குழந்தைகள் இருக்கும் வீட்டில், கண்டிப்பாக உண்டியல் இருக்கும். அவர்களுக்கு சிறு வயதிலேயே சேமிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என, விரும்பும் பெற்றோர், உண்டியலைக் கொடுத்து, கிடைக்கும் பணத்தை அதில் போட வைப்பர்.பெரியவர்களுக்கு பணத்தட்டுப்பாடு வரும், மாத இறுதி நாட்களில், கைக்கொடுப்பது அந்த உண்டியலில் உள்ள பணம் தான்! சில சமயம் அந்தப் பணம், அந்தப் பிள்ளைகளுக்கு தேவையான ஏதாவது பொருளாக உருமாறும். சமீபத்தில், நாளிதழ் ஒன்றில் வந்த செய்தி அது... தமிழக சிறுமி ஒருத்தி, சிறுக சிறுக உண்டியலில் சேர்த்த பணத்தை, பெரிய மனுஷி தோரணையில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நிவாரணமாக அளித்தாள் என்கிறது, அந்த செய்தி. அவளை போல பல சிறுமியர், கேரள வெள்ள நிவாரணத்திற்கு தங்கள் சேமிப்பை வழங்கினர். தமிழக அரசும், ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தை, கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்க அரசாணை வெளியிட்டு உள்ளது.இதைத் தவிர, தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், ஓட்டல்கள், ஜவுளிக்கடைகள் என, பல தரப்பு மக்களும், போட்டி போட்டு, தங்களால் இயன்ற பணம், பொருள், உதவிகளை கேரள மக்களுக்கு அளிக்கின்றனர்.கேரளாவில் வெள்ள பாதிப்பு இருந்த போது, அதன் எல்லைக்கு அருகில் உள்ள தமிழக மாவட்டங்களில் இருந்து, சப்பாத்தி, பூரி தயாரித்து அனுப்பினர். இதற்கெல்லாம் காரணம், தமிழ் மக்கள், கேரளாவை அடுத்த மாநிலமாக நினைக்கவில்லை; சகோதர மாநிலமாக நினைப்பது தான்! ஆதி தமிழகம், சேர, சோழ, பாண்டிய நாடு என, பிரிக்கப்பட்டிருந்தது. அதில், அன்றைய சேர நாடே, இன்றைய கேரளா. மூவேந்தர்களின் சாதனைகளும் நம் ஒட்டுமொத்த தமிழரின் சாதனையாகவே பார்க்கப்பட்டது. வில், புலி, மீன் என, மூன்று நாடுகளுக்கும், மூன்று கொடிகள் இருந்தாலும், நாமெல்லாம் தமிழர், ஒரே தொப்புள் கொடி உறவு தான் என்ற எண்ணம், மூன்று நாட்டு மக்களுக்கும் அப்போது இருந்தது.அந்த காலத்தில், மூன்று நாட்டு மக்களும், சர்வ சாதாரணமாக மூன்று நாடுகளுக்கும் சென்று வந்தனர். புலவர்களும் பாகுபாடு இல்லாமல், எல்லா மன்னர்களையும் புகழ்ந்து பாடி, பரிசுகள் பெற்றனர். கடாரம் கொண்ட சோழனையும், கல்லணை கட்டிய சோழனையும் போற்றி புகழ்ந்தவர்கள், இமயவரம்பனின் தலையில் கல்லை ஏற்றி, கண்ணகிக்கு சிலை வடித்த சேர மன்னனையும் புகழ தவறவில்லை.தமிழகத்தில் இருக்கும் பலருக்கு, கேரளாவில் குல தெய்வ கோவில் உள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தின் தென்காசி, செங்கோட்டை, வீரகேரளம்புதுார் தாலுகாக்களில் வாழும் மக்களில் பலருக்கு, கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள, குளத்துபுழா சாஸ்தா தான் குல தெய்வம்!இன்றைய கேரள மக்களால் பேசப்படும் மலையாள மொழியின் மாதா, தமிழ் மொழி தான். தமிழும், சமஸ்கிருதமும் கலந்து உருவானது தான் மலையாளம் என்பர்.அது மட்டுமின்றி, தென் தமிழகம் முழுவதும் இருந்த திராவிடர்கள், தாங்கள் பேசுவது, திராவிட மொழி என்று கூறி, ஒன்றாகத் தான் இருந்தனர்.அதை விட, இந்திய மக்கள் அனைவரும், பாரத தாயின் தவப்புதல்வர்கள் என்ற எண்ணத்துடனும் வாழ்ந்தனர்; ஒன்றாக சேர்ந்து தான், ஆங்கிலேயர்களை விரட்டினர். தமிழகத்தில் உள்ள மக்கள் காசிக்கு போவதும், அங்குள்ள மக்கள் இங்குள்ள ராமேஸ்வரத்திற்கு வருவதும், ஆதி காலம் தொட்டு, நடைமுறையில் இருக்கும் வழக்கம் தான்! சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில், கடைத்தெருக்களில் எத்தனை தமிழர் டீக்கடைகள் இருந்தாலும், மலையாள, 'சேட்டன்' கடையில் டீ வாங்கி அருந்துவதை, பெருமிதமாக கருதுபவர்கள் நம்மவர்கள்.இந்தியா சுதந்திரம் அடைந்த போது, தனித்தனி சமஸ்தானங்களாக இருந்தவற்றை ஒன்றாக சேர்த்து, ஒரே தேசமாக மாற்றினர்; நிர்வாக வசதிக்காக, தனித்தனி மாநிலங்களாக பிரித்தனர். அதன் பின், மொழிவாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதனால், மனித மனங்கள் பிரிந்து விடும் என, அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை.மாநிலங்களை பிரித்ததும், மனித மனங்களும் பிரிந்து விட்டன. இது தான் எதிர்பாராத பின் விளைவு... தமிழகத்தில் இருந்து, கேரளா, தனி மாநிலமாக பிரிந்து சென்றாலும், கல்யாணம் ஆனதும், தனிக்குடித்தனம் சென்ற தம்பியாகவே, கேரளத்தைப் பார்த்தது தமிழகம்.இயற்கையின் அத்தனை வளங்களையும் பரிபூரணமாக பெற்று, கடவுளின் தேசமாக, பசுமை நிறைந்த கேரளாவைப் பார்க்கும் போதும், தமிழர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியே!இந்தியாவின் முன் மாதிரியாக, முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாறிய போதும் சரி... தன் இளைய சகோதரரின் வளர்ச்சியைப் பார்த்து பெருமிதம் கொள்ளும் மூத்த சகோதரரின் மன நிலையே, தமிழகத்தில் இருந்தது.கார்த்திகை மாதமானால், மாலை போட்டு, 40 நாட்கள் விரதமிருந்து, சபரிமலைக்கு செல்லும் தமிழர் கூட்டம், நாளுக்கு நாள் பெருகுகிறதே தவிர குறையவில்லை. தங்களது தமிழ் கடவுள் முருகன் மீது இருந்த அதே பக்தியை, அய்யப்பன் மீதும் தமிழர்கள் கொண்டுள்ளனர்.கேரளாவில் கூட அத்தனை பேருக்கு, அய்யப்பன் என, பெயர் இருக்காது. தமிழகத்தில் வீட்டுக்கு வீடு, அய்யப்பன்கள் உண்டு. கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில், வீடு தோறும், 'சாமிமார்களும், அய்யப்பன்மார்களும்' தோன்றி விடுவர்.குருவாயூருக்கு போகும் நபர்களை கணக்கிட்டால், தமிழர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும். அது போல, தமிழகத்தில், மலையாளிகள் இல்லாத கிராமமே கிடையாது. அவர்களை தமிழர்கள், தங்கள் சொந்த சகோதரர்களாகவே பார்க்கின்றனர். கேரள மக்களுக்கு, அரிசியில் ஆரம்பித்து, அனைத்து உணவு பொருட்களும் தமிழகத்திலிருந்து தான் சென்று கொண்டு இருக்கிறது. என்ன தான் நாம், மலையாளிகளை சகோதரர்களாக நினைத்தாலும், அந்த மாநிலத்தில் அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள், நம்மை பிரித்து வைக்கவே முயற்சிக்கின்றனர். எனக்கு தெரிந்த ஒரு பெண்ணின் அம்மா, அவளிடம், 'நீ புத்திசாலி... சுமாராக படிக்கும் பிள்ளைகளிடம் பேசக்கூடாது' என கூறி, அவள் மனதில் ஒரு வித, உயர்வு மனப்பான்மையை ஏற்படுத்துவார்.'ஆஹா... இவர்களை விட நாம் சிறந்தவள்... இவர்களிடம் நாம் பேசுவது, பழகுவது, நமக்கு இழுக்கு...' என்ற மனப்பான்மையில், அந்தப் பெண், சுமாராகப் படிக்கும் பிற பிள்ளைகளிடம் பேசவே மாட்டாள். அதே மாதிரி தான், கேரள அரசியல்வாதிகளில் சிலர், அம்மாநில மக்களிடம், 'நாம் படித்தவர்கள்; திறமைசாலிகள்; தமிழர்கள் நம்மை விட குறைந்தவர்கள்' என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டனர். கரைப்பார் கரைத்தால், கல்லும் கரையும் அல்லவா... அதனால், அரசியல்வாதிகளால் மனம் மாறிய கேரள மக்களில் சிலர், தமிழர்களை மட்டமாக நினைக்க ஆரம்பித்தனர். 'பாண்டிக்காரன்' என்றும், 'பட்டி' என்றும் கூறி, மனதளவில் சந்தோஷப்பட்டுக் கொண்டனர். மலையாள சினிமாவில் கூட, தமிழர்களை, கொஞ்சம் இழிவாகத் தான் காண்பிப்பர். சகோதர மனப்பான்மையோடு தமிழகம் இருந்தாலும், அவர்கள் நம்மிடம் விரோதம் பாராட்டி கொண்டு தான் இருக்கின்றனர். அரபிக்கடலில் வீணாக போய் கலக்கும் முல்லைப் பெரியாற்றின் நீரை, அணையில் தேக்க முயன்ற போது, அணை உடைந்து விடும் என, 'கிராபிக்ஸ்' தயாரித்து, கேபிள், 'டிவி'களில் காண்பித்து, விஷம பிரசாரம் செய்தனர். தமிழகத்தில் விளையும் அரிசி, காய்கறிகளில் அதிகளவு பூச்சிக்கொல்லி இருப்பதாக, அவ்வப்போது பீதியை கிளப்பி, தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றனர். அன்னம் இட்ட வீட்டில் கன்னம் இடுவது போல, தமிழகத்தை அவர்கள் குப்பைத் தொட்டியாக தான் பாவிக்கின்றனர். அங்குள்ள அபாயகரமான மருத்துவ கழிவுகளை, தமிழகத்தில் கொட்டிக் கொண்டு இருக்கின்றனர்.ஆனாலும், கேரளாவில் வெள்ளம் வந்து, மக்கள் தவித்தப் போது, நம் மக்கள் பாராமுகம் காட்டவில்லை. கேரளாவில் அவதிப்படும் ஒவ்வொரு சகோதர - சகோதரிகளுக்காகவும் தமிழர்கள் துடித்தனர். பெண்களுக்கு தேவையான, 'சானிடரி நாப்கின்' முதற்கொண்டு, என்ன பொருள் தேவைப்படும் என, யோசித்து யோசித்து சேகரித்து அனுப்பி வைத்தனர். எல்லை மாவட்டங்களில் உள்ள தமிழர்கள், மீட்புப் பணிக்கு உதவச் சென்றனர். இவை ஒவ்வொன்றையும் கவனித்த மலையாளிகள், 'தமிழர்கள் மீது தவறான எண்ணம் கொண்டிருந்தோமே... அவர்களைப் போல உண்மையான உள்ளம் கொண்ட அண்டை மாநிலத்தவர் கிடையாது' என, எண்ண துவங்கியுள்ளனர்; தமிழகம் மற்றும் தமிழர்கள் மீது கொண்டிருந்த பார்வையை மாற்றத் துவங்கியுள்ளனர். இதுவரை மட்டமாக, ஏளனமாக நினைத்தவர்கள், தமிழக மக்களின், அன்பு நெஞ்சங்களை உணர ஆரம்பித்திருக்கின்றனர். தங்களது மன மாற்றத்தை, 'வாட்ஸ்ஆப், டுவிட்டர், பேஸ்புக்' போன்ற சமூக ஊடகங்களில், பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர். ஊர் ரெண்டு பட்டால் தானே, கூத்தாடிக்கு கொண்டாட்டம்... குழம்பிய குட்டையில் தானே, மீன் பிடிக்க முடியும்... அதனால், 'வெள்ளத்திற்கு காரணம், தமிழக அரசு தான்' என, குண்டை துாக்கி போட்டுள்ளது, கேரளா. 'முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை, 136 அடியாக பராமரித்திருந்தால், கேரளாவில் அநேக மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்காது' என, உச்ச நீதிமன்றத்திலேயே பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்துள்ளது, அந்த மாநில அரசு. தமிழக மக்களின் பாச உணர்வைக் கண்டு, மனம் மாறிக் கொண்டிருக்கும் கேரள மக்களின் மனதில், அந்த மாநில அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் மூலம், மறுபடியும் கசப்பை ஏற்படுத்த முயன்றுள்ளது. மறுபடியும் அவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால், தமிழக சகோதரர்கள், நடந்த எல்லாவற்றையும் மறந்து, முதல் ஆளாக உதவி செய்ய முன் நிற்பர். கேரளாவுக்கு மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா என, எந்த மாநில மக்கள் துயரில் துடித்தாலும், தமிழர் நெஞ்சங்கள் தாங்காது. அந்த துயரை துடைக்க, முதலில் நீளும் கை, தமிழனின் கையாகத் தான் இருக்கும். ஏனென்றால், இரவில் பயணம் போகும், முகம் தெரியாத வழி போக்கர்கள் துாங்க வேண்டும் என்பதற்காக, வீடுகளின் வெளிப்புறத்தில் திண்ணை வைத்து கட்டியவர்கள் நம்மவர்கள்; மண்ணில் ஈரம் இல்லா விட்டாலும், மனதில் ஈரம் இருப்பவர்கள். யார் என்ன கெடுதல் செய்தாலும், அவற்றை மறந்து, உதவி செய்ய முதல் ஆளாக நிற்பவர்கள், தமிழர்கள். இந்த உண்மையை கேரள மக்கள் தாமதமாக புரிந்து கொண்டாலும், இது தான் எங்களின் பூர்வீக குணம் என்பதை தமிழக மக்கள் உணர்த்தி விட்டனர். இந்த குணத்துடன் என்றும் இருப்போம்; எவ்வுயிருக்கும் தீங்கு நேரா வண்ணம் காப்போம்!
-எஸ்.வாகைச்செல்வி
சமூக ஆர்வலர்
இ - மெயில்:vagaiselvi@gmail.comAdvertisement