்டியை முடிச்சிட்டாரே...' என, ஆதரவாளர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (85)
Reply
Reply
Reply