பெரிய அளவுல நடக்குது பேரம்... : பேராசிரியருக்கு பதவி வரும் நேரம்!| Dinamalar

பெரிய அளவுல நடக்குது பேரம்... : பேராசிரியருக்கு பதவி வரும் நேரம்!

Added : ஆக 29, 2018
Share
தோழியின் திருமணத்துக்காக, தோழிகள் பலரும் இணைந்து 'ஷாப்பிங்' போவதாக திட்டம்; எல்லோரும், மித்ராவின் வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருக்க, முன் கூட்டியே ஆஜராகியிருந்தாள் சித்ரா. மற்றவர்கள் வரும் வரை, இருவரும் 'டிவி' பார்த்துக் கொண்டே, டீ குடித்துக் கொண்டிருந்தனர்.''அக்கா...நம்ம சொன்னது மாதிரியே, கருணாநிதிக்கு தமிழ்த்திரையுலகம் சார்புல, கோயம்புத்துார்ல அமர்க்களமா
பேராசிரியர், பதவி, வரும் நேரம்,பேரம்,சித்ரா, மித்ரா

தோழியின் திருமணத்துக்காக, தோழிகள் பலரும் இணைந்து 'ஷாப்பிங்' போவதாக திட்டம்; எல்லோரும், மித்ராவின் வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருக்க, முன் கூட்டியே ஆஜராகியிருந்தாள் சித்ரா. மற்றவர்கள் வரும் வரை, இருவரும் 'டிவி' பார்த்துக் கொண்டே, டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

''அக்கா...நம்ம சொன்னது மாதிரியே, கருணாநிதிக்கு தமிழ்த்திரையுலகம் சார்புல, கோயம்புத்துார்ல அமர்க்களமா அஞ்சலி செலுத்திட்டாங்க...நல்ல கூட்டம், நிகழ்ச்சியும் நல்லா இருந்துச்சு'' என்றாள் மித்ரா.
''ஆமா மித்து...நான் தான் 'மிஸ்' பண்ணீட்டேன்; ஆனா, 'டிவி'யில பார்த்தேன்; கூட்டம் பிரமாண்டமா இருந்துச்சு!'' என்றாள் சித்ரா.

''ஆச்சரியம் என்னன்னா, பெரிய பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட் எல்லாரும் வந்திருந்தாங்க; அதை விட ஆச்சரியம்...இந்த நிகழ்ச்சிக்காக, யார்ட்டயும் எந்த வசூலும் பண்ணலையாம்; நம்ம ஊரு வி.ஐ.பி.,ங்க சில பேரு, 'நாங்க ஏதாவது செய்யணுமா'ன்னு கேட்டதுக்கும் வேணாம்னு சொல்லீட்டாங்களாம்'' என்றாள் மித்ரா.

''லோக்கல் ஏரியாவுல இருந்து தான், நிறைய கூட்டம் வந்திருக்கு; சிங்காநல்லுார் தொகுதியில மட்டும், வீடு வீடாப் போயி, அம்பதாயிரம் நோட்டீஸ் கொடுத்திருந்தாங்களாம்; எப்பிடியோ, எம்.எல்.ஏ., கார்த்திக், இந்த நிகழ்ச்சியில கொஞ்சம் 'ஸ்கோர்' பண்ணீட்டார்னு தான் சொல்லணும்!'' என்றாள் சித்ரா.

''அன்னிக்கு மதியம், அங்க வந்து பாத்த 'மாஜி' ஒருத்தரு, 'ஒரு ரெண்டாயிரம் பேரு வருவாங்களா...இத்தனை சேர் எதுக்குப் போட்ருக்கீங்க'ன்னு கிண்டலா கேட்டாராம்; சாயங்காலம் வந்த கூட்டத்தைப் பார்த்து, பொறாமையில 'பொங்கி'ட்டாராம்!'' என்றாள் மித்ரா.

''அது உள் விவகாரம்...வெளியில நடந்தது தெரியுமா...அன்னிக்கு அந்த நிகழ்ச்சிக்கு 'பைக்'ல வந்த பல பேரோட 'ஹெல்மெட்' காணாமப் போயிருச்சு. போலீஸ் பந்தோபஸ்து, அந்த அளவுக்கு தான் இருந்திருக்கு!'' என்
றாள் சித்ரா.

அடுத்தடுத்து 'டிங் டிங்' என்ற சப்தத்துடன் அலைபேசியில் வந்து விழுந்த 'வாட்ஸ் ஆப்' மேசேஜ்களைப் பார்த்த மித்ரா, சில 'மெசேஜ்'களை சித்ராவிடம் காண்பித்தாள்.

''அக்கா... போன வாரம், ஐ.ஏ.எஸ்.,களை மாத்துனதுல இருந்து, பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ராகிராம்னு எல்லா சோஷியல் மீடியாவுலயும் 'நோ ரிலீப் டு கோயம்புத்துார்'ங்கிற வார்த்தை தான், நம்ம ஊர்ல 'டிரெண்டிங்'ல இருந்துச்சு. இன்னும் சில பேரு, இதுக்குப் பின்னணியைப் பத்தியும் விளக்கமா
விவரிச்சிருந்தாங்க'' என்றாள் மித்ரா.

''நம்ம ஊர்ல ஒரு சில விஷயங்களுக்கு தீர்வே இருக்காது போல...இவ்வளவு முக்கியமான 'டிஸ்ட்ரிக்ட்'ல ரெண்டு வருஷமா, பி.ஏ.,(ஜி) போஸ்ட்டிங் காலியாக் கெடக்குது; எலக்ஷன் பி.ஏ.,வுக்கு 'அடிஷனல் சார்ஜ்' கொடுத்திருக்காங்க. அவரு...எவ்வளவு முக்கியமான மீட்டிங் நடந்தாலும், எந்த தகவலையும் எந்த டிபார்ட்மென்ட்டுக்கும் 'ப்ராப்பரா' சொல்றது இல்லியாம்'' என்றாள் சித்ரா.

''ஆமாக்கா...ஓணத்துக்கு உள்ளூர் விடுமுறை விடுற உத்தரவுல, முதல் நாள் காலையிலயே கலெக்டர் கையெழுத்துப் போட்டு கொடுத்துட்டாராம்; ஆனா, அன்னிக்கு நைட் எட்டு மணிக்கு தான், இந்த விஷயத்தையே வெளிய சொல்லீருக்காரு, இந்த ராஜகுமாரன்!'' என்றாள் மித்ரா.

காமெடி சேனலில், 'என் தங்கச்சியை நாய் கடிச்சிடுச்சுபா' என்று ஜனகராஜ் கத்திக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த சித்ரா, ''மித்து... தெரு நாய்த்தொல்லையை பத்தி, போன வாரம் தான, பேப்பர்ல போட்ருந்தாங்க; அதை நிரூபிக்கிறது மாதிரி, நம்ம ஊர்ல முக்கியமான ஆபீசரோட மனைவியையே நாய் கடிச்சிருச்சாம்; அப்புறம், நம்ம ஜி.எச்.,ல் இருந்து தான், பங்களாவுக்கு போய் ஊசி போட்ருக்காங்க!'' என்று விழிகளை விரித்துச் சொன்னாள்.

''ஜி.எச்.,பத்திப் பேசவும், அங்க நடந்த ஒரு குளறுபடி ஞாபகத்துக்கு வந்துச்சு...வெலிங்டன் ரெஜிமென்ட் சென்டர்ல இருந்து, மிலிட்டரிக்காரங்க 200 பேரு, ரத்தம் கொடுக்க விரும்புறாங்கன்னு, ஜி.எச்., 'டீன்' கிட்டப் பேசிருக்காங்க; அவர் அந்த வேலையை அங்க இருக்குற ஒரு டாக்டர்ட்ட ஒப்படைச்சிருக்காரு; அவரு மிலிட்டரிக்கே ஏகப்பட்ட கண்டிஷன் போட்டதுல, வெறுத்துப் போயி, பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு ரத்தம் கொடுக்குறதா முடிவு பண்ணீட்டாங்களாம்'' என்றாள் மித்ரா.

''ஜி.எச்.,ல கொடுத்தா, ஏழைகளுக்கு பயன்படும்; ரொம்ப 'ரேர் குரூப்' ரத்தமெல்லாம், அவுங்களால வெளியில காசு கொடுத்து வாங்க முடியாது; பிரைவேட் ஹாஸ்பிடலுக்குக் கொடுத்தா, அது காசிருக்கிறவுங்களுக்கு தான் கிடைக்கும்!'' என்றாள் சித்ரா.

''ரத்தம் மட்டுமா...பதவியும், துட்டு இருந்தால் தான் கிடைக்கும்...நம்மூரு யுனிவர்சிட்டியில, 'பொறுப்பு'ல இருந்த பல பேரைத் துாக்குனாலும், முக்கியமான பதவியில இருக்குற 'பொறுப்பு லேடி'யை துாக்கலைன்னு பேசுனோமே; இப்போ, அவருக்கு 'சப்போர்ட்'டா இருந்த செகரட்டரியையே மாத்தீட்டாங்க. இப்போ, அந்த பதவிக்கு நிரந்தரமா ஒருத்தரை நியமிக்க, ஒரு பெரிய நோட்டு அளவுக்கு பேரம் நடக்குதாம்'' என்றாள் மித்ரா.

''நான் கேள்விப்பட்டது என்னன்னா...கம்ப்யூட்டர் கொள்முதல்ல முறைகேடு நடந்ததா, அந்த டிபார்ட்மென்டோட தலைவி மேல 'கம்ப்ளைன்ட்' வந்துச்சே... அவுங்களுக்கு தான், இந்த பதவி உறுதியாயிருச்சுன்னு பேசிக்கிறாங்க. நிறைய்ய்யப்பேரு, 'நீங்க தான் அடுத்த ரிஜிஸ்ட்ரார்'ன்னு இப்பவே அந்த பேராசிரியருக்கு வாழ்த்துச் சொல்றாங்களாம்'' என்றாள் சித்ரா.

''இவுங்க தான், நம்ம 'கையூட்டு' புகழ் கனவான்ட, இந்த போஸ்ட்டிங்கை வாங்க, 60 லட்ச ரூபாய்க்கு பேரம் பேசுனதா, நான் கேள்விப்பட்ருக்கேன்'' என்றாள் மித்ரா.

''அப்போ கொடுக்கவும் இல்லை; வேலையும் முடியலை; இப்போ யார்ட்ட கொடுத்திருக்காங்கன்னு தெரியலை!'' என்றாள் சித்ரா.

மியூசிக் சேனலில், ஸ்ரீதேவியைப் பார்த்து, 'தேவி ஸ்ரீதேவி' என்று கமல் பாடிக்கொண்டிருந்தார். மித்ரா தொடர்ந்தாள்...

''ரிஜிஸ்ட்ராரைப் பத்திப் பேசவும், ரிஜிஸ்ட்ரேஷன் டிபார்ட்மென்ட் ஞாபகத்துக்கு வந்துச்சு...கணபதி எக்ஸ் சப்-ரிஜிஸ்ட்ரார் மேல, 'லேண்ட் கிராபிங்' கேஸ் போட்டதுல, சப்-ரிஜிஸ்ட்ரார்கள் எல்லாரும் கொதிச்சுப் போயிருக்காங்க''

''ஏன்...அவர் மேல மட்டுமா போட்ருக்காங்க. ஸ்கூல் நடத்துற கணவன், மனைவியை அரெஸ்ட்டே பண்ணீட்டாங்களே?''

''அக்கா...அந்த கேஸ்ல, போலி டாக்குமென்ட்டை வச்சு லோன் வாங்குனவரு, அதை ஆய்வு பண்ணாம கடன் கொடுத்த பாங்க் ஆபீசர், யார் மேலயும் கேஸ் போடாம, பாங்க் ஏலம் விட்டதை ஒன்றரை கோடி ரூபா கொடுத்து, ஏலம் எடுத்தவுங்க மேலயும், அதை பதிவு பண்ணுன சப்-ரிஜிஸ்ட்ரார் மேலயும் கேஸ் போட்ருக்காங்க. இது எந்த வகையில நியாயம்னு பதிவுத்துறையில கேக்குறாங்க?''

''நியாயமான கேள்வி தான்...இப்பல்லாம் 'லேண்ட் கிராபிங்' கேஸ் போடணும்னா, ஆளுங்கட்சியோட 'ரெகமண்டேஷன்' வேணும்னு சொல்லுவாங்களே?''

''இப்பவும் அதே மாதிரி 'இன்புளூயன்ஸ்' பண்ணுனதுல தான், இவுங்க மேல கேஸ் போட்டதா பேசிக்கிறாங்க!''

''அதே ஆளுங்கட்சி ரெகமண்டேஷன்ல ஒரு நல்ல வேலையும் நடந்திருக்கு; சூலுார் யூனிட் ஆபீஸ்ல, வெளியூர்க்காரங்களுக்கு எல்லாம் லைசென்ஸ் போட்டுக் கொடுத்த பிரேக் இன்ஸ்பெக்டரைப் பத்திப் பேசுனோமே...அவரை திருநெல்வேலி பக்கம் வள்ளியூருக்கு துாக்கி அடிச்சிட்டாங்க. அது தெரிஞ்சு, இங்க ஏற்கனவே வலுவா சம்பாதிச்சிட்டு, கடலுாருக்குப் போனவரு இங்க வர முயற்சி பண்ணுனாராம்; அதையும் ஆர்டர் போட்டு ரத்து பண்ணீட்டாங்களாம்!'' என்றாள் சித்ரா.

''அக்கா...ஆளுங்கட்சியில நடக்குற அதிகார மோதல்ல, துடியலுார்ல இருக்குற முக்கியமான கூட்டுறவு சங்கத்துக்கு தலைவர் தேர்தல் தள்ளிப் போயிட்டே இருக்காம்; ஏற்கனவே இருந்தவரை திரும்பவும் போடுறதுக்கு, ஆளுங்கட்சி வி.ஐ.பி., 'சப்போர்ட்'டாம்; ஆனா, எம்.எல்.ஏ.,ஆறுக்குட்டி, கடுமையா எதிர்க்கிறாராம்; அவரு ஆதரிக்கிறவரும், கட்சிக்காரர் இல்லியாம்; அதனால, கட்சிக்கு விசுவாசமான ஆளைப்போடுங்க'ன்னு கட்சிக்காரங்க கேக்குறாங்க!'' என்றாள் மித்ரா.

''இதே மாதிரி தான், அன்னுார்லயும் ஒரு மோதல்...அங்க ஒன்றியச் செயலாளர் இறந்து ஒன்றரை வருஷமாச்சாம்; இன்னமும் யாரையும் போடலை; மாவட்டம் ஒரு ஆளையும், 'சபா' ஒரு ஆளையும் 'ரெகமண்ட்' பண்றாங்களாம்; ஆனா, 'ரெண்டு பேருமே காசிருக்கிறவுங்க; கட்சியில சீனியர் இல்லை'ன்னு கட்சிக்காரங்க புலம்புறாங்க'' என்றாள் சித்ரா.

அடுத்த விவகாரத்தை ஆரம்பிப்பதற்குள், 'ஹே' என்ற சத்தத்தோடு, தோழிகள் பலரும் உள்ளே நுழைய, இவர்களின் அரட்டை முடிவுக்கு வந்தது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X