தடம் அழிந்து போன தமிழர் விளையாட்டுகள் : இன்று தேசிய விளையாட்டு தினம்| Dinamalar

தடம் அழிந்து போன தமிழர் விளையாட்டுகள் : இன்று தேசிய விளையாட்டு தினம்

Added : ஆக 28, 2018
  தடம் அழிந்து போன தமிழர் விளையாட்டுகள் : இன்று தேசிய விளையாட்டு தினம்

மாலை முழுவதும் விளையாட்டு என வழக்கப்படுத்திக் கொள்ளுப் பாப்பா' என விளையாட்டின் வீரியத்தை வீதிதோறும் எடுத்துச் சொல்லிவிட்டு சென்றான் பாரதி. இன்றைக்கு வீதிகள் தான் இருக்கிறது; விளையாட்டுகள் போன இடம் தெரியவில்லை. நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகள் என்பவை வெறும் விளையாட்டு மட்டுமல்ல. நம் பண்பாட்டையும் எடுத்துச் சொல்லும் ஆவணம். தமிழன் எதை செய்தாலும் அதற்கு ஒரு காரண காரியம் இருக்கும். தமிழர் விளையாட்டுகளும் அது போலத்தான். வீரம், விவேகம், மகிழ்ச்சி, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, அறிவுத்திறன், சகிப்புத்தன்மை இவற்றினை கற்றுக் கொடுத்தது பாரம்பரிய விளையாட்டுகள்.கம்பு சுழற்றி கவி நடனம் புரிந்தான், மாட்டின் கொம்பு பிடித்து வீரத்தினை காட்டினான், கல்லைத்துாக்கி கல்யாணம் செய்தான். கபடி ஆடி மண்ணைத் தொட்டு வணங்கினான். கில்லி அடித்தான், கண்ணாமூச்சி ஆடினான், நொண்டியும் சடுகுடுவும்,சளைக்காமல் பந்தும் ஆடினான். தாயமும், பல்லாங்குழியும், தத்தித்தாவும் நீச்சலும் தமிழரின் மண் பேசும் சரித்திரங்களாகின. இவற்றினை இன்றைய சமுதாயம் ஏட்டில் படித்துக் கொள்ளலாம். ஆனால் ஆடிப்பாடி அனுபவிக்க முடியாதது வருத்தம் தரக்கூடிய செய்தியே.


உடலும் உள்ளமும்நமது பாரம்பரிய விளையாட்டுகள் உடலுக்கும், உள்ளத்திற்கும் மகிழ்ச்சியையும் உரத்தையும் கொடுத்தன. நோய்நொடி இல்லாத வாழ்க்கையை வாழ அந்தக்கால விளையாட்டுகள் வழிகாட்டின.மனதில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் அவை கற்றுக்கொடுத்தன. உடம்பு உரமேறியது.உள்ளம் உறவாடியது. மனித உடலின் வியர்வைத் துளிகள் மண்ணைத் தொட்டு நனைத்தன. கையும் காலும் அசைந்தாடின. உடலும் உள்ளமும் உறுதியாகின. நோய்கள் இல்லை, அதனால் மருத்துவமும் பார்க்கவில்லை. பாரம்பரிய விளையாட்டில் மன உளைச்சலும் மன அழுத்தமும் இல்லை. உடல் புத்துணர்ச்சி அடைந்தது.ஆடுபுலி ஆட்டம் என்பதொரு விளையாட்டு. இதனை ஆடுவதற்கு கணிப்பொறியும், கால்குலேட்டரும் தேவையில்லை. ஆனால் கூர்மையான அறிவு இருக்க வேண்டும். இந்த விளையாட்டை விளையாடினால் மதியால் எதையும் வெல்லலாம் என்ற உந்து சக்தி உள்ளத்தில் ஏற்படுவதை அனுபவித்து பார்க்க முடியும். தாயம், சொட்டாங்கல், பல்லாங்குழி போன்றவை பள்ளிப்படிப்பு கூட இல்லாதவர்களுக்கு கணக்குப் பாடத்தை கற்பித்து தந்தன.


வெற்றியும் தோல்வியும்வெற்றியும், தோல்வியும்சேர்ந்தது தான் விளையாட்டு. இதில் வென்றாலும் தோற்றாலும் அடுத்த ஆட்டம் நம்ம ஆட்டம்;ஜெயித்துவிடுவோம் என்ற தன்னம்பிக்கையை தமிழரின் விளையாட்டுகள் தந்தன. மறுபடி மறுபடியும் வாய்ப்புகளையும்,வாயிற்கதவுகளையும் திறந்துவிடும் விதிமுறைகள் நமதுபாரம்பரிய விளையாட்டில் தான் உள்ளது.ஒரு முறை தோற்றுவிட்டால் அடுத்த முறை வெற்றி பெறுவதற்கான சூட்சுமத்தை கற்றுக் கொடுத்திருக்கின்றன. ஒற்றைக்கால் நொண்டி அடித்தல் விளையாட்டு ஒருவருக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது. கண்ணில் துணியை கட்டி ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமும் தன்னம்பிக்கையை விதைக்கிறது.பம்பரம் சுழட்டலும், சடுகுடு ஓட்டமும், நீர் விளையாட்டுகளும் ஒவ்வொரு நிலையில் நின்று தன்னம்பிக்கை எனும் விளைநிலத்தில் நீர் பாய்ச்சி விளைய வைக்கிறது. வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு என்று காட்டிக்கொடுத்ததும் நாம் தானே.எதற்காக இதனை சொல்லி வைத்தனர். நம் விளையாட்டு விதிகளின்படி வென்றவர்கள் மட்டும் என்று யாரும் இல்லை. தோற்றவர்கள் மட்டும் என்று யாரும் இல்லை. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும். இந்த தன்னம்பிக்கையின் சூத்திரம் தான் பாரம்பரிய விளையாட்டுகள்.


சகிப்புத்தன்மைசகிப்புத்தன்மை என்னும் இந்த சொல்லின் பொருளே தெரியாமல் இந்தக்கால தலைமுறை அல்லல்பட்டுக் கொண்டுஇருக்கிறது. வீடு தொடங்கி வீதி வரைக்கும், கிராமம் தொடங்கி நகரம் வரைக்கும் எங்கும் சகிப்புத்தன்மை என்பது அரிது. அதனால் தான் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. ஆனால்பாரம்பரிய விளையாட்டுகள் சகிப்புத்தன்மையை கற்றுக் கொடுத்தது.விளையாட்டு விளையாட்டாய் பார்க்கப்பட்டது. யார் மீதும் யாருக்கும் கோபம் வராது. தோற்றுப் போய்விட்டால் பழிவாங்க திட்டம் தீட்ட மாட்டார்கள்.மன அமைதியும், சந்தோஷமும், வென்றாலும், தோற்றாலும், பிரகாசிக்கும் முகபாவனையும் நம் விளையாட்டுகள் சொல்லிக் கொடுத்த விதிமுறைகள். அதனை விளையாட மறந்து போன காரணத்தினால் தான் நாம் சகிப்புத்தன்மையை இழந்து விட்டோம்.


கூடி விளையாடுவோம்கூடி வாழ்ந்தால் கோடி நம்மை என்று உலகத்திற்கே உரக்கச் சொன்ன பரம்பரை நம் பரம்பரை. இதற்கான மையப்புள்ளி நம் பாரம்பரிய விளையாட்டில் ஆரம்பித்தது. நான்கு ஐந்து பேர் ஒரு குழுவாக இருந்து அவர்களுக்குள் ஒரு தலைமையை உருவாக்கி விளையாடுவது குழு விளையாட்டு. இதன்மூலம் அவர்களுக்குள் ஆரோக்கியமான புரிதலும், அன்பும் பரிமாறிக்கொள்ளப்படும். தனித்து நின்று வெற்றி பெறுவதை விட கூடி நின்று வெற்றி பெற்றுவிடலாம், என்ற ஆக்கப்பூர்வமான மனநிலையை இவ்விளையாட்டுகள் ஏற்படுத்திக் கொடுக்கிறது.கண்ணாமூச்சி, பந்தடித்தல், நொண்டி, கில்லி அடித்தல், பம்பரம், தாயம், பல்லாங்குழி, சடுகுடு, பூப்பறித்தல், சொட்டாங்கல், சரியாத் தவறா, சிறுதேர், நீர் விளையாட்டு, இளவட்டக்கல் துாக்குதல், மஞ்சுவிரட்டு, கோலிக்குண்டு அடித்தல், கபடி, ஊஞ்சல்கட்டி ஆடுதல் போன்ற விளையாட்டுகளும், இன்னும் பெயர் கூட அழிந்து போன பிற விளையாட்டுகளும் இளைய சமுதாயத்தினருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. காரணம் நாகரிக வளர்ச்சி; அதனால் தான் வீடியோ கேம், அலைபேசியில் மரண விளையாட்டு, கம்ப்யூட்டரில் விளையாட்டு என்று விளையாடிவிட்டு எட்டு வயதிலும், பத்து வயதிலும் தலைவலி, கண்தெரியவில்லை, மன அழுத்தம், துாக்கமின்மை போன்ற வியாதிகளையும், மரணங்களையும் விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம்.அன்றைக்கு தெருவில் விளையாடிய குழந்தைகளைப் பார்த்து சந்தோஷப்பட்டனர் பெற்றோர்கள். இன்றைக்கு வீதியில் விளையாட விட்டு எத்தனை பெற்றோர்கள் பார்த்து ரசிக்கிறார்கள். அதனை கவுரவக்குறைச்சலாக நினைக்கிறார்கள். வீடியோகேமிலும், அலைபேசியிலும் விளையாடினால் ரசிக்கிறார்கள்.அதனால் நாம் இன்று நம் பாரம்பரிய விளையாட்டுகளை மறந்து போக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டோம். தமிழரை அடையாளப்படுத்தும் விளையாட்டுகளை மீட்டெடுப்போம், தமிழர் பண்பாட்டை காப்போம்.-மு.ஜெயமணிஉதவி பேராசிரியர்ராமசாமி தமிழ் கல்லுாரிகாரைக்குடி. 84899 85231

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X